ஆஸ்கர் விருதை சிறந்த விருது என்று சொல்ல முடியாது. அது ஹாலிவுட் சினிமாவுக்கான விருது மட்டுமே. இதைவிட சிறந்த விருது என்றால், கேன்ஸ் விருது விழாவைச் சொல்லலாம். ஏனென்றால் அது உலகத்தில் என்னவெல்லாம் மொழி இருக்கிறதோ, அந்த மொழிப் படங்களை வரவேற்கிறது. அந்த மொழிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று அந்தந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது. அதனால், ஆஸ்கரை விட, கேன்ஸ் விருதை சிறந்ததாகச் சொல்ல முடியும். ஆஸ்கர் விருது என்பது ஒட்டுமொத்த சினிமாவுக்கான கனவல்ல.
இந்தியாவில் இருந்து ஒரு படத்தைத் தேர்வு செய்து ஒவ்வொரு வருடமும் ஆஸ்கருக்கு என்று அனுப்புகிறார்கள். ஆனால், அவர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து, படம் தேர்வாகும். அதில் மொழி பாகுபாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். அதைத் தாண்டினால்தான் ஆஸ்கர் என்ட்ரிக்கு செல்ல முடியும். அங்கும் பல தடைகள் இருக்கிறது. இதைக் கடந்து செல்ல வேண்டிய நிலைமையில் இந்திய சினிமாவுக்கு எப்படி விருது கிடைக்கும்?