சிறப்புக் களம்

”விஞ்ஞானத்தை பயன்படுத்தியே மூடநம்பிக்கையை பரப்புறாங்க” - Mr.GK உடன் 'Science day' உரையாடல்

webteam

இன்று அறிவியல் தினம்: அறிவியல் சார்ந்து இயங்கும், சோஷியல் மீடியாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மக்களின் மதிப்பைப்பெற்ற, Mr.GK அவர்களுடன் ஒரு உரையாடல்.

1. அறிவியல் தகவல்கள் சார்ந்து இயங்குவர் நீங்க.. இன்னிக்கு Science day - உங்க சார்பா மக்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க..?

  • "science day" சார்பாக மக்களுக்கு என்ன சொல்ல வருகிறேன் என்றால், அறிவியலை உங்க வாழ்க்கைக்குள் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அது ஏன்? எதற்கு? இது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்வியை உங்களுக்குள் கேட்டு பாருங்கள். ஒரு பேனா எழுதுகிறது என்றால், பேனாவில் ஊற்றப்பட்ட இங்க் நிப்பின் வழியாக கடகடவென்று கொட்டாமல், சீராக எழுதுவது எப்படி? வானத்தில் நட்சதிரங்களின் நகர்வு எப்படி ? என்று, இப்படி பல கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்டுக்கொள்ளுங்கள். இது தான் அறிவியல். எந்த ஒரு தகவலையும் உண்மையா பொய்யா என்பதை நன்கு தெரிந்துக்கொண்டு, மற்றவர்களுக்கு பகிருங்கள்.

2. ஆதிகாலம் முதல் அறிவியல் வளர்ச்சியும் மனித வளர்ச்சியும் சேர்ந்து தான் நடந்து இருக்கு. ஆனா அந்த அறிவியல் இன்னமும் எல்லா மக்களுக்கும் ஏன் போகலைன்னு நினைக்கிறீங்க? ஏன் ஒரு பெரும்பகுதியான மக்கள் மூடநம்பிக்கை, அறியாமைன்னு அறிவியலுக்கு புறம்பான வாழ்க்கையில் இருக்காங்க?

  • விஞ்ஞானம் எந்த அளவிற்கு வளருகிறதோ அதே அளவிற்கு மூடநம்பிக்கையும் மக்களிடம் வளர்ந்து வருகிறது. டெக்னாலஜி வளர்கின்ற அதே சமயத்தில் அந்த டெக்னாலஜியை பயன்படுத்தி மூடநம்பிக்கையை எவ்வாறு பரப்பலாம், பொய் செய்திகள் எவ்வாறு விதைக்கலாம் என்பதை சிலர் கையாண்டு வருகிறார்கள். எந்த ஒரு மூடநம்பிக்கைகளுக்கு பின்னாடியும், போலி அறிவியலுக்கு பின்னாடியும் சிலர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளக்கூடிய கும்பல் இருக்கிறது. அவர்கள் இந்த விஞ்ஞானத்தையும் பயன்படுத்தி அதன் மேல் சவாரி செய்து மூடநம்பிக்கைகளை இன்னும் வேகமாக பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதை எதிர்த்து அறிவியல் வளர்வது என்பது ஒரு சேலஞ்சிங்கான விஷயம். அறிவியல் என்பது எதிர்நீச்சல் போடக்கூடிய ஒரு விஷயம் அதனால் மக்களிடத்தில் அறிவியலை கொண்டு சேர்ப்பது ஒரு கடினமான செயலாக இருக்கிறது.

3. விஞ்ஞான பூர்வமாக கடவுள் குறித்து எதுவும் நிரூப்பிக்கப்பட்டவில்லை என்றாலும் கூட... மக்களுக்கு கடவுள் என்ற ஒரு நம்பிக்கை தேவைப்படுது தானே..? இதுபோன்ற பல விசயங்கள் அறிவியலுக்கு எதிரானது என்றாலும் கூட மக்களோட மன அமைதிக்கும், நம்பிக்கைகும் ஒரு பிடிப்பு தேவைப்படுது. SO, இந்த இடத்தில் மக்களை அறிவியல்படுத்துவது அவசியமா? இல்லை.. அவர்களின் மன அமைதி தான் முக்கியம் என்ற stand எடுக்கணுமா?

  • கடவுள் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்ற கேள்வியை நாம் மாற்றி அமைக்க வேண்டும். யார் ஒருவர் கடவுள் இருக்கு என்று உறுதியாக சொல்கிறாரோ அவர் தான் நிரூபிக்கப்பட வேண்டிய இடத்தை நிற்கிறார் விஞ்ஞானம் அல்ல. அதனால் அறிவியலுக்கு நிரூபிக்கப்பட வேண்டிய தேவை இல்லை. கடவுளை நிரூபிக்கப்பட வேண்டியவர்கள் மதவாதிகள் தான் தவிர அறிவியல் அல்ல. அதே சமயம் மத நம்பிக்கைகளை அறிவியல் கேள்வி கேட்பது கிடையாது. மத நம்பிக்கைகள் மூடநம்பிக்கையாக மாறும் பொழுது தான் அறிவியல் கேள்விகளை கேட்கிறது. ஒருவர் தானாக நடக்கும் சமயத்தில் ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகிறது என்று ஊன்றுகோலுடன் நடக்கிறார் என்றால், நன்றாக இருக்கும் அவரின் உடலை ஊனமாக்கும் ஒரு விஷயமாக அந்த ஊன்றுகோல் இருக்கும் பொழுது அதை அகற்றுதல் வேண்டும்.

