சிறப்புக் களம்

‘விஷமிகளின் போலி போன் கால்கள்’ - சமாளிக்க முடியாமல் திணறும் 108 ஆம்புலன்ஸ் சேவை

‘விஷமிகளின் போலி போன் கால்கள்’ - சமாளிக்க முடியாமல் திணறும் 108 ஆம்புலன்ஸ் சேவை

webteam

108 அவசர சேவை என்பது மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை போன்ற அவசர தேவைகளுக்காக 24x7 மணிநேரமும் செயல்படும். இந்தச் சேவை ஆந்திரம், குஜராத், உத்தரகண்ட், கோவா, தமிழ்நாடு, இராஜஸ்தான், கர்நாடகம், அசாம், மேகாலயா மற்றும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முழுவதுமாக செயல்பட்டு வருகிறது.

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை செல்வதற்கு முன்பாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஆம்புலன்ஸில் ஒரு மருத்துவ உதவியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இயல்பாகவே இருக்கும். மக்களின் அவசரத் தேவையை புரிந்து கொண்டு பெரும்பாலான ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தங்களின் உயிரையும் துச்சமாக நினைத்து மின்னல் வேகத்தில் பறப்பார்கள். ஆனாலும் சில நேரங்களில் எவ்வளவு சீக்கிரம் சென்றாலும் சிலரின் உயிரைக் காப்பாற்ற முடிவதில்லை. ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம் என்றே சொல்லப்படுகிறது.

அவசர எண் 108-ஐ அழைத்து, ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவித்து, பின்னர் ஆம்புலன்ஸ் வந்தும் உயிரிழப்பு நேரிடுவது ஒரு வகை. ஆனால் 108 அவசர சேவை, ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்காமலேயே அலட்சியமாக கடந்து செல்வதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற முக்கியமான குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளன.

அதற்குத் தகுந்தாற்போல், காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி மாணவர் ஆம்புலன்ஸ் வராததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. காஞ்சிபுரம், ஆலடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்குமார்(18). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மூங்கில் மண்டபம் அருகே உள்ள பச்சையப்பன் பள்ளி மைதானத்தில் விளையாடச் சென்றதாக தெரிகிறது. அப்போது நண்பர்கள் யாரும் அருகில் இல்லாதபோது திடீரென கணேஷுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அவர் உயிர்போகும் நேரத்தில் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளார். அது குறித்த உரையாடலில் ‘எனக்கு மூச்சு அதிகம் வாங்குகிறது. முடியவில்லை. பச்சையப்பன் பள்ளிக்கு வாங்க’ என்று கணேஷ் கூறுகிறார். எதிர்முனையில் பேசிய 108 ஊழியர் ‘பக்கத்தில் யாராவது இருந்தால் போனை கொடுங்கள்’எனக் கூறுகிறார்.
அதற்கு கணேஷ், ‘யாரும் இங்கு இல்லை. சீக்கிரம் வாங்க’என்று கூற ‘பச்சையப்பன் பள்ளி எங்குள்ளது’ என்று கேட்கிறார் ஊழியர். அப்போது ‘மூங்கில் மண்டபம், பச்சையப்பா, காஞ்சிபுரம்’ என்கிறார் கணேஷ். ‘நீங்கள் சரியாக வழி சொல்லாமல் எப்படி வண்டியை அனுப்புவது’ என்று ஊழியர் பேசுவதுடன் அந்த உரையாடல் முடிகிறது. மாணவரின் இறுதிச் சடங்குகள் முடிவுற்று அவரது செல்போனை குடும்பத்தினர் எடுத்து ஆய்வு செய்தபோது இந்த உரையாடல் குறித்து தெரியவந்துள்ளது. அந்தப் பொறுப்பற்ற ஊழியரின் அலட்சியத்தால் ஒரு உயிரே பறிபோயுள்ளது என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதனிடையே 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 108க்கு வந்த ‘கால் ஹிஸ்டரி’ குறித்த தகவல்களை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தியாக வெளியிட்டுள்ளது. அதன்படி, 108 அவசர சேவைக்கு மொத்தமாக வந்த கால்கள் 4,90,802. இதில் பதிலளிக்காத கால்கள் 14,988. பதிலளித்த கால்கள் 4,75,814. இதில் அவசரத் தேவைக்காக 1,57,826 கால்களும், அவசரமற்றதாக 1,17,614 கால்களும், பயனற்றதாக 2,00,379 கால்களும் வந்துள்ளன.

அவசர கால்களை பொறுத்தவரை மெடிக்கல் தேவைக்காக 1,56,595 கால்களும், காவல்துறை அழைப்புக்கு 612 கால்களும், தீயணைப்புத்துறைக்கு 619 கால்களும் வந்துள்ளன. முதல் ரிங்கில் 85 சதவீதமும், இரண்டாம் ரிங்கில் 3 சதவீதமும், மூன்றாம் ரிங்கில் 12 சதவீதம் கால்களுக்கும் பதிலளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 108 தலைமை அலுவலகத்தில் 120க்கும் மேற்பட்ட ஹெல்ப்லைனும், ஒரு சிஃப்ட்டில் 60க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தும் வருகின்றனர். ஒரு நாளைக்கு மாநில அளவில் 4000 கால்கள் வருவதாகவும் சென்னையில் 2019 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 31.6 லட்சம் கால்கள் வந்துள்ளதாகவும் அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 9.4 லட்சம் கால்கள் பிரசவம், சாலை விபத்துகள், தற்கொலை, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட மருத்துவ தேவைக்கு அழைப்பு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

பத்தில் ஆறு கால்கள் அவசரமற்றவையாகவும், 30 சதவீத கால்கள் மட்டுமே அவசரத் தேவைக்காக வருவதாகவும் நிர்வாகத்தரப்பு தெரிவிக்கிறது. உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுபவர்களின் நேரத்தையும் புரளி கால்கள் ஆக்கிரமித்து விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து ஜிவிகே-இஎம்.ஆர்.ஐ மாநிலத் தலைவர் செல்வக்குமார் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில், “போலியான கால்களாக இருந்தால் கால் செண்டர் ஊழியர்கள் அவற்றை துண்டிக்க வேண்டும். இதிலுள்ள சாமர்த்தியம் என்னவென்றால் அவற்றை ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் ஊழியர்கள் கண்டுபிடித்து துண்டிக்க வேண்டும்.

குடியிருப்பு பிரச்னைகள் குறித்து புகார் செய்ய அல்லது அரசு சேவைகளைப் பற்றிய தகவல்களைப் பெற பலர் அவசர சேவையை அழைக்கிறார்கள். அதிலும் சிலர், தற்போதைய நிகழ்வுகள் குறித்தும், கிரிக்கெட் ஸ்கோர், சினிமா பாடல் கேட்டும் தொடர்பு கொள்கின்றனர். அபயக்குரல் கால்களையும் போலி கால்களையும் எப்படி கையாள்வது என்பது குறித்து நிறுவனங்கள், ஊழியர்களுக்கு அவ்வபோது பயிற்சி அளித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மூத்த உளவியலாளர் ஆனந்தி கூறுகையில், “எப்போது நீங்கள் அவசர ஹெல்ப்லைனில் இருக்கிறீர்களோ, குறைந்த நேரத்தில் அதிக தகவல்களை சேகரிக்க வேண்டும். குழந்தைகள் அல்லது டீன் ஏஜ் மனசோர்வில் உள்ளபோதும், பெண்கள் துயரத்தில் இருக்கும்போது போலீஸ் அல்லது தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.