சிறப்புக் களம்

போஸ்ட்மேன் மகள்; மாணவர் அரசியல்... - சங்கீதா பல்வந்த்: உ.பி பாஜகவின் புதிய ஓபிசி முகம்!

போஸ்ட்மேன் மகள்; மாணவர் அரசியல்... - சங்கீதா பல்வந்த்: உ.பி பாஜகவின் புதிய ஓபிசி முகம்!

PT WEB

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு இரண்டாம் முறையாக இந்த வருடத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்துள்ளது. இந்த விரிவாக்கத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரே பெண் சங்கீதா. இவர் யார், அமைச்சராக்கப்பட்ட பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 2022 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தனது அமைச்சரவையை நேற்று முன்தினம் மாற்றியமைத்தார். மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர், ஜிதின் பிரசாதா உட்பட ஏழு புதிய முகங்கள் இடம்பெற்றனர். இந்த ஏழு பேரில் மிகவும் இளம் வயது கொண்ட நபர், ஒரே ஒரு பெண் என்றால் அவர் சங்கீதா பல்வந்த் என்பவர் மட்டுமே. இவர் கூட்டுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2017-ல் தான் முதல்முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்முறையே அமைச்சர் பதவி அவரை தேடிவந்துள்ளது. அதற்கு பல பின்புலங்கள் உள்ளன.

மாணவர் அரசியல் டூ எம்எல்ஏ! - உத்தரப் பிரதேசத்தின் காஜிபூர் நகரில் பிறந்த சங்கீதா காஜிபூர் நகரில் தொடங்கி மாநிலம் முழுவதும் வெகுவாக இருக்கும் பிந்த் அல்லது மல்லா என அழைக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை தபால்துறையில் போஸ்ட்மேனாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். மிகவும் எளிமையான குடும்பத்தின் பின்புலத்தில் இருந்து வந்திருக்கும் சங்கீதா, தனது மாணவ பருவத்தில் இருந்து அரசியலில் இருக்கிறார். 1997-ஆம் ஆண்டில் காஜிபூரின் பிஜி கல்லூரியில் முதுகலைப் பட்டம் படிக்கும் போதிலிலிருந்தே அரசியலில் இறங்கினார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்.

அந்த ஆண்டு நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அரசியல் பயணம் தீவிரமடைந்தது. விரைவாக தற்போது காஷ்மீரில் துணை நிலை ஆளுநராக இருக்கும் முன்னாள் பாஜக தலைவர் மனோஜ் சின்ஹாவுடன் அவருக்கு நட்பு ஏற்பட, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இந்த தருணத்தில் சதர் மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு 6,600 வாக்குகளுடன் காஜிபூர் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினராக தேர்வானார். இளம் வயதில் அவரின் இந்தத் தேர்வு பாஜக மாநில தலைமை அவரை புகழடைய வைத்தது.

வாரணாசியில் யுபி கல்லூரியில் சட்டப் படிப்பு, பின்னர் பிஎச்டி என ஒருபுறம் படிப்பு, மறுபுறம் அரசியல் என பிரவேசித்துகொண்டிருந்த சங்கீதாவுக்கு கடந்த 2017-ல் சட்டப்பேரவை தேர்தலில் நிற்கும் வாய்ப்பு வந்தது. காஜிபூர் சதார் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் போட்டியிட்ட சங்கீதா, 92,090 வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். இந்த வெற்றி காஜிபூர் மாவட்டத்தில் அவரை வளர்ந்துவரும் அரசியல்வாதியாக மாற்றியது.

அமைச்சர் பதவியின் பின்னணி: மாநில பாஜகவில் பெரிய முகமாக இல்லாவிட்டாலும், காஜிபூர் மற்றும் பூர்வாஞ்சல் பிராந்தியத்தில் நன்கு அறியப்பட்ட அரசியல் முகம் சங்கீதா. குறிப்பாக, இந்த பிராந்தியங்களில் பெரும்பான்மையாக இருப்பது ஓபிசி வகுப்பினர்தான். அவர்களின் ஒரேமுகமாக சங்கீதா திகழ்ந்து வருகிறார். மேலும், ஓபிசி பிரிவான பிந்த் சமூகத்தை சேர்ந்த ஒரே சட்டப்பேரவை பிரதிநிதியும் சங்கீதா மட்டுமே. இதனால் அவரை அமைச்சரவையில் சேர்ப்பது காசிப்பூர் மாவட்டத்தின் பிரதிநிதித்துவம் குறித்தும் உதவுகிறது.

பூர்வாஞ்சல் பகுதியில் ஓபிசி வாக்கு வங்கி குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. இந்த வாக்கு வங்கியை வளைக்கும் விதமாக, பிந்த் சமூகத்தை சங்கீதாவுக்கு முதல்முறையாக எம்எல்ஏவாக இருந்தும் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவி பாஜகவுக்கு கைகொடுக்கும் அதேவேளையில் சங்கீதாவின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றும். அமைச்சர் பதவியால் காஜிபூர் மற்றும் பூர்வாஞ்சல் பிராந்தியத்தில் ஓபிசி வகுப்பினரின் புதிய அரசியல் முகமாக மாறியிருக்கிறார்.

- மலையரசு