சிறப்புக் களம்

'பரதன்' அரசியல்... நேரடி தூது விடும் டிடிவி... சசிகலா, ஓபிஎஸ் தரப்பு வியூகம் என்ன?

webteam

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்... முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா காலமானதாக அறிவிக்கப்பட்ட பின், முதல்வராக பதவியேற்ற ஓபிஎஸிடம் இருந்து வலுக்கட்டாயமாக பதவியை பறித்தார் சசிகலா. அதையடுத்து, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வந்தார் ஓபிஎஸ். யாரிடமும் எதுவும் சொல்லாமல், ஜெயலலிதா நினைவிடத்தில் கண்களை மூடி தியானத்தை தொடங்கினார்.

அந்த சில நிமிடங்கள் தமிழ்நாடே ஓபிஎஸ்சை திரும்பி பார்த்தது. ஜெயலலிதா மரணம் ஏற்படுத்தியிருந்த துக்கம், அப்போலோவில் 75 நாட்கள் ஜெயலலிதாவின் முகத்தையே வெளியே காட்டாத வகையில் செயல்பட்ட சசிகலா மீது மக்கள் மத்தியில் இருந்த கோபம் எல்லாம் ஓ.பன்னீர்செல்வம் மீது ஓர் ஆதரவை ஏற்படுத்தியிருந்த நேரம் அது. அடிமட்ட தொண்டர்களின் ஆதரவு அப்போது ஓபிஎஸ் பக்கமே நின்றது.

சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவது, ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணை அமைப்பது ஆகிய இரண்டும்தான் ஓபிஎஸ் தொடங்கிய தர்மயுத்தத்தின் கோரிக்கைகளாக இருந்தது. இதற்கு ஒப்புக்கொண்டதால் இபிஎஸ் தரப்புடன் ஒன்று சேர்ந்தார் ஓபிஎஸ். ஆனால் எடப்பாடிக்கும் பன்னீர்செல்வத்திற்கும் இடையேயான தர்மயுத்தம் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. டிடிவியையும் சசிகலாவையும் கடுமையாக பன்னீர்செல்வம் எதிர்த்து வந்திருந்தாலும் தர்மயுத்தத்தின்போதே ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்திருந்தார். தர்மயுத்தம் நடத்தியது தவறுதான் என்றும், அதற்காக மன்னிப்புக் கேட்டார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். அந்தச் சந்திப்பு குறித்து ஓபிஎஸ்சும் ஒப்புக்கொண்டார். எப்படியாவது விட்ட முதல்வர் பதவியை பிடித்துவிட வேண்டும் என்பது ஓபிஎஸ்சின் எண்ணம். அது இன்று வரையிலுமே எட்டாக்கனியாக இருந்து வருகிறது.

4 ஆண்டு காலம் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலாவை தற்போது ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ள சம்மதித்தாலும் இபிஎஸ் தயாராக இல்லை. முதல்வர் பதவியை யாருக்காவும் எதர்க்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என இபிஎஸ் பிடிவாதமாக இருக்கிறார். இந்த முரண்பாடுகளுக்கு இடையேதான் தன்னை பரதன் என்பதை வெளிப்படுத்தி வருகிறார் பன்னீர்செல்வம். சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓ.பன்னீர்செல்வம் எடுத்தால் நிச்சயம் வரவேற்க உள்ளதாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், “ஓ.பி.எஸ். பரதனாக இருந்தது உண்மைதான். தானே முன்வந்து பரதன் ரோலை செய்தார் ஓ.பி.எஸ். பரதன் தவறான முடிவெடுத்து ராவணனுடன் சேர்ந்துவிட்டார்” என்கிறார்.

இதனால் ஓபிஎஸை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் சசிகலா - டிடிவி தினகரன் டீம் ஆயத்தமாகி வருகிறதா? தர்மயுத்தத்தில் சசிகலாவை கார்னர் செய்த ஓபிஎஸ் அவருடனே இணைவாரா? அல்லது ஓபிஎஸ்ஸை மன்னித்து சசிகலா ஏற்பாரா? - இப்படி பல கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகையில், “பன்னீர்செல்வம் தன்னை பரதன் என விளம்பரப்படுத்தி வருகிறார். அதற்கு காரணம் அவர் ஜெயலலிதாவிடம் பதவியை ஒப்படைத்தது போன்று எடப்பாடி, சசிகலாவிடம் ஒப்படைக்கவில்லை என விமர்சிப்பத்து போன்றே உள்ளது. இதே ஓபிஎஸ் 2017ல் தர்மயுத்தம் செய்தபோது சசிகலா தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாகவே சொன்னார். இப்போது டிடிவி தினகரன் சொல்வது என்னவென்றால் ஓபிஎஸ் அப்போது அமைதியாக இருந்திருந்தால் பரதனாகவே இருந்திருப்பார். மீண்டும் பதவி வழங்கியிருப்பார்கள் என சொல்கிறார்.

ப்ரியன் - பத்திரிகையாளர்

அதே நேரத்தில் ஓபிஎஸ்சின் பின்புலத்தில் பாஜக இருந்தது என்பதையும் நாம் மறக்கக்கூடாது. சசிகலா குடும்பத்தை கடுமையாக அவர் எதிர்த்தார். ஓபிஎஸ்சை பொருத்தவரை தனக்கு பதவி வேண்டுமானால் எந்த நிலைக்கும் செல்வார். ஆனால் அவருக்கு செல்வாக்கு தற்போது இல்லை. துணை முதல்வராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தாலும் அவர் ஓரங்கட்டப்பட்டுவிட்டார். அவர் இந்த நிலையில் கட்சியை விட்டு வெளியேறினாலும் யாரும் அவர் பின்னால் போகமாட்டார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தன்னை நிலைப்படுத்தி கொண்டுவிட்டார். அவர் சசிகலாவிற்கு கடுமையான எதிர்நிலையில் இருக்கிறார்.

சசிகலாவால் பதவி வாங்கிய எடப்பாடி சசிகலாவை ஓரங்கட்ட நினைத்தது மட்டுமல்லாமல் அவர் தமிழகம் வரும்போது ஜெயலலிதா நினைவிடத்தை மூடி வைத்ததும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்ததும், எடப்பாடி பழனிசாமி நேரடி மோதலுக்கு தயாராகிவிட்டதையே காட்டுகிறது. இதில் ஓபிஎஸ்சின் நிலைப்பாடு என்ன என்று தெரியவில்லை.

அதேசமயம் சசிகலா இபிஎஸ்சுடன் சமாதானத்திற்கு செல்வாரா என்பது சந்தேகம். அதிமுகவையும், அமமுக - சசிகலாவையும் இணைக்கும் சக்தி பாஜக கையில் மட்டுமே உள்ளது. இந்த சூழ்நிலையில்தான் டிடிவி தினகரன், ஓபிஎஸ் வந்தால் பரதனாக இருக்கலாம் என்று சொல்கிறார். ஆனால் ஓபிஎஸ் வந்தாலுமே சசிகலா தரப்புக்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை. ஏனென்றால் அவர் செல்வாக்கை இழந்துவிட்டார். அவருடன் யாரும் வரமாட்டார்கள். ஓபிஎஸ்சால் டிடிவி தினகரனுக்கு சசிகலாவுக்கும் எந்த லாபமும் கிடையாது என்பது எனது கருத்து” எனத் தெரிவித்தார்.