சிறப்புக் களம்

ஸ்பீல்பெர்க் படத்தை மறுத்த ஸ்ரீதேவி!

webteam

மறைந்துவிட்டார் ஸ்ரீதேவி. மாரடைப்பு அவரை அள்ளிச்சென்றுவிட்டது. திரையுலகம் சந்தித்திருக்கிற பெரும் இழப்பு இது.

ஸ்ரீதேவி பற்றிய தெரியாத தகவல்கள் சில:

0) தமிழில் இருந்து இந்திக்குச் சென்ற ஸ்ரீதேவிக்கு முதலில் மொழி பிரச்னை. அப்போது அவருக்கு டப்பிங் கொடுத்தவர், நாஸ் என்ற நடிகை. 

0) ’ஒரு கைதியின் டைரி’ படத்தை இந்தியில் ’ஆக்ரி ரஷ்தா’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்  கே.பாக்யராஜ். இதில் அமிதாப் ஹீரோ. ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி ஹீரோயின்கள். இதில் ஸ்ரீதேவிக்கு டப்பிங் பேசியவர் இந்தி நடிகை ரேகா. இவர் நடிகர் ஜெமினி கணேசனின் மகள்.

0) இந்தியில் முதலில் சொந்தக் குரலில் ஸ்ரீதேவி டப்பிங் பேசி நடித்த படம், யஷ் சோப்ராவின் ’சாந்தினி’ (1989).

0). ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ஹாலிவுட் படமான, ஜுராஸிக் பார்க் (1993) படத்தில் ஸ்ரீதேவியை சிறு வேடத்தில் நடிக்கக் கேட்டார்கள். அப்போது இந்தி படங்களில் இரவு பகலாக நடித்துக் கொண்டிருந்ததால் கால்ஷீட் பிரச்னை. நடிக்க முடியாமல் போய்விட்டது ஸ்ரீதேவிக்கு.

0). இந்திக்கு ஸ்ரீதேவி சென்ற நேரத்தில் அவருக்கும் ஜெயப்பிரதாவுக்கும்தான் கடும் போட்டி. இருவரும் நேருக்கு நேராக சந்தித்தால் கூட பேசிக்கொள்ள மாட்டார்கள். இது இந்தி இன்டஸ்ட்ரி அறிந்த ஒன்று. ’மக்ஸத்’ (1984) என்ற இந்தி படத்தில் ராஜேஷ் கண்ணாவும் ஜீதேந்திராவும் ஹீரோக்கள். ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி ஹிரோயின்கள். இரண்டு ஹீரோக்களும் இவர்கள் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக படப்பிடிப்பின்போது ஒரே அறையில் இருவரையும் தள்ளி பூட்டிவிட்டனர். அரை மணி நேரம் கழித்து அறையை திறந்தால் இருவரும் வெவ்வேறு திசையில் ஆளுக்கொரு சேரில் அமர்ந்திருந்தார்கள்.

0). ஸ்ரீதேவியின் பெரியப்பா, ஜனதா கட்சியைச் சேர்ந்த மீனம்பட்டி ராமசாமி நாயுடு 1977-ல் சிவகாசி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர். 

0). இதே தொகுதியில் 1991-ல் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த சஞ்சய் ராமசாமி, ஸ்ரீதேவி சகோதரியின் கணவர். சஞ்சய், பிரபல நீதிபதி ராமசாமியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.