வசனங்கள் இல்லாத படங்கள் வெளிவந்த காலத்திலேயே வெள்ளித்திரையில் பல புதுமைகளைப் புகுத்தியவர் சார்லி சாப்ளின். வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் காலத்துக்கு ஏற்ப கருத்துகளைச் சொல்லும் களமாகவும் திரைத்துறையைப் பயன்படுத்திக் கொண்டவர் அவர்.
தாயின் திருமணத்துக்கு முன்னரே பிறந்த குழந்தையான சார்லி, இளம் வயதில் சுற்றியிருந்தவர்களின் ஆதரவு கிடைக்காமல் ஏங்கியவர். சிறுவனாக இருந்தபோதே அத்தனை துன்பங்களையும் அனுபவித்தவர். ஏழ்மையும் பசியும் அவரைத் துரத்தியது. அவர் பிறப்புக்கான எந்தச் சான்றிதழும் கிடையாது. இதனால் அவரது தொடக்க காலப் படைப்புகள் அனைத்தும் கோபம் கொப்பளிக்கும் வகையிலையே அமைந்திருந்தன. பின்னாளில் சமூகத்தின் இரட்டை நிலையைப் புரிந்து கொண்டவரானார். ஏழைகளிடமும், குடிசைகளிலும் இருக்கும் சூழல் மட்டுமே உண்மையானது மற்றெல்லாம் போலி என்ற கருத்தை தனது படைப்புகள் அனைத்திலும் காட்டினார்.
‘தி கிட்’ திரைப்படத்தில் பிறரிடம் பரிவு காட்டும் சாதாரண மனிதன், தி கிரேட் டிக்டேட்டரில் ஏகாதிபத்தியத்துக்கும், இனக் கசப்புக்கும் எதிரான ஆள், தி மாடர்ன் டைம்ஸ் படத்தில் கம்யூனிஸ்ட் என திரையில் பல பரிமாணங்களைக் காட்டியவர் சார்லி சாப்ளின். நூறு ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவின் அனைத்து வகையான உத்திகளையும் பயன்படுத்தியவர். வாழ்க்கை என்பது குளோசப் ஷாட்டில் பார்த்தால் துயரம் நிறைந்தது. லாங் ஷாட்டில் நகைச்சுவையானது என்று தத்துவம் பேசியவர். அவரது படங்களை உற்று நோக்கினால், மீசை, தொப்பி, பொருத்தமில்லாத பேண்ட் போன்ற சிரிப்பை வரவழைக்கும் அம்சங்களுக்கு உள்ளே ஏக்கங்களும் சோகங்களையும் மறைத்துக் கொண்ட ஒரு மாமனிதனைப் பார்க்க முடியும்.