சிறப்புக் களம்

விலங்குகள், பறவைகளை செவி குறைபாடுடைய குழந்தைகள் தொட்டு உணர சிறப்பு ஏற்பாடு செய்த ஆட்சியர்

webteam

மரங்கொத்தி, மரவட்டை, வண்ணத்துப்பூச்சி தொடங்கி அரிய வகை விலங்கினங்கள் வரை காட்டின் அனைத்துவகை உயிரினங்களை நேரில் கண்டு, தொட்டு உணர்ந்து ரசிக்கும் "காட்டு வழி நடை பயணம்" என்ற புதிய திட்டத்தை நெல்லையை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு முதல் வாய்ப்பாக மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ளார். அதன்படி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பொதிகை மலைக்கு செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் இன்று சென்று வந்துள்ளனர்.

இந்த பொதிகை மலையில் ஏறக்குறைய 2,254 தாவர இனங்கள், 79 பாலூட்டி இனங்கள், 88 ஊர்வன இனங்கள், 45 வகை இருவாழ்விகள், 46 மீன் இனங்கள், 337 பறவை இனங்கள் இங்கு வாழ்வதாக சொல்லப்படுகிறது. இதில் 405 தாவர இனங்கள், 20 வகை பாலுட்டிகள், 45 வகை ஊர்வன, 30 வகை இருவாழ்விகள், 10 வகை மீன்கள், 20 வகை பறவை இனங்கள் ஓரிட வாழ்விகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இவைகளை உலகில் வேறெங்கும் காண இயலாது. இப்படிப்பட்ட மலையில்தான், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் "அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மையம்" இணைந்து "தாமிரபரணி தடங்களில் இயற்கை நடை" என்ற களப்பயண நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களை காடுகள், தாமிரபரணி நதிக்கரைகள், குளங்கள், தேரிக்காடுகள் என இயற்கை வளம் மிகுந்த பகுதிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அழைத்துச் சென்று அது குறித்த செய்திகளை கற்றுக் கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம். அதன்படி முதல் நிகழ்வானது இந்தியாவின் பறவை மனிதன் முனைவர் சாலிம் அலி அவர்களின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட முண்டன்துறை வனப்பகுதியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் பாளையங்கோட்டையில் உள்ள பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 21 மாணவ மாணவிகள் மற்றும் 5 ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள். மாணவ-மாணவிகளின் களப்பயணத்தில் புதிய தலைமுறையும் இணைந்து கொண்டது.

மாணவ மாணவிகளுக்கு முதலில் காட்டில் வாழும் பறவைகள், பூச்சியினங்கள் தொடங்கி செடி,கொடி தாவரங்கள், பறவைகள், விலங்குகள் இவற்றை உற்று நோக்க கற்றுக் கொடுத்தனர். உயிரினங்களின் நகர்வு மற்றும் செயல்பாடுகள் மூலம் அந்த உயிரின் குணம், காடுகள் பல்கி பெருக அதன் பங்களிப்பு குறித்து நேரடி விளக்கம் கொடுத்தனர் வன உயிரின ஆராய்ச்சியாளர்கள். அப்போது மின்கம்பி மீது நின்ற மரங்கொத்தி பறவையை ஸ்பைனாகுலர் மூலம் காண்பித்தனர். அதை பார்த்ததும் பேச வராத குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியை தங்கள் பாஷையில் உற்சாகமாக பேசி வெளிப்படுத்தினர், அதில் சண்முகப்ரியா என்ற வாய் பேச முடியாத காத கேளாத மாணவி பார்த்த மரங்கொத்தியை உடனே ஒரு பேப்பரில் கலர் பென்சில்களை கொண்டு தத்ரூபமாக வரைந்தது காண்பித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தொடர்ந்து  வண்ணத்துப்பூச்சி வகைகள் இலையினடியில் அது சேமித்து வைத்த முட்டை, கரடியின் கழிவுகள் அதில் விதை விட்ட தாவர எச்சம், பாறையில் துளைத்து செடிகளை உருவாக்க முயலும் பச்சைப்பாசி வகை தாவரம், சிலந்தி வகைகள் என ஒவ்வொன்றையும் நேரடியாக காண்பித்து அது குறித்த விளக்கத்தையும் சொல்ல சொல்ல ஆசிரியர் அனைத்தையும் சைகை பாஷையில் அந்த காது கேளாத வாய் பேச முடியாத மாணவ மாணவிகளுக்கு தெரியப்படுத்தினார்.

அடுத்ததாக விலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள், காட்டுக்குள் உள்ள சிற்றோடைகள் போன்றவை காண்பிக்கப்பட்டு அது குறித்த தகவல்கள் அவர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது. வன ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் தானியங்கி கேமரா, ஜி.பி.எஸ்., காற்றின் வேகத்தை கண்டறியும் கருவி, தூரத்தைக் கணக்கிடும் கருவி என உபகரணங்கள் காட்சிப் படுத்தப்பட்டு அவைகள் செயல்படும் முறைகுறித்து விளக்கமளிக்கப்பட்டன. களப்பயணத்தில் சேர்வலாறு மற்றும் காரையாறு அணைகளையும் பார்வையிட்டார்கள்.

இப்படியாக காட்டில் வாழும் ஒவ்வொரு உயிர்களிடமும் அன்பு செலுத்தி பாதுகாப்பு கொடுக்கும்போது பல்லுயிர் பெருகும் காடும் அதனால் மக்கள் வாழும் நாடும் பயனுறும் என்பதை இந்நிகழ்ச்சி குழந்தைகளிடையே உணர்த்தியது.

- நெல்லை நாகராஜன் | சங்கர்