பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது முதுமொழி. ஆனால், தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த 24 வயதேயான ஷேக் உசைன், சாரைப் பாம்பு முதல் ராஜநாகம் வரை பாம்புகளை லாவகமாகப் பிடித்து மீட்பதில் கைதேர்ந்தவராக திகழ்கிறார்.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் குடியிருப்பு, விவசாய நிலங்கள், மக்கள் புழங்கக்கூடிய இடங்களில் சுற்றித் திரியும் பாம்புகளை வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினரின் அனுமதியோடு பிடித்து வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு விடும் சேவையை செய்து வருகிறார் இவர்.
குறிப்பாக ராஜநாகம், கண்ணாடி விரியன் உள்ளிட்ட மிகக் கவனமாக கையாளக்கூடிய பாம்புகளை மீட்பதற்கு வனத்துறையினர் ஷேக் உசைனை தான் முதலில் அழைப்பார்கள். கடந்த ஆறு ஆண்டுகளில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டிருக்கிறார்.
பாம்புகளை கொல்லக்கூடாது. அவைகளை பாதுகாப்பது நம் கடமை..’ என்று பாம்புகள் குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்கள், மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து ஷேக் உசைன் நம்மிடம் கூறுகையில், ‘’மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் இருப்பது சகஜமானது தான். ஆனால் மக்கள் அச்சமிகுதியால் ஒரு பாதுகாப்புக்காக பாம்பை பார்த்தவுடனே கையில் கிடைத்ததைக் கொண்டு அடித்து கொன்று விடுவார்கள். அப்போது தான் எனக்கு தோன்றியது, பாம்பும் ஒரு உயிர் தானே. அதை ஏன் இப்படி கொடுரமாக கொல்ல வேண்டும். அதுவும் இந்த உலகில் வாழ உரிமையுள்ளது என்று பாம்புகளை பாதுகாக்க முடிவு செய்தேன்.
பாம்புகள் விவசாயத்திற்கு மறைமுகமாக பெரும் உதவி செய்கின்றன. விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தக் கூடிய எலிகளை பாம்புகள் கட்டுப்படுத்துகின்றன. ஒரு சாரைபாம்பு ஆண்டுக்கு 2000-க்கும் மேற்பட்ட எலிகளை உட்கொள்கிறது. அதனால் தான் சாரைப் பாம்பு விவசாயிகளின் நண்பனாக பார்க்கப்படுகிறது.
பாம்புகள் மனிதர்களுக்கு நன்மை பயக்கும் ஒரு உயிரினம். பாம்பினங்கள் அழிந்தால் இயற்கை சமநிலை மாறி, இன்று வெட்டுக்கிளிகளைப் போல் நாளை எலிகளும் பெருங்கூட்டமாக வேளாண் பயிர்களை கபளீகரம் செய்யும் சூழல் நேரலாம்.
கேரளா மக்கள் பாம்புகளோடு இணைந்து வாழும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். அங்கே வீடுகளை சுற்றி பாம்புகள் சர்வ சாதாரணமாக உலாவும். மக்கள் அதை தொந்தரவு செய்வதில்லை.
இயற்கையில் பாம்புகள் மிகுந்த கூச்ச சுபாவம் உடையவை. மனிதனின் இடையூறு இல்லாமல் எந்த ஒரு பாம்புகளும் மனிதனை தாக்குவதில்லை. அது மனிதர்கள் காலடிச்சத்தத்தை கேட்டால் விலகவே நினைக்கும். நாம் பாம்புகளை தெரியாமல் மிதிக்கும் போதோ அல்லது அடிக்க முற்படும் போது மட்டும் தான் அது மனிதர்களை தாக்குகின்றன.
இந்தியாவில், 276 வகை பாம்புகள் உள்ளன. பாம்புகளில், நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகிய நான்கு மட்டுமே விஷமுள்ளவை; மற்றவை விஷமற்றவை. பாம்புகளை கொல்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். பாம்புகள் வன உயிரின சட்டம், யானை மற்றும் புலிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, பாம்புகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்கிறது. எனவே ஊருக்குள், குடியிருப்புக்குள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.