சிறப்புக் களம்

ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாரா ஸ்டாலின்? இல்லை காவிரியை காக்க நினைக்கிறாரா?

ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாரா ஸ்டாலின்? இல்லை காவிரியை காக்க நினைக்கிறாரா?

webteam

அரசியல் என்பது ஒரு யுக்தி. அதை சரியாக செய்பவர்கள் அரசியலில் வெற்றியடைந்துவிடுகிறார்கள். அதைதான் இன்றைக்கு ஸ்டாலின் செய்திருக்கிறார். முறைப்படி அவர் அறிக்கை வாசித்துவிட்டு கலங்கரை விளக்கத்திற்கு வந்து அறப்போர் நடத்தியிருந்தால் அது சப்பென்று முடிந்திருக்கும். அவர் அதை சஸ்பென்ஸ் கொடுத்ததன் மூலம் போராட்டத்தின் பலம் கூடியிருக்கிறது. இதையும் அதிமுக வழக்கம் போல் ஆட்சி கவிழ்ப்பிற்கான சதி என கடந்துவிட முயற்சிக்கிறது. அடுத்த அரசு விழா வரை பொருத்திருந்துவிட்டு கடந்தக் கால போராட்டத்திற்கு எல்லாம் ஒட்டுமொத்தமாக திமுகவை குற்றம் சுமத்திவிட்டு அமைதியாக பணி முடிந்த மனநிறைவோடு அடுத்த நாள் முதல்வர் பழனிச்சாமி செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு புறப்பட்டுவிடுவார். போகட்டும். அவருக்கான அசைன்மெண்ட் அது மட்டும்தான்.

ஸ்டாலினின் இந்தப் போராட்டத்தை அதிமுக வழக்கமான ஒரு அணுகு முறையாகவே எடுத்து கொண்டுள்ளது. அவர்களுக்கு தேவை அம்மா ஆட்சி நீடித்து நிலைத்திருக்க வேண்டும். அப்படி என்னதான் அம்மா ஆட்சியின் சாதனை என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் வாசித்த அறிக்கைக்கும் தமிழ்நாட்டில் நிறைவேறிய திட்டங்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பதை ஆளும் கட்சிக்கு மட்டுமே வெளிச்சம். 

இன்றைய போராட்டம் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர், “பல்வேறு விதங்களில் அம்மாவின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து பார்த்துவிட்டு அது முடியாமல் இப்போது காவிரி பிரச்னையைக் கையில் எடுத்திருக்கிறார் ஸ்டாலின்” என்கிறார். மேலும் அவர் “நாங்கள் எவ்வளவோ காலமாக போராடிக் கொண்டிருக்கிறோம், அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு இப்போதுதான் ஸ்டாலின் களத்தில் குதித்திருக்கிறார்” என்று குற்றம் சுமத்திருக்கிறார். மேலும் கற்களை வைத்து தாக்குதல் நடத்திருப்பதால் கற்காலத்திற்கு போய் உள்ளது திமுக என்றும் கூறியிருக்கிறார். அதாவது ஜெயக்குமார் சொல்ல வருவது என்ன? அதிமுக வன்முறைக்கு எதிரான கட்சி என்பதைதான். 


அதிமுகவின் தலைவர் ஜெயலலிதா கொடைக்கானல் பிளசண்ட்ஸ்டே ஹோட்டல் வழக்கில் சிறைக்கு சென்ற போது அதற்கு துளியும் சம்பந்தமில்லாத ஒரு வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டது. தருமபுரியில் இலக்கியம்பட்டி அருகே கோவை வேளாண்மை கல்லூரி மாணவிகளான கோலிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய மூன்று பேர் சாம்பலாகி அந்தத் தீயில் குளிர்க் காய்ந்தது யார்? என்பதையும் அவர் கொஞ்சம் திரும்பி பார்த்து பதில் சொன்னால் நன்றாக இருக்கும். அதிக காலம் ஒன்று ஆகிவிடவில்லை. 2000த்தில் தான் இந்த சம்பவம் நடந்தது. அப்படி வன்முறையில் ஈடுபட்ட அதிமுகதான் இன்றைக்கு வன்முறை பற்றி வகுப்பு எடுத்து வருகிறது. 

