உக்ரைன் நகரங்கள் மீது இன்று காலை முதல் தனது தாக்குதலை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில், இதன் தாக்கங்கள் குறித்து அங்குள்ள மாணவர் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை காண்போம்...
ஆண்டனி, உக்ரைனில் பயிலும் தமிழக மாணவர்:
நான் தற்போது உக்ரைனின் மேற்கு பகுதியில் இருக்கும் ஊசராடு என்ற இடத்தில் இருக்கிறேன். இது ஹங்கேரியாவை ஒட்டியுள்ள பகுதியாகும், இப்போதைக்கு இந்த பகுதியில் எந்த தாக்கமும் இல்லை, மக்கள் இயல்பு நிலையில் உள்ளனர். ஆனால் மையப்பகுதியில் உள்ள தலைநகரான கியுவ் மற்றும் ரஷ்ய எல்லையில் உள்ள பகுதிகளில் மக்கள் கடுமையான பீதியில் உள்ளனர். தமிழக மாணவர்கள் இந்திய அரசு மற்றும் தமிழக அரசு கொடுத்த மின்னஞ்சல் முகவரி மற்றும் தொடர்பு எண்ணுக்கு முயற்சி செய்கிறோம். ஆனால் அது வேலை செய்யவில்லை என்பதுதான் உண்மை.
இங்குள்ள இந்திய தூதரகத்தையும், தமிழக அரசின் உதவி அமைப்பையும் தொடர்பு கொள்வதில் சிரமங்கள் உள்ளது. நேற்றுவரை எந்தவிதமான பதற்றமும் எங்களுக்கு இல்லை, தற்போது உக்ரைனின் மையபகுதிகளுக்கு ரஷ்யப்படைகள் வந்துவிட்ட நிலையில், தாயகத்துக்கு திரும்பவே அனைவரும் விரும்புகிறோம். ஏற்கனேவே இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாற்று ஏற்பாடுகளை அரசுகள் செய்யவேண்டும் என்பதே இங்குள்ள தமிழக மாணவர்களின் கோரிக்கை.
என்.ராம், மூத்த பத்திரிகையாளர்:
நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என பல முறை கோரிக்கை வைத்தார் புடின், ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. ஏனென்றால் ரஷ்யாவை வளரவிடக்கூடாது, அவர்கள் நமது எதிரி என்ற பார்வை அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு உள்ளது. எனவே ரஷ்யா தனது நியாயமான பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கையை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா இந்த விவகாரத்தில் இதுவரை சரியான நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். இந்த போர் நடவடிக்கைகளுக்கு காரணம் நேட்டோ அமைப்பின் விரிவாக்கம்தான். அமெரிக்காவின் ரஷ்யா மீதான பொருளாதார தடையும் இந்த நடவடிக்கையின் காரணம் ஆகும்.
ஜெகநாதன், பாதுகாப்புத்துறை பேராசிரியர்:
நேட்டோ 1949 ஆரம்பிக்கப்பட்டது, நேட்டோ உறுப்பினர் ஒருவரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதன் அனைத்து உறுப்பு நாடுகளின் மீதும் நடத்தப்படும் தாக்குதல் என அது கருதப்பட்டு பதிலடி அளிக்கப்படும் என்ற வகையில் அதன் விதிகள் உள்ளது. இந்த சூழலில் ரஷ்யாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயான இணைப்பு பாலமாக உள்ள உக்ரைன் நேட்டோவில் இணைவதை ரஷ்யா விரும்பவில்லை. நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைந்தால் கிழக்குப்பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகமாகும், இது தங்களின் பாதுகாப்புக்கு ஆபத்து என ரஷ்யா கருதுகிறது.
கர்னல் ஹரிஹரன், ராணுவ அதிகாரி:
ரஷ்யாவுக்கு 2014இல் இருந்தே அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது, இதன் தொடர்ச்சியாகவே இந்த பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இந்த போர் காரணமாக ஆபத்தான விளைவுகள் ஏற்படும், ஏனென்றால் ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெயை குழாய் வழியாக ரஷ்யாதான் அனுப்புகிறது. ஒருவேளை போர் மூண்டால் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அதிக பாதிப்பு உருவாகும். எனவே அந்த நாடுகள் இந்த பிரச்னையை தவிர்க்க பார்க்கின்றன.
தங்கப்பன், இந்திய-ரஷ்ய வர்த்தக சபை:
இந்த போர் காரணமாக இந்தியா ரஷ்யா இடையேயான வர்த்தகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது, இது சம்மந்தமாக தற்போதுகூட இரு நாடுகளுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்தது என்ன?
2014ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் பதவி நீக்கம் செய்யப்பட்டார். விக்டர் யனுகோவிச் பதவி நீக்கத்திற்கு பதிலடியாக கிரிமியா பகுதியை கைப்பற்றியது ரஷ்யா
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்திய கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆதரவு அளித்தது. கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா அளித்த ஆதரவு ரஷோ-உக்ரைன் போராக உருவெடுத்தது. இந்த ரஷோ-உக்ரைன் போரில் 14,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
2015-ல் உக்ரைன் - ரஷ்யா இடையே மின்ஸ்க் ஒப்பந்தம் கையெழுத்தானது. உக்ரைன் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையேயான பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்பது மின்ஸ்க் ஒப்பந்தம் ஆகும். தற்போது 20-க்கும் மேற்பட்ட முறை போர் நிறுத்தத்தை கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன
கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ் பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கவேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியது. ரஷ்யா படை வல்லமையை பயன்படுத்தி தனது எண்ணத்தை திணிக்க முயல்வதாக உக்ரைன் குற்றச்சாட்டியது. மேலும் மின்ஸ்க் ஒப்பந்தத்தை ரஷ்யா மதிக்கவில்லை என உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது
அனால், உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய முயல்வதை தனக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாக ரஷ்யா பார்க்கிறது