4. ஒவ்வொரு முறையும் isro satellite அனுப்பும் போது, அது வீண் செலவு.. நாட்டு மக்களின் நலனுக்கு செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கு.. அதெல்லாம் செய்யாமல் பல லட்சம் கோடிகளில் இது தேவையா என்ற விமர்சனம் எழும்.. அதுபற்றி உங்க கருத்து?

  • ஒவ்வொரு முறையும் சாட்டிலைட் அனுப்பும்போது ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பக்கூடும். சினிமாவை எடுத்துக் கொண்டால் தற்பொழுது 500 கோடி ஆயிரம் கோடி பட்ஜெட் ஒதுக்கும் பொழுது இந்தியாவில் 100 கோடி செலவில் தான் சாட்டிலைட் அனுப்புவதை ஆரம்பித்து இருக்கிறோம். அதே சமயம் ராணுவத்திற்கும் மக்கள் பாதுகாப்பிற்கும் செலவு செய்வதில் ஒரு சதவீதம் அறிவியலுக்கு செலவு செய்யாமல் இருந்தால் இந்தியா எவ்வாறு வல்லரசு அடைய முடியும்.

5. விண்வெளியில் பல சாதனைகள் செய்யும் நம் நாட்டு விஞ்ஞானிகளால் ஏன் இதுவரை மனித கழிவுகளை அகற்ற ஒரு இயந்திரம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று நினைக்கிறீங்க?

  • விண்வெளியில் சாதனை படைக்கின்ற நாம் மனித கழிவுகளை அகற்றுவதில் இயந்திரம் கண்டுபிடிக்கவில்லை என்பதை மறுக்கிறேன்.
    சென்னையில் மனித கனவுகளை அகற்றுவதில் இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அதற்காக ஆகும் செலவு அதிகமாக இருக்கிறது. இது ஒரு ஆரம்ப கட்டம் தான் இதை விஞ்ஞானம் கையில் எடுத்துக் கொண்டு கண்டிப்பாக மனித கழிவுகளை அகற்றும் இயந்திரம் விரைவாகச் செயல்படும்.

6. எல்லாத் துறையிலையும் science காரணத்தை பார்த்தா.., மனிதர்களிடையே உணர்வுகள் இல்லாம வெறுமை மிஞ்சிவிடுமா?

  • மனிதனுடைய உணர்வு இல்லாமல் எதுவும் நடக்காது. ஒரு பூவை ரசிக்கும் பொழுதோ, நுகரும் பொழுதோ அவனுக்கு அந்த செடி நியாபகத்திற்கு வரும். சின்ன வயதில் இருந்து செடிகளை பற்றி படித்திருப்போம். தாவரம் பூமியின் கீழே உள்ள நீரை உறிஞ்சி தண்டுகளின் வழியாக இலைகளை அடைந்து சூரிய ஒளியின் மூலம் சக்தியை பெற்று வளர்ந்து பூக்கள் பூக்கிறது என்பதை தெரிந்து கொண்டோம். இரவில் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை பார்த்து ரசிக்கிறோம். ஆக, இந்த ரசனையை தொந்தரவு செய்யாத அறிவியல், அறிவியலை தொந்தரவு செய்யாத ரசனை இரண்டும் வேற வேற. சில விஷயங்களை ஆராயாமல் உணர்வுபூர்வமாக அணுகும் போது தான்அதில் பாதிப்புகள் ஏற்படும் அதனால் எந்த இடத்தில் அறிவியல் வேண்டுமோ அங்கு அறிவியலும் எந்த இடங்களில் உணர்வுகள் தேவைப்படுமா அங்கு உணவுகளையும் வெளிப்படுத்த வேண்டும்.

7. அடிதட்டிலிருக்கும் மனிதர்கள் வரை அறிவியல் விழிப்புணர்வு குறித்த சிந்தனையை வளர்க்க.. யார் என்ன செய்ய வேண்டும்?

  • அடிதட்டு மக்களுக்கு அறிவியல் போய் சேர வேண்டும் என்பதே ஒரு அரசியல். மேல்தட்டு மக்களும் நிறைய மூடநம்பிக்கைகளை கொண்டு இருக்கிறார்கள். அறிவியலைப் பொறுத்த வகையில் மேல் தட்டு கீழ்த்தட்டு என்பது கிடையாது. எல்லாவித மக்களையும் அறிவியல் போய் சேர வேண்டும். அதற்கு பள்ளிக்கூடங்களில் அறிவியல் சார்ந்த விஷயங்கள் நிறைய சொல்லி தர வேண்டும். மாணவர்களுக்கு பிராக்டிக்கலாக, சிறுவயதில் இருந்து மனப்பாடம் இல்லாமல் அறிவியல் என்பது எப்படி நடக்கிறது? என்பதை செயல்முறை விளக்கத்துடன் சொல்லித்தர வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் கேட்கும் கேள்விகளை தெரிந்து கொண்டு அவர்களுக்கு விளக்க வேண்டும் இவ்வாறு செய்வதால் அறிவியல் வளரும் என்பது எனது கருத்து