சிறப்புக் களம்

அர்னால்ட் போல ஆக ஆசைப்படும் ஆணா நீங்கள்? கவனமாய் படியுங்கள்!

அர்னால்ட் போல ஆக ஆசைப்படும் ஆணா நீங்கள்? கவனமாய் படியுங்கள்!

webteam

சென்னையை சுற்றி அதிகமாக எது இருப்பது தெரியுமா? ஃபிட்நஸ் கூடங்கள். இரண்டாயிரம் ஸ்கொயர் ஃபீட் அளவில் மிகப் பிரமாண்டமான இடங்களில் கட்டி நிறுவப்படும் இந்த ஜிம்களில் பல இளைஞர்கள் மாங்கு மாங்கு என தங்களின் உடல் அழகைக் கூட்ட காட்டுத்தனமாக உழைத்து வருகிறார்கள். உழைப்பு அதிகம்தான். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த சில வருடங்களில் ரிசல்ட் வேண்டுமே? ஆகவே குறுக்கு வழியில் குதிரை ஏற விரும்புகிறார்கள் பல இளைஞர்கள். இவர்களின் ஆசையை அடித்தளமாக வைத்து பலர் பணம் பார்க்க எதை எதையோ விற்று காசுப் பார்க்கிறார்கள். அதன் விளைவு? உயிரைக் கொல்லும் உயிர்க் கொல்லியாக மாறி உள்ளன பல உடற்பயிற்சிக் கூடங்கள். 

கடந்த வருடம் உடல் எடையை குறைப்பதற்கான ஜிம் போன கிரண் தன் உயிரையே பலிக் கொடுத்திருந்தார். அதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பெங்களூரு குமாரசாமி லே அவுட்டில் வசித்தவர் கிரண். 24 வயது நிரம்பிய இளைஞர். தனியார் கம்பெனியில் ஊதிப்போய் இருந்த உடலுக்கு  ஒரு உருவம் கொடுக்க விரும்பி இருக்கிறார். அருகில் இருந்த உடற்பயிற்சி கூடத்திற்குப் போய் ஆலோசனை கேட்டிருக்கிறார். ஆறுமாதம் தொடர்ச்சியான உடற்பயிற்சி மூலம் உடம்பை குறைத்துவிடலாம் என சொல்லியிருக்கிறார்கள். ஆறு மாதம் போனது. ஆனால் உடம்போ குறையவில்லை. வெறுத்துபோன கிரண் வேறு வழிகளை தேடியிருக்கிறார். வெளியில் கிடைக்கும் புரத மாவுகளை வாங்கி உட்கொண்டிருக்கிறார். அதுவும் சரியில்லை. பயிற்சியாளரிடம் யோசனை கேட்க, அவர் பந்தயக் குதிரைகளுக்குப் பயன்படுத்தப் படும் ஸ்டெராய்ட் ஊசியை பரிந்துரைத்திருக்கிறார். ஊசியை உடலில் ஏற்ற ஏற்ற அது உயிரைக் கொல்லும் விஷமாகி இருக்கிறது. அதன் விளைவு கிரண் உயிரே போனது. ஸ்டெராய்ட் அவர் வாழ்க்கையில் விளையாடிவிட்டது. 

இன்றும் கிரணைபோல பல இளைஞர்கள் இப்படி தவறான மருந்துகளை உட்கொண்டு குறுக்கு வழியில் உடம்பை ஏற்ற முயற்சித்து வருகிறார்கள். கிரண் கதை வெளியில் வந்தது. பலரது கதை வெளியே வராமலே புதைந்து கிடக்கிறது. முதலில் உடம்பை கட்டு மஸ்தாக மாற்ற விரும்பும் பல இளைஞர்களுக்கு காலப்போக்கில் அது ஒரு போதைபோல மாறிவிடுகிறது.  தினமும் கண்ணாடி முன்பாக நின்று நின்று ஆர்ம்ஸை பிதுக்கி தவளை குதிக்கிறதா? என யோசிக்கிறார்கள். தவளை மோகம் அப்படியே டிசோனர் மோகமாக மாறி பல விபரீத விஷயங்களில் இறங்கிவிடுகிறார்கள்.

“இரண்டரை வருஷமா ஜிம் போறேண்ணா. கொஞ்சம் ஏறுது. அடுத்த சில மதங்களில் அப்படியே இறங்கிடுது. அர்னால்ட் அளவுக்கு நாம எப்ப வர்றது. ஃபீலிங்கா இருக்குண்ணா” என்கிறார் ஒரு இளைஞர். இவருக்கு இப்போதுதான் 19 வயதாகிறது. அதற்குள் அர்னால்ட் உடம்பு வர வேண்டும் என நினைப்பது ஆசையல்ல; பேராசை. ஆனால் அவனுக்குப் பக்குவமாக புரிய வைக்க வேண்டிய பயிற்சியாளர்கள் அதை செய்வதில்லை. வெறியை ஏற்றி வேடிக்கைப் பார்க்கிறார்கள். காரணம் சில லட்சங்களை முதலீடாக போட்டு நடத்தப்படும் ஜிம்களுக்கு வருவாய் தேவை. ஆகவே அவர்கள் விஷத்தை விதைக்கிறார்கள். இன்று சென்னையை போல மெட்ரோ சிட்டிகளில் பவுன்ஸர்கள் தேவை அதிகமாகியிருக்கிறது. அதை ஒரு தொழிலாக செய்ய விரும்பும் இளைஞர்கள் செய்யக்கூடாததை செய்து தலைப்பு செய்தியாகி விடுகிறார்கள் என வருத்தப்படுகிறார் ஒரு நேர்மையான பயிற்சியாளர்.