அதைவிட கொடுமை ஆண்டு தோறும் அதன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டத்தற்குகூட மறைமுகமாக மிரட்டல் விடுவதாக அப்பெண்களின் பெற்றோர்கள் குற்றம் சுமத்திருந்தனர். அதன் தடையமே இருக்கக்கூடாது என பேருந்து மோதி எரிந்த புளிய மரத்தையே சுத்தமாக துடைத்து எரிந்துவிட்டார்கள். இன்றைக்கு வன்முறை பற்றி பாடம் நடத்தும் அதிமுக அந்த வன்முறைக்கு ஒரு வருத்தக் கூட தெரிவிக்கவில்லை. ஜெயலலிதாவிற்கு அப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது என்பதுகூட தெரியுமா என்பதுகூட நமக்கு தெரியாது. ஏனென்றால் அந்தளவுக்கு அவர் மெளனமாக அதை கடந்து போனார்.

இந்தமுறை குன்ஹா தீர்ப்பில் ஜெயலலிதா ஜெயிலுக்குப் போனதுகூட தமிழகம் எவ்வளவு அமைதிப்பூங்காவாக இருந்தது தெரியுமா? ஜெயலலிதாவின் கைதிற்காக ஒட்டுமொத்த தமிழகமே முடக்கப்பட்டது. ஒரு தகவல் தொடர்புக்கு கூட வழியில்லை. அதில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம் தமிழகத்தை அதிமுக எந்தளவுக்கு வன்முறையில்லாமல் பாதுக்கதது என்பதை.

காவிரி என்பது பலரும் ஏதோ நீர்ப் பிரச்னையை போல நினைக்கிறார்கள். காவிரி நதி படுகையை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்த சாட்டிலைட் வரைபடங்கள் அந்த நதி இரண்டாயிரம் வருடங்களாக தமிழகத்தில் நடைபோட்டுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டிகிறது. காவிரிப்பூம்பட்டினம் என்பதும் அதையொட்டிய வாழ்க்கை என்பது தமிழர் வாழ்வோடு ஒட்டிப் பிறந்தது நதிக்கரை நாகரிகம். அதற்கு அணைக் கட்டி ஆற்று பாசத்திற்கு சாவு மணி அடிக்க நினைப்பது அதையொட்டி வாழ்ந்த ஒரு நாகரிகத்தையே அழிப்பதாகும். ஆனால் அதை எல்லாம் அதிமுக புரிந்து கொள்ளப் போவதில்லை. அவர்களுக்கு தேவை அம்மா ஆட்சி.

ஒரு விஷயம் நமக்குப் புரியவே இல்லை. தமிழ்நாட்டில் அத்தனை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் சாவு மணி அடித்து விட்டு அம்மா ஆட்சியை வைத்து என்ன சாதிக்கப் போகிறார்கள்? அதிகாரம் என்பதைதான் மக்கள் வழங்குவார்கள். அந்த அரசியல் அதிகாரத்தை வைத்து ஆகவேண்டியதை கவனிக்க வேண்டியது ஆட்சியாளர் பொறுப்பு. ஆனால் இங்கே என்ன நடக்கிறது. சட்டத்திற்கு கர்நாடகா கவலைப்படுவதாக தெரியவில்லை. மத்திய அரசு என்று ஒன்று இந்தியாவில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஏதோ அயல்நாட்டு பிரச்னைபோல காவிரி பிரச்னையை மத்தியில் ஆளும் கட்சி கருத்திக் கொண்டிருக்கிறது.

இதில் பாஜக, காங்கிரஸ் என இரண்டிற்கும் ஒரு வேறுபாடும் இல்லை. இதுவரை மோடி பேசவில்லை. அவர் நாட்டை ஆளுகிறார். அடுத்தும் ஆள விரும்புகிறார். மேலும் அவருக்கும் கர்நாடகம் தேவைப்படுகிறது. அதைபோலதான் காங்கிரஸ். இருக்கும் மாநிலத்தையும் அது இழந்துவிட்டால் மரியாதை இருக்காது. பெரிய பெரிய பிரச்னைக்கு எல்லாம் குரல் எழுப்பும் நியாயவாதி ராகுல் இந்தக் காவிரி பிரச்னைக்கு வாயை திறக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஸ்டாலின் நடத்தும் போராட்டத்தில் திருநாவுக்கரசர் வந்து உட்கார்ந்திருக்கிறார். இளங்கோவன் ‘ராகுல் கருத்துக்கூற வேண்டிய அவசியம் இல்லை’ என்றார். அவர் பேச வேண்டாம் என்றால் பிறகு யார் பேச வேண்டும்? இன்னொரு பக்கம் வழக்கம் போல என்ன பேசுகிறோம் என்பதை தெரியாமலே ‘காவிரி தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் ஓடி வர போகிறாள்’ என்கிறார் தமிழிசை. அவரது வாக்குறுதிகளை எல்லாம் தமிழகம் நம்புவதாக தெரியவில்லை.

