No tobacco day
No tobacco day Freepik
சிறப்புக் களம்

‘ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் காடுகள் புகையிலைக்காக அழிப்பு!’- அதிர்ச்சி ஆய்வுமுடிவுகள்! #NoTobaccoDay

Jayashree A

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். இதை புகையிலை ஒழிப்பு தினமாக மாற்றும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இந்த வருட WNTD (World No Tobacco Day) மையக்கரு, “எங்களுக்கு தேவை உணவு தான், புகையிலை அல்ல” என்பதாகும்.

நாளுக்கு நாள் புகையிலை உபயோகமானது உலகளவில் அதிகரித்து தான் வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் படி உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.5 மில்லியன் ஹெக்டேர் நிலம், புகையிலை சாகுபடிக்காக மாற்றப்படுவதாகவும், புகையிலையை வளர்ப்பிற்காக ஆண்டுக்கு 2,00,000 ஹெக்டேர் காடு அழிக்கப்படுவதாகவும் ஆய்வாளார்கள் கூறுகின்றனர். இது, மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. காடுகளை காக்கவும், புகையிலையை ஒழிக்கவும், அதன்மூலம் மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று, உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

No tobacco

இத்தினத்தில் WNTD யின் உலகளாவிய பிரச்சாரங்களாக ”புகையிலையை விவசாயம் செய்வோரிடம், உணவுப்பயிரின் முக்கியத்துவத்தையும் அவற்றை சந்தைப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். நிலையான மற்றும் சத்தான பயிர்களை வளர்ப்பதற்கு அவர்களை ஊக்குவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவவேண்டும்” போன்றவை உள்ளன.

“நான் இந்தியாவுக்காக விளையாட வந்தபொழுது பல விளம்பர படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது என் தந்தை என்னிடம், புகையிலை பொருட்களை ஒருபோதும் விளம்பரப்படுத்த வேண்டாம் என்று கூறினார். என் தந்தையின் ஆலோசனையை இன்று வரை நான் கடைப்பிடித்து வருகிறேன்” - சச்சின் டெண்டுல்கர்

இந்த அவசர உலகத்தில் விரைவாக பணம் ஈட்டுவதைத்தான் நம்மில் பலரும் விரும்புகிறோம். அதற்காக சிலர் தவறான வழிகளில் சென்றுவிடுகின்றனர் என்பதும் நடக்கிறது. அப்படியான ஒன்றுதான், பணப்பயிர் வளர்ப்பு. புகையிலை என்பது, ஒரு நாட்டை சின்னாபினமாக்கிவிடும் அளவுக்கான ஒரு கொடிய விஷம். சரியாக சொல்லப்போனால், ஒரு நாட்டில் புகையிலை வளர்பானது அந்நாட்டில் உணவு உற்பத்தி துறையில் பாதுகாப்பின்மையை அதிகப்படுத்தி அந்நாட்டு மக்களை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று விடுகிறது.

புகையிலை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதற்கு பதிலாக அந்நிலத்தில் ஒரு உணவு தானியத்தையோ அல்லது கால்நடை தீவனத்தையோ வளர்த்தால், அந்நாட்டின் வளர்சியானது அதிகரிக்கும். கொரோனா மற்றும் போர்களினால் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார சிக்கலை நீக்குவதற்கும் உணவு பற்றாக்குறையை நீக்குவதற்கும் உணவு உற்பத்தியானது அதிகரிக்கப் படவேண்டியது கட்டாயமாகிறது.

No tobacco

இந்தியா ஒரு விவசாய நாடு. உலகளவில் நாம் விவசாய பொருட்களை அதிகளவு ஏற்றுமதியும் செய்து வருகிறோம். ஆனால் சமீப காலமாக இங்கு போதைப்பொருள்கள் விற்பனையென்பது அதிகரித்துவருகிறது. மிக சுலபமாக வீதிக்கு வீதி வந்துவிட்ட புகையிலை, இப்போது பள்ளி செல்லும் பிள்ளைகளையும் சென்றடைந்திருப்பது, பெருஞ்சோகம்.

போதைக்கு அடிமையான மாணவன் ஒருவன் தனது புது வண்டியை அடமானம் வைத்து மது அருந்திய வீடியோக்களும் செய்கிகளும், நமக்கு இயற்கையே கொடுத்திருக்கும் எச்சரிக்கைகள்! இவற்றை எல்லாம் பார்த்த சில பெற்றோர்கள் “நல்லவேளை என் பையனுக்கு ஸ்மோக்கிங் மட்டும் தான்” என்று மனதை சமாதானப்படுத்திக்கொள்ளும் அதிர்ச்சி நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இப்படியான பெற்றோரின் எண்ணங்கள் ‘ஒரு கோட்டை அழிக்காமல் அதை சிரிதாக்கமுடியுமா?’ என்ற கேள்விக்கு, ‘அதற்கு பக்கத்தில் அதைவிட பெரிய கோடு ஒன்றை போட்டால் முதல் கோடானது சிறியதாகிவிடும்’ என்பதுபோலவே இருக்கும்.

No tobacco

இத்தகைய அவலங்களை கண்ட தமிழக அரசாங்கமானது தற்பொழுது கஞ்சா ஒழிப்பு ஆபரேஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஆபரேஷன் 4.0 என்ற அடிப்படையில் கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பலகோடி மதிப்பிலான கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை கைப்பற்றி வருகிறது அரசு. இருப்பினும் இவ்விஷயத்தில் தனி மனித ஒழுக்கமும் தேவை. கடுமையான சட்டங்களும், தனி மனித ஒழுக்கமுமே புகையிலை பயன்பாட்டை நாட்டில் குறைக்க உதவும்.

இந்த புகையிலை எதிர்ப்பு தினத்தில், ‘புகையிலை சம்பந்தமான பொருட்களை பயன்படுத்துவதில்லை’ என்ற சபதத்தை எடுத்துக்கொண்டு இந்தியாவை புகையிலை இல்லா நாடாக மாற்றுவோம்.