கொலைக்கு கொலை பழிக்கு பழி என்ற கதை புதிது அல்ல, ஆனால் இந்த ஒற்றை வரிக் கதையை கையாண்ட விதத்தில் ராக்கி தனித்துவம் பெறுகிறார். ராக்கியாக வசந்த் ரவி நடித்திருக்கிறார். கதைப்படி ராக்கியின் பூர்வீகம் இலங்கை. இலங்கையின் போர் நெருக்கடி சூழலில் இருந்து தப்பிப்பிழைக்க இந்தியா வருகிறது ராக்கியின் குடும்பம். மணிமாறனாக வரும் கேங்ஸ்டர் பாரதிராஜாவிடம் ராக்கியின் தந்தை வேலைக்கு சேர்கிறார். ஒரு கட்டத்தில் மணிமாறனின் வளர்ப்புமகனாகவே ராக்கி மாறுகிறார். மணிமாறனின் மகனுக்கும் ராக்கிக்கும் இடையே உருவாகும் ஈகோ பிரச்னையால் ராக்கியின் தாய் கொலை செய்யப்படவே பழிக்கு பழியாக மணிமாறனின் மகனை கொடூரமாக கொலை செய்கிறார் ராக்கி. உண்மையிலேயே குடலை உருவி மாலையாகப் போடுகிறார்.
இப்படியாக கேங்ஸ்டர் மோதல் உருவாகி திரை முழுக்க ரத்தம் தெறிக்கிறது. படத்தை நான்லீனியராக சொன்ன விதத்தில் இப்படம் சர்வதேச தரத்தை அடைகிறது. அதுவே இத்திரைப்படத்தை வெகுஜன மக்கள் கோர்வையாக புரிந்து கொள்ள முடியாமல் போனதற்கு காரணமாகவும் ஆகிறது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இத்திரைப்படத்தை வெகுஜன மக்களுக்காக எடுத்ததாக தெரியவில்லை மாறாக இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக உருவாகியிருக்கிறது.
நடிப்பில் வசந்த் ரவியும் பாரதிராஜாவும் நீயா நானா என போட்டி போடுகிறார்கள். 17 ஆண்டுகள் சிறையிலிருந்துவிட்டு திரும்பும் ராக்கி தன் தாய் இறந்ததை அறிகிறார். தங்கையை தேடுகிறார். சிறை தண்டனைக்குப் பிறகு அமைதியாக வாழ நினைக்கும் அவருக்கு காலம் கைகொடுக்கவில்லை. உண்மையில் மிச்சம் வைத்த பகை ராக்கியை மீண்டும் கொலைக் குற்றவாளியாக்குகிறது. நல்ல மேக்கிங் வித்யாசமான மனிதர்கள் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் என படுபயங்கர க்ரைம் சினிமாவாக வந்திருக்கிறான் ராக்கி.
க்ளைமேக்ஸ் காட்சி மயிர்க்கூச்செரியச் செய்கிறது. பாதி கட்டிய கட்டடத்தில் நடக்கும் கேங் வார் காட்சி சிறப்பு. சில காட்சிகளே வந்தாலும் ரோகிணி மனதில் நிற்கிறார். படத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் கலர் டோன் கதையின் வன்முறையை இன்னுமே அடர்த்தியாக்குகிறது. ஷ்ரீயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் லைட்டிங் அமைப்பும் சிறப்பு. அடர்த்தியான வன்முறை சினிமாவை அழகியலுடன் வழங்கியிருப்பது புதுமை.
பலகீனமான இதயமுடையவர்கள், கர்ப்பிணிகள் அவசியம் தவிர்க்க வேண்டிய சினிமா. உலக சினிமா ஆர்வலர்களுக்கு அசைபோட நல்ல கண்டண்ட் இந்த ராக்கி.