ஆகவேதான் மனசாட்சியோடுதான் நீங்கள் பேசுகிறீர்களா? என மக்கள் கேட்கிறார்கள். ஏன் கொந்தளிக்கிறார்கள். ரோட்டிற்கு இறங்கிப் போராட்டுகிறார்கள். அதிகாரத்தையும் ஆளும் வர்கத்திற்கு கொடுத்துவிட்டு வீதியிலும் இறங்கி மக்களே போராட வேண்டும் என்றால் உண்மையில் தமிழகத்தை ரஜினி சொன்னதைப் போல ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாதுதான். அப்படிதான் போய் கொண்டுள்ளது காவிரி நிலைமை. 

தமிழ்நாட்டில் சரியான தலைமையில்லை என்கிறார்கள் பலர். ஆனால் உண்மையை சொன்னால் தமிழ்நாட்டிற்கு தலையெழுத்தே சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இயற்கையின் நீதிபடி மேட்டில் இருந்து பள்ளத்திற்கு தண்ணீர் வர வேண்டும். ஆனால் அரசியல் சதியால் தண்ணீர் தரைக்கு வராமல் மலையிலேயே நிற்கிறது. இது அநியாயம் இல்லையா? இயற்கைக்கு முரணானது இல்லையா? அதற்காக போராடினால் அம்மா ஆட்சியை கலைக்க முடியாது என்கிறார் ஜெயக்குமார். 

ஜெயக்குமார் சொல்வதைபோல அதிமுக ஆட்சியை அழகு கட்டிலில் உட்கார வைத்து பார்க்க ஸ்டாலின் என்ன அதிமுக தொண்டரா? அவர் அதிமுக ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என வீதி தோறும் முழுங்குகிறார். வீட்டுக்கு அனுப்பட வேண்டும் என ஊர் தோறும் குரலை உயர்த்துகிறார். அவரது நடவடிக்கை ஒரு எதிர்க்கட்சியாக சரியே. அதிமுக மத்தியில் பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறார்கள். மாநிலத்தில் பலம் வாய்ந்த கட்சியாக கூறிக்கொள்கிறார்கள். ஆனால் என்ன இலாபம். ஒரு பயனும் இல்லையே? தம்பிதுரை மோடியை சந்திக்கப் போனால் மரியாதை இல்லை. அவருக்கு அபாயிண்ட்மெண்ட் இல்லை. மோடி ஸ்கூட்டி வழங்க தமிழ்நாட்டிற்கு வருகிறார். அவரிடம் முதல்வர் காவிரியை கேட்கிறார். அதற்கு அவர் பதில் கூட சொல்லாமல் போகிறார். அவர் என்ன பங்களாதேஷ் பிரச்னையையா சொன்னார். தமிழ்நாட்டின் தலையாய பிரச்னை காவிரி பற்றி கேட்கிறார். அதற்கும் மெளனம் தான். அப்போதே தெரிந்துவிட்டதே, இவர்கள் மத்திய அரசிற்கு அழுத்தம் எப்படி தருகிறார்கள் என்பது?

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் “அம்மா இருந்திருந்தால் நிலைமையே வேறு. அனைத்து சட்ட உத்திகளையும் அரசியல் அஸ்திரங்களையும் பயன்படுத்தி, நினைத்ததை சாதித்திருப்பார்” எனக் குறிப்பிட்டுள்ளார். கூடவே அவர் “இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தோற்று அரசியலமைப்பு சட்டமும் தோற்றுவிட்டது” என்றும் விளக்கம் அளித்துள்ளார். அவர் நாடாளுமன்றத்தில் தற்கொலை செய்துகொள்வோம் என்று சொன்னதற்கு ஏதாவது அர்த்தம் இருந்ததா? அவையில் ஒரு உறுப்பினர் கொலை மிரட்டல் வைத்தும் அது குறித்து பிரதமர் வாய்த் திறந்தாரா? அதற்கு தனியே விளக்கம் தெரிவிக்க தேவையில்லை. இவரை போலவேதான் தம்பிதுரையும். “ராஜினாமா செய்வது பிரச்னைக்கு தீர்வாகாது” என்கிறார். ராஜினாமா தீர்வு இல்லை என்றால் வேறு என்ன தீர்வு சொல்லுங்கள்? அழுத்தம் தருவதா?

