சிறப்புக் களம்

''சோஷியல் மீடியாவுக்கு ஓவர் பில்டப் வேண்டாம்'' - அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை கூறிய ஆய்வு!

''சோஷியல் மீடியாவுக்கு ஓவர் பில்டப் வேண்டாம்'' - அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை கூறிய ஆய்வு!

webteam

இன்றைய காலக் கட்டத்தில் சமூக வலைதளங்கள் வெறும் பொழுதுபோக்குக்கானவை மட்டுமே அல்ல. சமூக வலைதளங்கள் மூலம் தான் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது என அமெரிக்காவில் இன்னமும் முனுமுனுத்துக்கொண்டு இருக்கிறார்கள். செய்திகள், பிரசாரம், வியாபாரங்கள், விளம்பரங்கள் என சமூக வலைதளங்கள் எல்லாமும் கிடைக்கும் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் வரை , அதே போல் சிறிய மன்றங்கள் முதல் பெரிய தேசிய கட்சிகள் வரை சமூக வலைதளங்களை பெரிய சக்தியாக நினைக்கின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சிகளுமே சமூக வலைதளங்களையும் தங்களது முக்கிய பிரசார பட்டியலில் வைத்திருந்தன. வாக்குகளை சேகரிப்பதில் சமூக வலைதளங்களும் பெரும் பங்காற்றுகின்றன என அனைத்து கட்சிகளும் நம்பின.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சிகள் பிரசாரங்களில் இறங்கின.

அதன்படி மக்களவைத் தேர்தலையொட்டி ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய இணையதளங்களில் மட்டும் அரசியல் கட்சிகள் சுமார் 53 கோடி ரூபாய்க்கு விளம்பரங்கள் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இத்தனை கோடிகளை கொட்டி வாக்குகளை எதிர்ப்பார்க்கும் அளவுக்கு சமூக வலைதளங்கள் தேர்தலில் எதிரொளிக்காது என்றே ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்திய வாக்காளர்களில் 64 சதவிகிதம் பேர் சமூக வலைதளங்களில் இல்லாதவர்கள் அல்லது பெரியளவில் பயன்படுத்தாதவர்கள் என்கிறது ஆய்வு. அப்படி இணையத்தோடு இணைந்து இருக்கும் வாக்காளர்களில் பெரும்பாலானோர் பொழுதுபோக்குக்கே முன்னுரிமை தருவதாகவும் ஆய்வு சொல்கிறது.

இன்னும் சொல்லப்போனால், அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் ஏற்கெனவே ஒரு ஒரு கட்சியை சார்ந்தே பதிவுகளை பின் தொடர்வதால் புதிய வாக்காளர்களை சமூக வலைதள பிரசாரங்கள் ஈர்க்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியை சமூக வலைதளங்களோடு மற்ற கட்சிகள் ஒப்பிட்டுள்ளன. அதனால் தான் கடந்த தேர்தலின் பிரசாரங்களில் சமூக வலைதளங்கள் பெரும் பங்காற்றின எனவும் கூறப்படுகிறது. தேர்தலை பொறுத்த வரை களம் என்பது தான் முக்கியம் எனவும் வெறும் சமூக வலைதள பதிவுகளும், பகிர்வுகளுமே எந்தக்கட்சியின் வெற்றி தோல்வியை தீர்மானித்துவிடாது என்பது ஆய்வின் கருத்தாக உள்ளது. மேலும்  இந்திய அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களை அளவுக்கு அதிகமாக மதிப்பிட்டு வருவதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது.