சிறப்புக் களம்

ரஜினி அரசியலை அணுகுவதில் முரண்பாடு: அதிமுகவில் ஓபிஎஸ் 'இடம்'தான் எது?

ரஜினி அரசியலை அணுகுவதில் முரண்பாடு: அதிமுகவில் ஓபிஎஸ் 'இடம்'தான் எது?

webteam

ரஜினியின் அரசியல் வருகையையும், அதையொட்டிய நகர்வுகளையும் அணுகுவதிலேயே அதிமுக தலைமைகளிடம் இணக்கம் இல்லாத சூழலே நிலவுவதாகத் தெரிகிறது.

முதலில் கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் பார்ப்போம். அரசியல் களத்தில் 'தமிழகத்தின் இரும்புப் பெண்மணி' என்று அழைக்கப்பட்டவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவரின் விசுவாசமான, நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தவர் என்றால், அது ஓபிஎஸ்தான். இவரை நம்பி ஜெயலலிதா இரண்டு முறை தனது முதல்வர் பதவியை விட்டுவிட்டுச் சென்றதே இதற்குச் சான்று.

டான்சி வழக்கில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா முதல்வர் பதவியில் தொடர முடியாத காரணத்தால் பன்னீர்செல்வம் 2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் 1 ஆம் தேதி வரை தமிழக முதல்வராக செயல்பட்டது முதல் முறை.


அதன்பின், 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது. அப்போது, தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலம் வாய்ந்த அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் கலந்து பேசி சட்டமன்றக் கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தைத் தேர்ந்தெடுத்தனர். இது இரண்டாவது முறை. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, 2015ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடந்த அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜெயலலிதா மீண்டும் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தப் பின்புலத்தில்தான் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலையில் பன்னீர்செல்வம் அவசர அவசரமாக முதல்வர் பதவியை ஏற்றார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்ட சசிகலா, 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால், பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தர்மயுத்ததை ஜெயலலிதா சமாதியில் இருந்து ஆரம்பித்தார்.

இதையடுத்து, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் செல்ல, எதிர்ப்பாராத விதமாக எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்துவிட்டு சென்றார் சசிகலா. இதனால், அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. இரட்டை இலையும் முடக்கப்பட்டது. ஆனால், ஆட்சியை தக்கவைக்க பன்னீர்செல்வத்தின் உதவி தேவை என உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வத்துக்குத் தூது அனுப்பினார். அவரது திட்டப்படி அதிமுக இணைந்தது. சசிகலா, தினகரன் கட்சியில் இருந்து கழட்டிவிடப்பட்டனர். அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான வழிகாட்டுதல் குழுவும் உருவாக்கப்பட்டது. அதேபோல் துணை முதல்வர் பதவியும் ஒபிஎஸ்ஸுக்கு வழங்கப்பட்டது.

ஆனாலும், ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மன ஒற்றுமை இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. ஓபிஎஸ் தரப்பும், இபிஎஸ் தரப்பும் கருத்து மோதல்களில் வெளிப்படையாகவே ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் வகையில், இரு தலைவர்களும் ஒன்றாக இணைந்து அறிக்கை வெளியிட்டனர். இப்படியே 4 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்த நேரத்தில்தான் யார் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்னை எழுந்தது. அப்போதும் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளர் என பன்னீர்செல்வமே அறிவித்தார். இதனிடையே, இருவருக்கும் நேரடியாகவே வார்த்தைப் போர் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

"நான் ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், நீங்கள் சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்" என ஓபிஎஸ் சொல்ல, "இரண்டு பேருமே சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான்" என இபிஎஸ் பதிலடி கொடுத்ததாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்வாறு இருக்க, அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு வழக்கம் உண்டு. அமைச்சர்களோ, எம்.எல்.ஏக்களோ, கட்சி நிர்வாகிகளோ யாரேனும் ஒரு கருத்தை முதலில் சொல்லிவிட்டு, பின்னர் அது சொந்தக் கருத்து என சொல்லிவிடுவது வாடிக்கைதான். ஆனால், தற்போது ஒரு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சொல்வதையே சொந்தக் கருத்து என சொல்கின்றனர் அதிமுகவினர்.

அதாவது, ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், "சிறந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். அவருடைய வரவு நல்வரவு ஆகட்டும். எதிர்வரும் காலங்களில் அரசியலில் எதுவும் நிகழலாம். வாய்ப்பு இருந்தால் கூட்டணி அமையும்" எனத் தெரிவித்தார்.

ஆனால், அவசர அவசரமாக ஓபிஎஸ்ஸின் இந்தக் கருத்து குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "ஒருங்கிணைப்பாளர் சொல்லியுள்ளார். அது அவருடைய கருத்து. அதை கட்சி மதிக்கும். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் அதேநேரத்தில், எம்ஜிஆரை யாரோடும் ஒப்பிட முடியாது" எனத் தெரிவித்தார்.


இதைத்தொடர்ந்து ரஜினியின் அறிவிப்பு குறித்தும் ஓபிஎஸ்சின் கருத்து குறித்தும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், "அவர் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும். கட்சியை அறிவிக்கதானே செய்துள்ளார். கட்சியை பதிவு செய்யாமல் ஒண்ணும் சொல்ல முடியாது. பன்னீர்செல்வம் அவருடைய கருத்தை சொல்லியுள்ளார் அவ்வளவுதான். எல்லாரும் கருத்து சொல்லலாம். கருத்து சொல்வது தவறு கிடையாது. என்னைப் பொருத்தவரை, ரஜினி கட்சியை பதிவு செய்தால்தான் பதில் சொல்ல முடியும்" எனத் தெரிவித்தார்.

"தமிழகத்தை ஆளும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சொல்வது எப்படிக் சொந்த கருத்தாக இருக்க முடியும்? அது எப்படி அவர் நினைத்ததையெல்லாம் பொதுவெளியில் சொல்ல முடியும்? ஒரு தலைமை ஒருங்கிணைப்பாளர் சொல்வதை ஏற்ற்க்கொள்ள முடியாத அளவில் அதிமுக செயல்பட்டு வருகிறதா?

அடுத்தடுத்து ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டு வருகிறாரா? ஜெயலலிதாவுக்கு அடுத்தகட்டத்தில் இருந்த பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு அதிமுகவில் எந்த அளவில் உள்ளது? என்பன போன்ற பல கேள்விகள் நடப்பு அதிமுக அரசியலை பார்க்கும்போது அனைவரது மத்தியிலும் எழாமல் இல்லை" என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தமிழக தேர்தல் அரசியல் களத்தில் தன் தடத்தைப் பதிப்பதற்கு அதிமுகவுடன் இணைந்து முனைப்பு காட்டி வருகிறது பாஜக. சமீபத்திய அமித் ஷா வருகையின்போதுகூட, அதிமுக - பாஜக கூட்டணியை முதலில் மேடையில் உறுதிபடுத்தியது பன்னீர்செல்வம்தான். பின்னர்தான் எடப்பாடி பழனிசாமியும் அதையே வழிமொழிந்தார்.

இதனிடையே, ரஜினியின் அரசியல் வருகைக்குப் பின்னால் பாஜகவின் 'நிர்பந்தம்' இருக்கிறது என்ற பேச்சும் வலுவாக இருக்கிறது. அவர்மூலம் தமிழகத் தேர்தல் களத்தை அணுகும் திட்டமும் பாஜகவிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பின்புலத்தில், அடுத்தடுத்த தேர்தல் வியூகத்தையொட்டிய நகர்வுகளிலும் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் நேர்க்கோட்டில் பயணிக்கப்பதாகத் தெரியவில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.