இந்த விவகாரத்தில் உண்மையில் ஸ்டாலினின் பங்கு என்ன? ஒரு எதிர்க்கட்சியாக அவர் செய்ய வேண்டியது ஏராளம். ஆனால் அவர் அளவாகவே செய்திருக்கிறார். ஆளும் கட்சி தனது கடமைகளை செய்யாமல் இருக்கும் போது ஒரு எதிர்க்கட்சி அந்த இடத்தை இட்டு நிரப்ப வேண்டும். சொல்லப்போனால் ஆளும் கட்சிக்கு ஈடாக அது கடைமையாற்ற வேண்டும். அப்போதுதான் நாட்டில் ஜனநாயகம் தலைத்தப்பும். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தக்க தருணத்தில் தமிழகம் தழைக்க போராட்டத்தின் வழியே உயிர்த்தண்ணீர் விட்டிருக்கிறார் ஸ்டாலின்.

அதற்காக அவரிடம் நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தீர்கள் என கேட்பது என்ன முறை. காவிரி விவகாரம் நீதிமன்றத்தில் இப்போதுதான் ஒரு முடிவை நெருங்கியுள்ளது.  நீதிமன்றத்திற்கு இந்தப் பிரச்னையை கொண்டு செல்ல இறுதிவரை கருணாநிதி விரும்பவே இல்லை. பேச்சு வார்த்தைகள் மூலமே வழியை கண்டடைய வேண்டும் என்று அவர் வாதிட்டார். ஆனால் சட்டப்படிகளில் ஏறி அரசாணை வரை வாங்கினார் ஜெயலலிதா. அதனால் என்ன பயன்? இதுவரை நீதிமன்றத்தின் எந்தத் தீர்ப்பையும் கர்நாடக முழுமையாக நிறைவேற்றியதாக தெரியவில்லை. 


வாட்டாள் நாகராஜ் காவிரியை தங்களுக்குதான் சொந்தம் என நீட்டி முழங்குகிறார். ஆனால் குடகு மலையில் இருந்து வேறு குரல் கேட்கிறது. எங்களை தனி மாநிலமாக அறிவியுங்கள் நாங்கள் தண்ணீர் தருகிறோம் என்கிறார்கள். குடகுக்கும் தமிழ்நாட்டிற்கு ஆயிரம் கால உறவு உண்டு. அதன்படி பார்த்தால் தாய்க் காவிரி குடகுக்கு தான் சொந்தம். அப்படி சொல்லி கர்நாடகாவுக்கு காவிரியை தராமல் தடுத்தால்? கர்நாடகாவின் நிலமை என்ன ஆகும்? அவர்கள் நீதிமன்றம் போவார்களா இல்லையா? அதைதானே தமிழ்நாடு செய்திருக்கிறது. இது ஒரு நீர்ப் பிரச்னை. அதற்காக நீண்டு கொண்டேதான் போக வேண்டும் என மத்திய அரசு நினைக்குமானால் இதே நிலைமை நீடிக்காது. அரசியல் கணக்குகள் மாறும். காவிரி தானாக ஒருநாள் வரும். அப்படி வரவழைக்கப்பட்டால் இந்தியாவில் ஒருமைப்பாடு கேள்விக்குள்ளாகும். நாட்டை நாம் நதிகளால் இணைத்து வைத்திருக்கிறோம். அதை மனதில் வைத்து அரசாங்கம் நடக்க வேண்டும். அதான் முறை; நியாயம். ஆதார் மூலம் நாட்டை இணைப்பதைவிட்டுவிட்டு நதிகள் மூலம் நாட்டை இணையுங்கள் மோடி அவர்களே. அப்போது உங்களை நாளைய தலைமுறை வரலாற்றில் வைத்து வாழ்த்தும்.