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் எந்தளவுக்கு அதில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது பல இளைஞர்களுக்கு தெரியவதில்லை. அவர்களுக்கு ஒரு ஆலோசனை தரும் வகையில் சில டிப்ஸ்களை கொடுக்குமாறு மருத்துவர் ரவிக்குமாரிடம் பேசினோம். 

“ஒல்லியாக இருப்பவர்கள்  அர்னால்ட் போல ஆக வேண்டும் என்பது ஆசை. ஆகவே அவங்க உடனே ஜிம் போறாங்க, சிக்ஸ் பேக் வைக்க எக்சர்சைஸ் பண்றாங்க. உடம்புக்கு எக்சர்சைஸ் நல்லது. ஆனா அதுக்கு ஒரு அளவுகோல் இருக்கு. அதை மீறி தண்ணீர் குடிக்காம உடம்பை கட்டுப்படுத்தி செய்கிற காரியங்கள் எல்லாமே விபரீதத்தில்தான் போய் முடியும். சிக்ஸ்பேக் மோகத்தால் ஆண்மையை இழந்த ஆண்கள் பலபேர் இருக்கிறார்கள். ஸோ, பீ கேர்ஃபுள்” தொடங்கும்போதே எச்சரிக்கை ஒலியை எழுப்புகிறார் டாக்டர் ரவிக்குமார்.

“testosterone என்று ஒரு ஹார்மோன் இருக்கிறது. இது ஆண்களின் விதைப் பையிலிருந்து வரக்கூடிய ஒரு ஹார்மோன். இது ஆண்களின் ரத்தத்தை அதிகப்படுத்துகிறது. அதன் வழியே சதையை அதிகப்படுத்துகிறது.  ஒரு ஆணுக்கு இயற்கையாகவே இது உடம்பில் உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் அளவைவிட அதிகமாக சிலர் testosterone ஹார்மோனை செயற்கையாக செலுத்து உடம்பை ஏற்ற முயற்சிப்பாங்க.  1930 களில் இருந்தே இந்த ஊசியைதான் பயன்படுத்துறாங்க.  இதை போடுவதால் உடம்பு முழுக்க முடி வளரும். பருவ மாற்றங்கள் விரைந்து நடக்கும். இதை உபயோகிப்பதால் ஆண்மை குறைப்பாடு வருகிறது என கண்டறிந்தார்கள். ஆகவே அதற்கு மாற்றாக anabolic steroid என்ற மருந்தை கண்டுப்பிடித்தார்கள். இதைதான் பலர் ஸ்டெராய்டு ஊசி என பொதுவாக சொல்வார்கள். இந்த anabolic steroid தான் பந்தைய குதிரைகளுக்கு பயன்படுத்துவார்கள். இந்த ஊசியைப் போட்டால் குதிரையின் ரத்த ஓட்டம் அதிகப்படும். அதன்மூலம் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். உடனே குதிரை வேகமாக ஓடும். 

வயதானவர்கள், கைக்கால் பலம் இல்லாதவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட ஊசி இது. இதை உடம்பின் சதை, வேறு எங்கெங்கு ஏற்ற வேண்டுமோ அந்தப் பாகங்களில் போட்டுக் கொள்கிறார்கள். அதனால் சதை தானாக உப்ப ஆரம்பித்துவிடும். இந்த ஊசியும் விபரீதமானதுதான். கிட்னியில் மேல் பகுதியில் இருந்து சுரக்கக் கூடியது corticosteroid. உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன் இது. சின்ன குழந்தைகள் அயர்ந்து தூங்கும் போது இந்த corticosteroid ஹார்மோன் உற்பத்தியாகும். அதனால்தான் முன்னோர்கள் குழந்தையை தூக்கத்தில் எழுப்பக் கூடாது என்றார்கள்.  

அறிவியல் உலகம் இதை கண்டுப்பிடிப்பதற்கு முன்பே நம் தாத்தா, பாட்டி இதை கண்டுப்பிடித்து விட்டார்கள். அதீத வளர்ச்சிக்கு வேண்டி corticosteroid ஊசியை போட்டுக் கொள்கிறார்கள். அதே போல சில புத்திசாலிகள் synthol oilலை ஊசி வழியே உடம்பில் ஏற்றிக் கொள்கிறார்கள். ஆயில் சதை உள்ளே போனதும் உப்பென்று ஊதிக் கொள்ளும். இந்த ஆயில் ரத்தக்குழாயில் அளவுக்கு மீறி போனால் உடனடியாக உயிரிழப்பு நிகழ்ந்துவிடும். ரத்தம் செயலிழந்து போய்விடும். இவை அனைத்தும் ஆபத்தானதே. நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைப்பாடு, ஹார்ட் அட்டாக், கிட்னி கோளாறு, புற்றுநோய், அல்சர், மூளை பாதிப்பு என பல வியாதிகள் வர கூடும்.” என்கிறார் டாக்டர் ரவிக்குமார். 

“உடம்புக்கு தேவையான புரோட்டீனை மட்டுமே   உடல் எடுத்துக் கொள்ளும். அளவை மீறி அனுப்பப்படுபவை வெளியே கழிவாகிவிடும். ஊசி மூலம் புரோட்டீனை செலுத்துவதால் அது நேரடியாக ரத்ததில் கலக்கும். இதயம் அதை சீர் செய்ய முடியாமல் திணறும். ஆகவே பிரச்னைகள் கூடும். உடற் பயிற்சியில் அதிக தீவிரத்தன்மையோடு செயல்படுபவர்கள் அதிக ஆயுள் வரை இருக்கமாட்டார்கள்” என அடித்து சொல்கிறார் டாக்டர் ரவிக்குமார்.