சிறப்புக் களம்

ஊரடங்கு விதிகளை மீறி ஒரே ஆட்டோவில் ‘தயாநிதி மாறன் - சேகர் பாபு - அன்பில் மகேஷ்’

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஒரே ஆட்டோவில் குழுவாக அமர்ந்து சென்ற புகைப்படம் வெளியாக, சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

திமுக பிரமுகரும், சென்னை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து, இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அவருக்கு இன்று ஓராண்டு நினைவு அஞ்சலி சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக சென்றபோது, தயாநிதி மாறன் - சேகர் பாபு - அன்பில் மகேஷ் ஆகியோர் ஆட்டோவின் பின்பக்க சீட்டில் ஒன்றாக அமர்ந்திருந்தது சென்றுள்ளனர். கொரோனா பரவல் இருக்கும் இந்த நேரத்தில், ஆட்டோவில் பின் வரிசையில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து செல்ல வேண்டும் என்று அரசு விதி இருக்கிறது. அப்படியிருக்கும்பொழுது மூன்று பேர் இந்த ஊரடங்கு காலத்தில் ஒரே சீட்டில் அமர்ந்து சென்றது, விதி மீறலாக பார்க்கப்படுகிறது. இதுவே சமூக வலைதளத்தில் சர்ச்சையாகி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

புகைப்படம் விவாதப்பொருளானதை தொடர்ந்து, ‘அது குறுகலான தெரு என்பதால் ஆட்டோவில் சென்றோம்’ என அமைச்சர்கள் சார்பில் விளக்கம் தரப்படுகிறது.

- ரமேஷ்