இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை இந்த மாதத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஐஐடி ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கொரோனா 2ஆவது அலையின் தாக்கத்தை அத்தனை எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. நாடு முழுவதும் மக்கள் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் சூழலில், தற்போது 3ஆவது அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் ஐஐடி ஆய்வாளர் மதுகுமளி வித்யாசாகர், கான்பூர் ஐஐடி ஆய்வாளர் மனிந்திரா அகர்வால் ஆகிய இருவரும் கணித முறை அடிப்படையில் கொரோனா பரவல் குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.
அதன்படி, இந்த மாதம் கொரோனா 3ஆவது அலை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், அப்படி ஏற்படும் பட்சத்தில் வரும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடும் எனவும் கணித்துள்ளனர். ஆனால் கொரோனா 3ஆவது அலை, 2ஆவது அலையைப் போல் தீவிரமாக இருக்காது என்பது ஐஐடி ஆய்வாளர்களின் கருத்து. 2ஆவது அலையில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 3ஆவது அலையில் தினமும் ஒன்றரை லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை பார்க்கும் போது, 3ஆவது அலை உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். இவர்கள் இருவரும் கொரோனா 2ஆவது அலை குறித்து கணித்தது கிட்டத்தட்ட சரியாக இருந்த நிலையில், தற்போது இந்த மாதத்திலேயே 3ஆவது அலை ஏற்படும் என்று கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது
உலகின் எந்தெந்த நாடுகளில் கொரோனா 3ஆவது அலை பாதித்துள்ளது?
இந்தியாவில் அக்டோபர் மாதம் கொரோனா 3வது அலை உச்சத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா 3ஆவது அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா 3ஆவது அலை பாதிப்பால் அமெரிக்காவில் தினமும் ஒரு லட்சம்பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக அமெரிக்கா மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.
டெல்டா ப்ளஸ் வகை கொரோனா இங்கிலாந்தில் வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதன்காரணமாக, இங்கிலாந்தில் தளர்வுகள் திரும்பப்பெறப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜப்பான், ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 3ஆவது அலை பரவி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரிக்கப்பட்டாலும், உயிரிழப்புகள் விகிதமும் குறையாமல் இருக்கிறது. அனைத்து நாடுகளும் முழுமையான தளர்வுகளை அளிக்காமல் படிப்படியாக அறிவிக்க உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சிவகங்கை மருத்துவக்கல்லூரி இணைபேராசிரியர் டாக்டர் பாலமுருகன் பேசுகையில், ''மூன்றாவது அலையில் டெல்டா ப்ளஸ் கொரோனா வகையால் மக்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என தெரிகிறது. இரண்டாம் அலையிலிருந்து நாம் பல்வேறு பாடங்களை கற்றுக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக தடுப்பூசியின் தேவையையும், வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டிருக்கிறோம். அரசு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது. தடுப்பூசி போடும் அளவு போதிய அளவில் இல்லை. 70% தடுப்பூசிகள் செலுத்திக்கொண்ட நாடுகளிலேயே 3வது அலை உச்சத்தை தொடும் நிலையில், அனைவரும் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டால்தான் 3வது அலையின் பாதிப்புகளை குறைக்க முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எங்கெல்லாம் கொரோனா பாதிப்பு அதிகம்?
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44.63 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தினசரி பாதிப்பில் உலக அளவில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அண்மை நிலவரப்படி, 3.25 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் இதுவரை 4.35 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 648 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை
மகாராஷ்டிரா 1.36லட்சம்
கர்நாடகா 37,155
தமிழ்நாடு 34,734
டெல்லி 25,079
உத்தரபிரதேசம் 22,792
கேரளா 19, 584
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழ்நாடு முழுவதும் இதுவரை 26,04,074 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
தலைநகர் சென்னையில் மட்டும் 5.42 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்
தமிழ்நாடு முழுவதும் 34,761 பேர், சென்னையில் மட்டும் 8,386 பேரும் உயிரிழந்துள்ளனர்.