சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 100 ஆவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சூழலில், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றியவை என்ன? நிறைவேற்ற வேண்டியவை என்ன என்று பார்க்கலாம்.
கடும் நிதிப்பற்றாக்குறை, கடன்சுமை, உச்சத்தில் கொரோனா பெருந்தொற்று. பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் ஊரடங்குக்கு மேல் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய சூழலில்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த மே 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'
முதலமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் தனித் துறை உருவாக்கப்பட்டு, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு என்ற இலக்கில் தீர்வு காணப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 4,57,645 மனுக்கள் பெறப்பட்டு 2,29,216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா நிவாரணத்தொகையான அரிசி அட்டைதாரர்களுக்கு தலா 4,000 ரூபாய் 2 தவணைகளாக வழங்கப்பட்டுள்ளது.
- ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
- அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்பட்டதுடன், இந்த திட்டத்தில் திருநங்கைகளும் பயனடைந்துவருகிறார்கள்.
- வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்பு இந்த கூட்டத்தொடரிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
- கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், முன்களப் பணியாளர்கள் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
- சொல்லாத அறிவிப்பாக இருந்தாலும், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- அ.தி.மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடன் சுமையை சீர்செய்ய பொருளாதார உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று அளித்த வாக்குறுதி படி நோபல் பரிசு பெற்ற வல்லுநர்களை உள்ளடக்கிய பொருளாதார உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
- பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டநிலையில், பெட்ரோல் வரியில் 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
- கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதிப்படி, நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன
- 100 நாட்கள் வேலைத் திட்டம், 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக மத்திய அரசை பட்ஜெட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது
- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு தகுதியான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் படி முதல்கட்டமாக 216 பேருக்கு நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
- சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிலுவையில் உள்ளது.
- அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும் என்ற வாக்குறுதி நிலுவையில் உள்ளது.
- சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா சூழலால் கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்றம் தற்காலிகமாக கூடிவரும் சூழலில், இந்த அறிவிப்பு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
- நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும். கிராம நத்தத்தில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் நிலுவையில் உள்ளன.
- ஏழை மக்கள் பசி தீர, முதல் கட்டமாக 500 இடங்களில் 'கலைஞர் உணவகம்' அமைக்கப்படும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணியமர்த்தி கால முறை ஊதியம் வழங்கப்படும்.
- கலைஞர் காப்பீட்டு திட்டமும், வருமுன் காப்போம் திட்டமும் மேம்படுத்தப்படும் என்ற வாக்குறுதிகள் நிலுவையில் இருக்கின்றன.
- நீட் தேர்வை ரத்து செய்ய, முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று கூறியநிலையில், ஆணையம் அமைத்து கருத்து கேட்கப்பட்டுள்ளது.
- தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த திட்டங்கள் செயலாக்கம் அமைச்சகம் உருவாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.