தெரு நாய்
தெரு நாய் மாதிரி புகைப்படம்
சிறப்புக் களம்

நாய்கள் ஜாக்கிரதை: தெரு நாய்கள் கடித்து அதிகரிக்கும் மரணங்கள் - புள்ளி விவரங்கள் சொல்வதென்ன?

PT WEB

குரைக்கிற நாய் கடிக்காதுன்னு சொல்லுவாங்க. ஆனால், குரைத்துக் கொண்டே கூடிநின்றி கடித்துக் குதறும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. தெருவில் ஒன்றிரண்டாக காணப்பட்ட தெரு நாய்கள், கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது. உணவுக்காக தெரு நாய்கள் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்தாலே நமக்கு குலை நடுங்கும்.

street dogs

தெருக்களில் நாய்களை பார்ப்பதே அரிதாக இருந்த காலம்

நம்ம ஊருக்கு நாய் பிடிக்கிற வண்டி வரட்டும் மொதல்ல ஒன்னயத்தான் பிடிச்சுக் கொடுக்கணும்னு ஒரு படத்துல செந்தில்ட கவுண்டமணி சொல்லுவாரு. அவர் சொன்னது காமெடி என்றாலும் அதில் அர்த்தம் இருந்தது. தெருக்களில் நாய்களை பார்ப்பதே அரிதாக இருந்த காலத்தில் கூட உள்ளாட்சி அமைப்புகளின் சார்பாக தெருவில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வண்டி வரும். அப்படி நாய்களை பிடித்து, தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆனால் விலங்குகள் நல வாரியம், Peta வந்த பின்பு தெருவில் திரியும் நாய்களை பிடித்துச் சென்று கருத்தடை செய்து விட்டார்கள். ஆனால், இப்ப அதுவும் கிடையாது.

இந்நிலையில் சமீபத்தில் பஞ்சாப்பில் உள்ள கபுர்தலா மாவட்டத்தில் உள்ள பஸ்சன் கடிம் கிராமத்தை சேர்ந்த பாரி தேவி என்பவர் தனது கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Dog

கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்பு தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு:

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் மகாராஷ்டிராவில் 3.5 லட்சம் நாய்க்கடி வழக்குகளும், தமிழ்நாட்டில் 3 லட்சம் நாய்க்கடி வழக்குகளும், ஆந்திராவில் 1 லட்சம் நாய்க்கடி வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேபோல் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்திற்கு பின்பு தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து 6 கோடியாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில், நாய் கடித்து உண்டாகும் ரேபிஸ் நோயால் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இது உலகின் நாய்க்கடி வழக்குகளில் 36 சதவீதம் ஆகும். ஒரு பிட்புல் நாய் தனது எஜமானியை கடித்துக் கொன்ற சம்பவமும் நடைபெற்றுள்ளது. அதேபோல் பள்ளி சென்று வீடு திரும்பிய 12 வயது சிறுமியை தெரு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.

ரேபிஸ் இறப்புகளில் இந்தியா முதலிடம்:

உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, உலகிலே நிகழும் அதிக ரேபிஸ் இறப்புகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதில், 30 முதல் 60 சதவீதம், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாகும். ஜனவரி 2022 முதல் ஜூலை 2022 வரையிலான 7 மாத காலத்தில் 14.50 லட்சத்துக்கும் அதிகமானோர் விலங்குகள் கடித்து பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியிருக்கும் என அஞ்சப்படுகிறது.

Dogs

2030 ஆம் ஆண்டுக்குள் Rabies நோயை நாட்டிலிருந்து ஒழிக்கும் திட்டம்:

இதற்கிடையே வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் Rabies நோயை நாட்டிலிருந்து ஒழிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் அரசு அளித்த தகவலின்படி, 2019 ஆம் ஆண்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை, சுமார் 1.2 கோடியாக இருந்தது. இதில், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட் லாக்டவுன் காலத்தில் தெருநாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெறி நாய் கடித்து ரேபிஸ் நோயால் பதிக்கப்பட்ட ஒரு நபர் தண்ணீரை கண்டு அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டார். கடைசியாக அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர்:

சுகாதார அமைச்சகம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில், கடந்த 2018 ஆம் ஆண்டில் 75,66,467 பேரும், 2019-ல் 72,69,410 பேரும். 2020-ல் 47,580,41 பேரும், 2021-ல் 32,35,595 பேரும். 2022-ல் 21,80,185 பேரும். 2023-ல் 27,59,758 பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2018 ஆம் ஆண்டில் 7,70,979 பேரும், 2019-ல் 8,31,044 பேரும். 2020-ல் 7,66,988 பேரும், 2021-ல் 3,23,190 பேரும் 2022-ல் 3,64,210 பேரும். 2023-ல் 4,04,488 பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

statistics

இன்று பாராளுமன்ற கேள்வி நேரத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், தெருநாய்கள் பிரச்னை குறித்து பேசியுள்ளார். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தொடர்ந்து பெருகிவரும் தெரு நாய்களை கொல்ல வேண்டாம். அவைகளை பிடித்துச் சென்று கருத்தடை செய்து வந்தாலே அதன் எண்ணிக்கையை குறைக்கலாம் என்கின்றனர் சாமானிய மக்கள். நாய்களின் எண்ணிக்கையை குறைத்தால் மட்டுமே பொதுமக்களும், பள்ளி மாணவ மாணவிகளும், தெருவில் விளையாடும் குழந்தைகளும் அச்சமின்ற பாதுகாப்பாக நடமாட முடியும். இதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ளுமா?...