சிறப்புக் களம்

உக்ரைன் எல்லையில் ரஷ்யப்படைகள் - எச்சரிக்கும் அமெரிக்கா... என்னதான் நடக்கிறது?

உக்ரைன் எல்லையில் ரஷ்யப்படைகள் - எச்சரிக்கும் அமெரிக்கா... என்னதான் நடக்கிறது?

Veeramani

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான பதற்றமானது, தற்போது ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு இடையேயான மோதலாக மாறியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் அமெரிக்க நிறுவனம் கைப்பற்றிய செயற்கைக்கோள் படங்கள் மூலமாக கிரிமியா மற்றும் உக்ரைன் நாட்டு எல்லை அருகில் தனது படைகளை ரஷ்யா தொடர்ந்து அதிகரித்து வருவது கண்டறியப்பட்டது. ராணுவ வாகனங்கள், டாங்கிகள், தானியங்கி பீரங்கி, சிறிய ஏவுகணைகள் உள்ளடக்கிய பல நூறு வாகனங்கள் மற்றும் ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன்பின்னர் இப்பகுதியில் நாளுக்கு நாள் பதட்டம் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினிடம் பேசியபோது, ரஷ்யா உக்ரைனுடன் முழுமையான போரை விரும்பவில்லை என்று புதின் தெரிவித்திருந்தார். ஒருவேளை உக்ரைனை ஆக்கிரமித்தால் மேற்கு நாடுகள் ரஷ்யா மீது "வலுவான பொருளாதார மற்றும் பிற நடவடிக்கைகளை" எடுக்கும் என பைடன் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலடியாக புதின் நேட்டோ உக்ரைன் உள்ளிட்ட கிழக்கு நாடுகளை நோக்கி விரிவடையாது என்பதற்கு உத்தரவாதம் தரவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

உக்ரைனை ஏன் ரஷ்யா முக்கியமாக கருதுகிறது?

முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதியான உக்ரைன் ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்புடையது. அருகாமை என்பது மட்டுமல்லாமல் ரஷ்யாவுடன் புவியியல் மற்றும் கலாச்சார ரீதியாகவும் தொடர்புடையது உக்ரைன் . ஐரோப்பாவில் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக பரப்பளவில் இரண்டாவது பெரிய நாடான உக்ரைனில் பெரும்பான்மையானவர்களால் ரஷ்ய மொழி பேசப்படுகிறது.

உக்ரைன் தனது கிழக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளை ரஷ்யாவுடன் பகிர்ந்து கொள்கிறது. பெலாரஸ் உக்ரைனின் வடக்கே உள்ளது, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் அதன் மேற்கில் உள்ளன. தெற்கில் ருமேனியா மற்றும் மால்டோவா ஆகியவை உக்ரைனின் எல்லையாக உள்ளது. இந்த நாடு அசோவ் கடல் மற்றும் கருங்கடல் ஆகிய கடற்கரைகளையும் கொண்டுள்ளது.

எனவே மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான பாலமாக உக்ரைன் உள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உறுப்பினராக உள்ள நேட்டோவில் உக்ரைனையும் உறுப்பினராக்க முயற்சிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாகவே 2014 இல் கிரிமியன் தீபகற்பத்தை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது. உக்ரைன் நேட்டோவின் உறுப்பினராகக் கூடாது என அச்சுறுத்தும் விதமாகவே தற்போதைய ரஷ்யாவின் நடவடிக்கைகள் உள்ளன.

அமெரிக்கா ஏன் உக்ரைனை ஆதரிக்கிறது?

மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலானவை நேட்டோவில் உறுப்பினராக உள்ளது, ரஷ்யாவின் எல்லைப்புற நாடான உக்ரைனும் நேட்டோவுடன் இணைந்தால், அதன்மூலம் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய கூட்டணி ரஷ்யாவின் எல்லைக்கு அருகே சென்றுவிடலாம் என்பது அமெரிக்காவின் கணக்காக உள்ளது.

இப்போதைய சூழலில் ரஷ்யா அமெரிக்காவை அச்சுறுத்தும் அளவுக்கு இப்போது பலமான நாடாக இல்லாத போதிலும், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அது முன்னணியில் உள்ளது, எனவே அமெரிக்கா ரஷ்யாவை இன்னும் தனது ஹிட் லிஸ்ட்டில்தான் வைத்துள்ளது. முக்கியமாக இப்போதும் கம்யூனிச நாடாக இருக்கும் காரணத்தால், அமெரிக்காவின் கண்கள் எப்போதும் ரஷ்யா மீது இருந்துகொண்டே இருக்கிறது.

ரஷ்யாவின் கோரிக்கை என்ன?

கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ அதன் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என்று ரஷ்யா கோரிக்கை வைத்துள்ளது. போலந்து மற்றும் பால்டிக் நாடுகளில் இருந்து நேட்டோ பட்டாலியன்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் அடங்கும். மேலும், உக்ரைனை உறுப்பினராக நேட்டோ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.

நேட்டோ அல்லது வேறு எந்த அமைப்பினூடாகவும் மேற்கத்திய நாடுகள் கிழக்கு நோக்கி விரிவடைவதைத் தவிர்ப்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை அது கோரியுள்ளது. ரஷ்யாவின் கோரிக்கைகள், அமெரிக்காவும் மற்ற நேட்டோ உறுப்பினர்களும் பழைய சோவியத் யூனியன் நாடுகளிலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறது. இதுவே தற்போது வெடித்துள்ள உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது.