இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் தற்போது பிரபலமாகி வரும் விளையாட்டு ஃபிட்ஜெட் ஸ்பின்னர் .
கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலில் அழுத்திப்பிடித்து சுற்றுவதுதான் இந்த விளையாட்டு. இந்த ஸ்பின்னர் டைட்டானியம், துருப்பிடிக்காத எஃகு, காப்பர், ப்ளாஸ்டிக் என குறிப்பிட்ட சில உலோகங்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. தற்போது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபல விளையாட்டுப்பொருளாக பார்க்கப்படும் இந்த ஸ்பின்னர் மனநல பாதிப்புக்குள்ளானவர்கள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ADHD என்ற சொல்லக்கூடிய கவனக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஃபிட்ஜெட் ஸ்பின்னர் (fidget spinner) மன வளர்ச்சி குன்றிய குழைந்தைகளுக்கானது என கூறப்பட்டாலும் அதுவும் ஒரு விளையாட்டுப் பொருளை போன்றதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். அதனால் இதன் விற்பனையும் சந்தையில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக ஆன்லைனில் மவுசு அதிகரித்துள்ளது. முதலில் மூன்று இறக்கைகள் கொண்டதாக அறிமுகமானாலும் தற்போது 4,5 இறைக்கைகள் கொண்ட ஸ்பின்னர்களும் பேட்டரி மூலம் இயங்கும் ஸ்பின்னர்களும் சந்தையில் அறிமுகமாகத் தொடங்கிவிட்டன. இதனை விளையாடுவதால் மன அழுத்தம் குறையும் என்பதே இதன் விற்பனை கோட்பாடாகவும், பயனாளர்களின் கருத்தாகவும் உள்ளது.
இந்த விளையாட்டு பொருளைப் பயன்படுத்தும்போது குழந்தைகள் இதனை விழுங்கிவிடும் அபாயமும், இதன் கூரிய பகுதி முகத்தில் காயங்களை உண்டாக்கும் நிகழ்வுகளும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து பயன்படுத்தி, இதற்கு அடிமையாகும்போது விளையாடுபவரின் அறிவுத்திறனும், ஞாபக சக்தியும் குறைய தொடங்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் முன்வைக்கின்றனர் மருத்துவர்கள்.
உலக நாடுகள் பல இந்த விளையாட்டின் ஆபத்தை உணர்ந்து இதன் விற்பனையை தடை செய்திருக்கும் நிலையில், இந்தியாவில் சில பள்ளிக்கூடங்களில் மட்டும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல முழுமையாக இதனை தடை செய்ய வேண்டும் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.