கடந்த 50 நாட்களாக க்யூப் பிரச்னையில் முடங்கிப் போய் இருக்கிறது தமிழ் சினிமா. 45 நாள் போராட்டத்தில் இதுவரை 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அரவிந்தசாமி போன்ற சீனியர் நடிகர்கள் ‘வேலை நிறுத்தம் அசதியாகி விட்டது. எங்களை வேலை செய்ய விடுங்கள்’ என கோரிக்கை கொடியை உயர்த்திருந்தார். அந்த அசதியை புரிந்து கொண்ட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளார். இந்தப் பிரச்னை சம்பந்தமாக செய்தியாளர்களை சந்தித்த விஷால், “எங்கள் உறுப்பினர்களுடன் கலந்து பேசி படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கப்படும், எந்தத் தேதியிலிருந்து படங்கள் வெளியாகும் என்று முடிவெடுக்க உள்ளோம். படத்தின் ரிலீஸ் முறையை ஒழுங்குபடுத்த ஒரு கமிட்டியை உருவாக்கி இருக்கிறோம். இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து இன்னொரு பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று கூறியிருக்கிறார்.
விஜய்காந்தின் 40 விழாவில் பேசிய பிரேமலதா “கலைக்குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையை தீர்க்க கேப்டன் முயற்சிகள் எடுப்பார்” என்று அறிவித்திருந்தார். அவர் அறிவித்த அடுத்த சில நாட்களில், தலைவர் விஷாலே பிரச்னையை ஒரு சுமூகத் தீர்வுக்கு கொண்டு வந்துவிட்டதாகக் தெரிகிறது. மாதக் கணக்கில் நீண்ட இந்தப் பிரச்னை கடைசிக் கட்டமாக ஒரு முடிவை தொட்டிருக்கும் நிலையில் வேறு ஒரு கோணத்தில் தலைவலியை கிளப்ப ஆரம்பித்திருக்கிறது. அதற்கு பெயர்தான் #BoycottTamilCinema. சமூக வலைத்தளத்தில் வறுத்து எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
அதற்கு ஆதரவாக திரைக் குடும்பத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் ““ஐபிஎல் போட்டிகள் போல், தமிழ்நாட்டில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை ஒத்திவைக்கப்படுமா? செயல்படாத மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே” என ட்விட்டரில் கொளுத்திவிட்டிருக்கிறார்.
திரைத்துறை வேலை நிறுத்தத்தை காரணமாக வைத்து தனது ‘ஒருகல் ஒரு கண்ணாடி’யை ஓட்டிக் கொண்டிருந்த உதயநிதி மீண்டும் வேலை நிறுத்தம் வாபஸ் ஆகும் வேளையில் காவிரிக்காக படப்பிடிப்பை பட வெளியீட்டை தள்ளி வைக்க முடியுமா என கேட்டிருக்கிறார். போராட்டத்தின் போது தன் படத்தை ஓட்டிக் கொள்வதும் வாபஸ் நேரத்தில் காவிரியை கையில் எடுப்பது சரியா என உதயநிதியை கேட்கிறார்கள் நெட்டிசன்கள். ஆனால் உதயநிதி இதற்கும் பதிலளித்திருக்கிறார். பட நிறுத்தம் இருந்த நேரத்தில்தன என் படத்தை ஓடிக்கொண்டேன் என அவர் வாதித்திருக்கிறார்.
அதே போல விராட் கோலி ஆதரவாளர் ஒருவர், “சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மொத்தமே 35 ஆயிரம் பேர்தான் உட்கார முடியும். அதோடு 7 மேட்ச் மட்டும்தான் நடக்க இருந்தன. ஆனால் டோட்டல் சினிமா ஸ்கிரினிங் தமிழ்நாட்டில் 733. அதில் மினிமம் இருக்கைகள் 150. அப்போது அறுபது ஆயிரம் பார்க்க முடியும். அப்படி என்றால் தினமும் நான்கு காட்சிகள். மொத்தம் 365 நாட்களை கணக்கிட்டால்? மக்களை திசைத்திருப்பவா இந்த நாடகம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
திரை உலகம் காவிரிக்காக ஒரு நாள் அறப்போராட்டம் நடத்தியது. அதில் பிரகாஷ் ராஜ், அஜித் போன்ற பல நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவே இல்லை. மேலும் வராத நடிகைகள் ஏராளம். பாரதிராஜா, தங்கர் பச்சான், வெற்றிமாறன், வி.சேகர், செளதரபாண்டியன், வ.கெளதமன் போன்றவர்கள் களத்தில் இறங்கி ஐபிஎல் கடையை அடைக்கச் சொல்லி கதறினார்கள். கொடிப்பிடித்தார்கள். கோஷம் போட்டார்கள். ஐபிஎல் மேட்ச்சை நடத்தவிடாமல் செய்தார்கள். இப்போது அதே வேகத்தை சினிமா தியேட்டர்கள் முன்பாக காட்டுவார்களா? என பல ஐபிஎல் ஆதரவாளர்கள் நியாயம் கேட்கிறார்கள்.
ஒரு போராட்டத்தின் உஷ்ணம் குறையாமல் இருப்பதற்காகவே இவர்கள் இந்தப் போராட்டத்தை கையில் எடுத்தார்கள் என்பது உண்மை என்றால் இப்போது திரையிடலுக்கு எதிராகவும் அணி திரள வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. ஆகவே எங்களின் கோரிக்கையை ஏற்று வேல்முருகன் போன்ற கட்சியினர் திரையரங்கம் முன்பாக திரண்டு போராட வேண்டும் என்கின்றனர். ஆகவே ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் #BoycottTamilCinema என்ற முழுக்கத்தோடு நெட்டிசன் களத்தில் குதித்துள்ளனர். போகின்ற போக்கைப் பார்த்தால் ஐபிஎல் ரசிகர்கள் திரையரங்கை முற்றுகையிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதை எல்லாம் செய்வதால், காவிரி நமக்கு கிடைத்துவிடும் என நாம் நம்புவோமாக !