ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அவரின் அரசியல் நடவடிக்கைகளில் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகப் பங்களித்தவர் சசிகலா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் நேரடி அரசியல் பிரவேசம் மூன்று மாதங்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் முடிந்து போனது.
75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இறந்த உடன், முதன் முதலாக நேரடி அரசியல் பிரவேசத்திற்கு சசிகலாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அவரது அறிவுறுத்தலின் பேரில் ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாமல் இருந்த சசிகலா டிசம்பர் 31-ம் தேதி அதாவது ஜெயலலிதா இறந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் நேரடியாகக் கட்சியின் பொதுச் செயலாளரானார். ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் இருந்தவர் அவரால் கட்சியைத் திறமையாக வழி நடத்த முடியும் என்று தம்பி துரை ஆரம்பித்து அனைத்து மூத்த தலைவர்களும் ஒரே குரலில் சொன்னார்கள்.
பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார். ஆனால் ஒரு மாதம்தான் அது தொடர்ந்தது. சசிகலா முதலமைச்சர் பதவிக்கு வரத் தயாரானார். கட்சியும் ஆட்சியும் ஒருவர் கையில் இருந்தால்தான் நல்லது என்று மறுபடியும் கட்சியின் மூத்த தலைவர்கள் எல்லாம் சொன்னார்கள். பிப்ரவரி 5-ம் தேதியன்று சட்டமன்றக் கட்சித் தலைவரானார் சசிகலா. பன்னீர் செல்வமும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால் திடீர் திருப்பமாக 7-ம் தேதி ஜெயலலிதா சமாதியில் போய் தியானத்தில் அமர்ந்து ஒரு அதிரடிப் பேட்டியைக் கொடுத்தார். என்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று ஆரம்பித்து, சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வு செய்ததே தவறு என்றும் அந்தக் குடும்பமே கூடாது என்றும் சொன்னார். அவருக்குப் பின்னால் எம்எல்ஏக்கள் சிலர், எம்பிக்கள் சென்றாலும் சசிகலா தனக்கு ஒன்றும் சேதாரம் இல்லை என்றுதான் நினைத்தார். ஆட்சிக்கும் அவருக்கும் பலம் சேர்க்கும் எம்எல்ஏக்கள் அனைவரும் பத்திரமாக கூவத்தூரில் இருந்தார்கள்.
ஆளுநர் ஆட்சி அமைக்க எப்போது அழைத்தாலும் எம்எல்ஏக்கள் தயார்.. முதலமைச்சராகி விடலாம் என்ற கனவில் காத்திருந்த சசிகலாவுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பேரிடியாக வந்தது. கோட்டைக்குச் செல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை. பெங்களூர் கிளம்புவதற்கு முன் எம்எல்ஏக்களைக் கூட்டி எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கி விட்டு, டிடிவி தினகரனை அதிமுக துணை பொதுச் செயலாளராக்கி விட்டுக் கிளம்பினார். தினகரன் ஜெயலலிதாவால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டவர். அவர் அவசர அவசரமாக உறுப்பினராக்கப்பட்டு துணைப் பொதுச் செயலாளராகவே நியமிக்கப்பட்டார் என ஓபிஎஸ் அணியினர் குற்றம்சாட்டினர்.
சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர், டிடிவி தினகரன் காலியாக உள்ள ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாகி அடுத்து முதலமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் பணப்பட்டுவாடா புகாராகி, நின்று போக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி சோதனை.
தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது புகார் என அடுத்தடுத்து அந்த அணிக்கு சோதனையாகவே வந்து சேர்ந்தது. ஆதரவாக இருந்த அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் கொஞ்சம் கொஞ்சமாக சசிகலா குடும்பமே கூடாது என்று ஓபிஎஸ் போலவே சொல்ல ஆரம்பிக்க. நான் ஒதுங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டார் தினகரன். சசிகலா சிறையில் இருக்கிறார். தினகரன் ஒதுங்கிக் கொண்டார். மொத்தத்தில் சசிகலா குடும்பத்தின் நேரடி அரசியல் பிரவேசம் அவசர கதியில் அரங்கேறி அவசர கதியில் முடிந்து போய்விட்டது.