சிறப்புக் களம்

தோனியைவிட அதிகம் சம்பாதிக்கலாம் வாங்க: அரிய படிப்புக்கள்

தோனியைவிட அதிகம் சம்பாதிக்கலாம் வாங்க: அரிய படிப்புக்கள்

webteam

ப்ளஸ் டு தேர்வுகள் நடைப்பெற்று கொண்டிருக்கின்றன. அடுத்து என்ன படிக்கலாம்? இந்தக் கேள்வி இளசுகள் வயிற்றில் பட்டாம்பூச்சியைப்போல வட்டம் அடிக்க ஆரம்பித்திருக்கும். அருகில் இருப்பவர்களை; விஷயம் தெரிந்தவர்களை இப்போதே உங்கள் பெற்றோர் விசாரிக்க தொடங்கி இருப்பார்கள்? ‘பரீட்சை எப்படா முடியும் என காத்திருந்த பசங்க முடிந்த அடுத்த நொடியே மட்டையை
எடுத்து கொண்டு கிரெளண்ட்டிற்கு கிரிக்கெட் ஆட கிளம்பிவிடுவார்கள். விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவனை அவனுக்கு சம்பந்தமே இல்லாத படிப்பில் தள்ளி விடுவது எவ்வளவு கொடுமை? அந்தக் கொடுமைக்கு குட்பை சொல்கிறார் நம் கல்வியாளர். ஜாலியா விளையாடிக் கொண்டே படிக்கலாம் வாங்க பாஸ்..!

"இங்க விளையாட்டுக் கல்வி சம்பந்தமான சரியான விழிப்புணர்வு இல்லை சார். விளையாட்டுக் கல்விதுறையின் கீழ் இயங்கக்கூடிய Lakshmibai National University of Physical Education  இந்தப் பல்கலைக்கழகத்தில் நான்காண்டுகளுக்கான பேச்சுலர் ஆஃப் பிசிக்கல் எஜிகேஷன் கோர்ஸ் இருக்கிறது. இதில் பனிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் யார்வேண்டுமானாலும் சேரலாம். இந்தப் பல்கலைக்கழகம் குவாலியரில் இருக்கிறது. இங்கே படித்து முடித்தால் மத்திய அரசு கீழ் இயங்கக்கூடிய நிறுவனங்களான இண்டியன் ஆயில் போன்ற கம்பெனிகளில் வேலைக்கு சேரலாம். இதைத்தவிர ஸ்போர்ஸ் கோட்சிங் படிக்கலாம். ஸ்போர்ஸ்ட் சைகாலஜி படிக்கலாம். இண்டர்நேஷனல் ரெஃப்ரி படிக்கலாம். இப்படி மாணவர்களுக்கு எதில் விருப்பமோ  அந்தத் துறையை தேர்ந்தெடுத்து ஸ்பெஷலைஸ்டு பண்ணலாம். இந்திய அளவில் மிகச் சிறந்த ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிடி இது. 

இதை போல பாட்டியாலாவில் இருக்ககூடிய Netaji Subhas National Institute of Sports இல் சேரலாம். தங்கல் படத்தில் இடம்பெற்ற மிகச் சிறந்த நிறுவனம். இங்கே Bchelor of physical education(B.P.Ed) சம்பந்தப்பட்ட பல படிப்புகள் உள்ளன.திரும்ப தெளிவாக சொல்கிறேன். இவை எல்லாமே மத்திய அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள். இதை தவிர IIM இல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் என்று தனியாக சில படிப்புகள் இருக்கின்றன. இந்தப் படிப்பை முடித்தவர்கள்தான் ஐ.பி.எல். போன்ற மேட்சுக்கு திட்டம் வகுப்பவர்கள்.  

தோனி ஆடுகிறார் என்றால் இந்தப் படிப்பை படித்து முடித்தவர்கள் தான் அவரை நிர்வகிப்பார்கள். எப்படி பால் போடவேண்டும்? எப்படி எதிர் தரப்பை கையாள வேண்டும்? அதை போல விஸ்வநாதன் ஆனந்த் போன்ற எல்லா விளையாட்டுக் கலைஞர்களை இவர்கள்தான் கையாளுவார்கள். தோனி பத்து கோடி வாங்கினால் அதில்  25 சதவீதம் தொகை இந்த மேனேஜர்களுக்கு போய்விடும். ப்ளையரைவிட அதிகமாக சம்பாதிக்க கூடியவர்கள் இவர்கள். இஞ்ஜினியர் டாக்டரை விட கோடிக்கணக்கில் சம்பாதிக்க கூடிய துறை ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட்.” என எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே போகிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.  இதிலும் மதிப்பெண் போராட்டங்கள்
இருக்கிறதா?

