சிறப்புக் களம்

மாற்றங்கள், தோற்றத்தில் மட்டுமல்ல... - இரண்டாம் இன்னிங்ஸில் மீள்வாரா சிம்பு? - ஒரு பார்வை

மாற்றங்கள், தோற்றத்தில் மட்டுமல்ல... - இரண்டாம் இன்னிங்ஸில் மீள்வாரா சிம்பு? - ஒரு பார்வை

PT WEB

'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு', 'கொரோனா குமார்' என புதிய எழுச்சியில் சென்றுகொண்டிருக்கிறார் நடிகர் சிலம்பரசன். உடம்பைக் குறைப்பது, படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்குப் போவது என இரண்டாம் இன்னிங்ஸில் சிம்பு குறித்து நம்பிக்கை பேச்சுக்கள் திரையுலகில் இருந்து வெளிப்படுகின்றன.

சிம்பு 2.0 பரிணாமம்: தமிழ் சினிமாவில் பிரிக்கவே முடியாதது காதலும், பேய்ப்படங்களும் மட்டுமல்ல, மற்றொன்றும் உண்டு. அது சிம்புவும் சர்ச்சைகளும். எத்தனை பிரச்னைகள் வந்தாலும், பாலிலிருந்து பிரிக்க முடியாத தண்ணீரைப்போல எத்தனை சர்ச்சைகள் வந்தாலும், படமே தோற்றாலும் கூட, 'எஸ்.டி.ஆர் கம்பேக் கொடுப்பாரு' என சிம்புவின் பாய்ச்சலுக்கு எரிபொருளாக எப்போதும் அவரது ரசிகர்கள் துணை நிற்கிறார்கள். சிம்புவுக்கு கிடைத்த வரப்பிரசாதம் அவரது ரசிகர்கள். அவர்களுக்காகவே தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆட ஆரம்பித்திருக்கிறார்.

இரண்டாவது இன்னிங்ஸ் கிட்டத்தட்ட மறுபிரவேசம் என்று சொல்லக்கூடிய வகையில், அவரது அடுத்தடுத்த பட அறிவிப்புகள், கேரக்டர் வெளியீடுகள் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளன. வெங்கட் பிரபுவின் 'மாநாடு' ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. பல தடைகளை கடந்து இந்த வரவேற்பு கிடைத்துள்ளது. சில ஆண்டுகள் முன்புவரை படமே இல்லையென்றாலும், சிம்புவைச் சுற்றி சர்ச்சைகள் மட்டும் இருந்துகொண்டே இருந்தன. ஏன் ட்ரெய்லர் வெளியாகியுள்ள 'மாநாடு' சிம்புவின் சில சொதப்பல்களால் 'ட்ராப்' ஆகும் அளவுக்கு சென்று திரும்பியது. ஓயாத மைக்கேல் ராயப்பன் பிரச்னையில் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு என பல்வேறு தடங்கல்களைச் சந்த்தித்தார்.

இவற்றில் இருந்து மீண்டு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் என மல்டி ஸ்டார் படமாக வெளிவந்த 'செக்க சிவந்த வானம்' சிம்புக்கு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வைத்த படம் எனலாம். நீண்ட காலத்துக்கு பிறகு சிம்புக்கு ஏற்ற கேரக்டர் இதில். மேலும், ரெட் கார்டு தடைகளை உடைக்க இந்தப் படம் சிம்புவுக்கு தேவையாக இருந்தது. அந்தப் படத்தின் வெற்றி, மாற்றத்துக்கான அறிகுறியாக தென்பட, அதை இப்போது கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார் சிம்பு.

கடைசியாக சிம்பு நடிப்பில் தியேட்டரில் வெளிவந்த படம் 'ஈஸ்வரன்'. விமர்சனங்களுக்கு அப்பால், நீண்ட காத்திருப்பில் இருந்த சிம்பு ரசிகர்களுக்கு தீனியாக அமைந்தது இந்தப் படம். அறிமுக சீனில் இருந்து சிம்பு முகம் திரையில் காண்பிக்கப்படும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் கைதட்டலுக்கு குறைவில்லை. இந்த கைதட்டல் (ரசிகர்கள்) தான் சிம்புவின் பலம். 'ஈஸ்வரன்' படத்தில் இருந்து சிம்புவின் மாற்றத்தை கண்காணிக்கலாம். 'செக்க சிவந்த வானம்' படத்தில் அவரின் உடல் எடை மிகுந்த கேலியை எதிர்கொள்ள வைத்தது. இந்தக் கேலியை சவாலாக எடுத்துக்கொண்டு, கிட்டத்தட்ட 20 கிலோ வரை எடையை குறைத்து, ஈஸ்வரனில் நடித்தார்.

