சென்னை வேப்பேரியில் சாலை ஓரத்தில் இருந்த அடைப்பை நேரடியாக தானே களத்தில் இறங்கி சரி செய்த காவல் ஆய்வாளர்தான் தற்போது நெட்டிசன்களின் பதிவுகளில் பெருவாரியாக இடம் பிடித்திருக்கிறார்.
கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக சென்னை வேப்பேரியில் உள்ள ஈவேரா சாலையில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சாலைகளில் இருந்த குப்பைகள் கால்வாயின் துவாரத்தில் அடைத்துக் கொண்டது. இதனால் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. இதனைக் கண்ட வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் வீரகுமார் எந்த தயக்கமும் இன்றி, சாலையோர அடைப்பை நீக்கினார். கையுறை கூட அணியாமல் களத்தில் இறங்கிய அந்தக் காவல் ஆய்வாளருக்கு சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுக் குவிந்து வருகிறது.
புதிய தலைமுறை இணையதளம் சார்பாக அவரை தொடர்பு கொண்டோம். அவருக்கு குவிந்து வரும் பாராட்டு குறித்துக் கேட்ட போது, "காவல்துறையினர் பணியே மக்களுக்கு சேவை செய்வதுதானே" என்றார்.
நடந்த சம்பவம் பற்றி விவரித்த வீரக்குமார், "அந்த பகுதியில் மழையின் காரணமாக தண்ணீர் வரத்து சாலையில் அதிகமாக இருந்தது. நீர் வெளியேறுவதற்கான பாதையில் அடைப்பு காணப்பட்டது மற்றவரை அழைத்து அந்த பணியை செய்தால் காலதாமதம் ஏற்படும் என்பதால் அதனை நானே சரிசெய்தேன். மற்றவர்களின் பாராட்டை பெற வேண்டும் என்ற நோக்கில் எதனையும் செய்யவில்லை. மக்களுக்கான சேவையாகத்தான் அதனை செய்தேன்" என்றார்.
"ஒரு காவல் அதிகாரிக்கு தன்னுடைய பாதுகாப்பை விட பொதுமக்களின் பாதுகாப்புதான் முக்கியமானது. அவன்தான் உண்மையான காவலன் என்ற வீரக்குமார், மற்றவர்களும் இதுபோன்ற பணியை செய்கிறார்கள். நான் செய்தது வெளிச்சத்தில் வந்துள்ளது அவ்வளவுதான்" என்றார் வெகு இயல்பாக.
சமூக வலைத்தளங்களில் பெருகும் பாராட்டு பற்றிக் கூறும் போது, "சமூக வலைதளங்களில் இந்த செயல் இந்தளவு பேசப்படும் என நினைக்கவில்லை, எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை. இது பேசப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். கடைசியாக அவர் சாலை அடைப்பை நீக்கிய பகுதியில் தற்போது எந்த பாதிப்பும் இல்லை என்று முடித்தார்.