“நிச்சயம் மார்க் பிரச்னைகள் இருக்காது. சின்ன வயதில் இருந்தே விளையாட்டில் எப்படி சாதித்திருக்கிறார்கள்? விளையாட்டை பற்றிய
விழிப்புணர்வு எப்படி உள்ளது? எல்லா தகுதியும் விளையாட்டில் எப்படி மிளிர்கிறார்கள் என்பதை பொறுத்தே கணக்கிடப்படும். தமிழ்நாட்டில் ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டி என தனியாக பிரித்ததே தப்பு. அறிவியல் துணையில்லாமல் மாணவன் விளையாட்டில் சாதிக்க முடியாது.

வெளிநாட்டில் மிகச்சிறந்த ஒரு பவுலர் இருக்கிறார் என்றால் அவர் எப்படி பால் போடுகிறார்? அவர் உடல் விசை எப்படி செயல்படுகிறது
என்பதை எல்லாம் அறிவியல் பூர்வாக ஆராய்ந்து நிரூபிக்க கற்றுத் தருகிறார்கள். மெண்டல் ஃபிட்நஸ் பற்றி புரிந்துகொள்ள மாணவன்
மனோநிலை சம்பந்தமான பாட அறிவையும் கற்றாக வேண்டும். இதை சேர்த்து படிக்காமல் விளையாட்டு கல்வியை தனியாக பிரிந்து போதித்தால் இந்தத் துறை உருப்படவே முடியாது” என்கிறார் நெடுஞ்செழியன். மேலும் மத்திய அரசு சார்ந்த படிப்புகள் பற்றி தெரிந்துக் கொள்ள இவரின்  indiacollegefinder.org என்ற வலை தளத்தை மாணவர்கள் மேயலாம். விளையாட்டுத் துறையில் பல சாதனையாளர்களை உருவாக்கிய பயிற்சியாளர் நாகராஜ் என்ன சொல்கிறார்?

“சென்னை பல்கலைக்கழகத்தில் B.P.Ed, M.P.Ed போன்ற படிப்புகள் இருக்கின்றன. இதை படிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு இருக்க வேண்டும். கூடவே விளையாட்டு சம்பந்தமான சாதனை புரிந்திருக்க வேண்டும்.தமிழகம் முழுக்க 13 கல்லூரிகளில் இதற்கான படிப்புகள் இருக்கின்றன. டிகிரி மூன்றாண்டுகள் முடித்த கையோடு மேலும் இரண்டாண்டுகளுக்கான படிப்புகள் இருக்கின்றன.  B.P.Ed, படித்தவர்கள் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு உடற்பயிற்சி ஆசிரியராக போகலாம். ப்ளஸ்டுவுக்கும் காலேஜூக்கும்  M.P.Ed தேவை. பல யுனிவர்சிடிகளீல் யோகா படிப்பு, ஜிம் பயிற்சியாளர் படிப்பு, பிட்நாஸ் படிப்பு என பல படிப்புகள் இருக்கின்றன. எம்.பி.ஏ.வில் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் இருக்கிறது.இந்தப் படிப்புகளுக்கு அரசு சார்ந்த துறை வேலை வாய்ப்புகள் இல்லை. ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலைகள்  கொட்டிக்கிடக்கின்றன. டிப்ளமோ இன் ஸ்போர்ட்ஸ் கோட்சிங் என தனிப் படிப்பு பெங்களூர், கொல்கத்தா, பாட்டியாலாவில் இருக்கிறது. இதை படிக்க வேண்டுமென்றால் தேசிய அளவில் மூன்று முறையும் மாநில அளவில் மூன்று முறையும் ஏனைய விளையாட்டில் மெடல்
வாங்கி இருக்க வேடும். கூடவே இளங்கலைப்படிப்பையும் முடித்திருக்க வேண்டும். இந்த டிப்ளமோ முடித்தால் மேம்பாட்டு ஆணையங்களில் பணி கிடைக்க வாய்ப்புகள் அதிகம்” என்கிறார் நாகராஜ்.

“அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை தேடாமல் மாணவர்கள் சொந்தக் காலில் நிற்ககூடிய தைரியத்தை கொடுக்க கூடியது இந்தப்
படிப்புகள். தனியார் பள்ளிகள், கல்லூரிகள் பெருகி கிடக்கும் காலத்தில் இந்தப் படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு” என்கிறார் விளையாட்டுக்கான பாடத்திட்டங்களை உருவாக்கியதில் பெரும் சாதனை புரிந்த நவராஜ் செல்லையாவின் வழித்தோன்றல் சாக்ரடீஸ்.