சிம்புவின் மீது இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டே படப்பிடிப்பு தளத்துக்கு தாமதமாக வருவது, குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை முடித்து கொடுக்காமல் இழுத்தடிப்பது. 'ஈஸ்வரன்' படத்தில் இந்த குற்றச்சாட்டை உடைத்தார். 30 நாட்களில் சொன்னபடி, தனது பாகத்தை முடித்துக்கொடுத்தார். விளைவு, படம் தொடங்கிய இரண்டு மாதங்களுக்காவே திரைக்கு வந்தது. சிம்பு ரசிகர்களும், நலன் விரும்பிகளும் ஏன் அவரே விரும்பிய மாற்றம் இதுதான். இந்த மாற்றம் அந்த ஒரு படத்தோடு நின்றுவிடவில்லை. அதுவரை தன்னால் கிடப்பில் போடப்பட்ட அனைத்துப் படங்களுக்கும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அதனால்தான் ட்ராப் என அறிவிக்கப்பட்ட 'மாநாடு' தீபாவளி விருந்தாக ரஜினி படத்துடன் மோதவிருக்கிறது.

'மாநாடு'க்கு பிறகு, பல ஆண்டுக்கு முன் ஒப்பந்தம் போடப்பட்ட கன்னட 'மப்தி' படத்தின் ரீமேக்கான 'பத்துதல' படத்திலும் நடித்து வருகிறார். மேலும் கெளதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு', 'நதிகளிலே நீராடும் சூரியன்', கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என அடுத்த பட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் சிம்பு. தற்போதைய இரண்டாவது இன்னிங்ஸில் புதியதாக சிம்புவிடம் இருந்து கவனிக்கப்படுவது, சுய ஒழுக்கம் படப்பிடிப்பில் தாமதம் இல்லாமல் காட்டப்படும் அர்ப்பணிப்பு, அணுகுமுறை போன்ற குணங்கள் முன்பைவிட வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. புதிய நம்பிக்கையை அளிக்கின்றன.

'ஐ எம் எ லிட்டில் ஸ்டார்... ஆவேன்டா சூப்பர் ஸ்டார்' என்று குழந்தையிலேயே வியக்கவைத்த ஒரு நடிகன் சிம்பு. தமிழ் சினிமாவில் பலருக்கு வாய்க்காத 'சிங்கிள் டேக்' ஆர்ட்டிஸ்ட் எனப் புகழப்படும் நடிப்பு, இயக்கம், கதை - திரைக்கதை - வசனம், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முக வித்தகனாக தனது 20களிலேயே மக்களிடையே தனது திறைமைகளை வெளிப்படுத்தி ஒரு முழுமையான நடிகராக தோன்றியவர். திரை மட்டுமல்ல, திரைக்கு வெளியேவும் மனதில் பட்டத்தை பேசும் வெளிப்படையான பேச்சு, அவரை நிறைய இளைஞர்கள் மத்தியில் ஓர் ஆளுமையாக கொண்டுச் சேர்த்துள்ளது. எப்போது சர்ச்சைகள் வெடித்தாலும், விருப்பு வெறுப்புகளை தாண்டி பொதுவான பார்வையாளர்கள் பலரும் ஒருவித அக்கறையை சிம்பு மீது வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அவர்களுக்கு இருக்கும் ஓர் ஆதங்கம்... திறமை இருந்தும் அதற்கேற்ற உயரத்தை சிம்பு இன்னும் அடையவில்லை என்பதே. சிம்புவின் தனிப்பட்ட சில செயல்களும், தவறான தேர்வுகளுமே இதற்கு முழுக் காரணம். இது பொதுவான பார்வையாளர்கள் பலரிடம் சிம்பு குறித்து இருக்கும் ஆதங்கமும். திரைக்கலைஞர்கள் பலர் குறித்தும் பார்வையாளர்கள் இப்படி ஆதங்கப்பட மாட்டார்கள். அது வாய்ப்பது ஒரு சிலருக்கு மட்டுமே. அப்படிப்பட்ட சிலர்களில் சிம்புவும் ஒருவர். சிம்பு இப்போது இதனை உணர்ந்திருப்பார் என்று நம்பலாம். அதனால்தான் இப்போது அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் வெகுவாக கவனிக்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் பேட்டி ஒன்றில் ''பத்து வருஷத்துக்கு நான் படமே நடிக்காம இருந்து, அதுக்கு அப்புறம் ஒரு படம் நடிச்சாலும் என் படத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவார்கள்" என்றிருந்தார் சிம்பு. இந்தக் கூற்று உண்மையான ஒன்றுதான். அப்படிப்பட்ட ரசிகர்களுடன், சினிமா விரும்பிகளும் சிம்புக்காக காத்திருக்கிறார்கள். பொங்கலுக்கு வெளியான 'ஈஸ்வரன்' இந்தக் கூற்றை கிட்டத்தட்ட உண்மையாக்கி இருக்கிறது. இது தொடரும் என்பதே அவரின் ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பு.

- மலையரசு