சிறப்புக் களம்

இளைஞர்களிடையே அதிகரிக்கும் புகைப்பழக்கம் - பெற்றோர்களே தெரிந்துகொள்ளுங்கள்!

Sinekadhara

உலகளவில் அதிக உயிரிழப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது புகைப்பழக்கம். ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். அதிலும், குறிப்பாக இளைஞர்களே அதிகளவில் இறக்கின்றனர். கேன்சர், நுரையீரல் பிரச்னைகள், காசநோய், தொற்றுக்கள், நீரிழிவு மற்றும் பிற இதய பிரச்னைகளுக்கு புகையிலை பயன்பாடு முக்கிய காரணமாகிறது. இதுதவிர சரும பிரச்னைகள், விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்னைகளும் புகைப்பிடித்தலால் ஏற்படுகிறது. இன்றைய இளைஞர்கள் சிகரெட் மட்டுமல்லாமல் சுருட்டுகள், வேப்பிங் மற்றும் ஜூலிங் போன்ற இ-சிகரெட்டுகள், ஹூக்கா, சுவையூட்டப்பட்ட புகையிலை போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர். இவை அனைத்துமே ஒரேமாதிரியான தீங்கு விளைவிக்கக்கூடியவை.

இதிலிருந்து விடுபட குழந்தைகளை ஊக்குவிப்பது எப்படி?

புகைப்பிடித்தலிலுள்ள ஆபத்துகள் மற்றும் தீங்குகளை உணராமல் இளைஞர்கள் பலரும் புகைபிடிக்கும் பழக்கத்தை கையிலெடுக்கின்றனர். பிற்காலத்தில் புகையிலைக்கு அடிமையாகி அதிலிருந்து வெளிவர முடியாமல் கஷ்டப்படுகின்றனர். பெற்றோர்கள் சில எளிய வழிகளை பின்பற்றுவதன்மூலம் தங்கள் பிள்ளைகளை இந்த பழக்கத்திலிருந்து வெளிகொண்டு வரலாம்.

முன்மாதிரியாக திகழுங்கள்: பெற்றோர்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் பிள்ளைகளும் எளிதில் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர் என்கிறது ஆய்வு. எனவே பெற்றோர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும். புகைபழக்கத்தை கைவிடும் பெற்றோர் அதிலுள்ள பாதகங்கள் என்னென்ன? தாம் எவ்வாறு கஷ்டப்பட்டோம் என்பதை குறித்தும் பிள்ளைகளிடையே அவ்வப்போது பகிர்வது அதன்மீது ஒருவித வெறுப்பை உண்டாக்கும்.

பிள்ளைகளிடம் மனம்திறந்து பேசுங்கள்: நிறைய நேரங்களில் பிள்ளைகள் தனது நண்பர்கள் முன்பு கூலாக காட்டிக்கொள்ள புகைப்பிடிப்பதுண்டு. எனவே, பெற்றோர்கள் அவர்களை கண்டிப்பதை விட, புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அவர்களை தூண்டியது எது என்பதை கேட்டுத் தெரிந்துகொண்டு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி எடுத்துக்கூற வேண்டும்.

அடிமையாக விடக்கூடாது: வளர் இளம்பருவத்தில் சில விஷயங்கள் கெத்தாக இருக்கும் என நினைப்பதைப்போலவே புகைப்பிடிப்பதையும் நினைத்து வளர விட்டுவிடக்கூடாது. உடல்நிலை மற்றும் ஆளுமையை பாதிக்கக்கூடிய புகைப்பிடித்தலை மிகவும் கவனமாக கையாளவேண்டும்.

குழந்தைகளுடன் ஈடுபாடு: உங்கள் வளர் இளம்பருவத்தினருடைய வாழ்வில் ஈடுபாடு கொள்வது அவசியம். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களுடைய நட்பு வட்டாரம் எப்படி இருக்கிறது? அவர்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறார்கள் என்பனவற்றை தெரிந்து வைத்திருத்தல் மிகமிக அவசியம்.

போதை மறுவாழ்வு: போதிய கவனமின்மையால் உங்கள் பிள்ளைகள் ஒருவேளை புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால் உடனடியாக போதை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச்சென்று முறையான சிகிச்சை அளிப்பது சிறந்தது.