Accident Accident
சிறப்புக் களம்

சாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு! - அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்

சாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு! - அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்

Madhalai Aron

உலகளவில் சாலை விபத்துகளில் அதிக பேர் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகள் நடைபெறுவதாக மத்திய அரசின் தரவுகள் கூறுகின்றன.

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகள் மற்றும் அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைக் கோரி மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் பல அதிர்ச்சி தகவல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு 4 லட்சத்து 64 ஆயிரத்து 910 சாலை விபத்துகளை ஏற்பட்டுள்ளன. அதேபோல் 2018-ல் 4 லட்சத்து 67 ஆயிரத்து 44 விபத்துகளும், 2019-ல் 4 லட்சத்து 49 ஆயிரத்து 2 சாலை விபத்துகளும் இந்தியாவில் ஏற்பட்டுள்ளன.

மாநிலங்களின் அடிப்படையில் எடுத்துக்கொண்டால், அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 2017-ம் ஆண்டு 65 ஆயிரத்து 562 பேர் சாலை விபத்துகளில் சிக்கியுள்ளனர். 2018-ல் 63 ஆயிரத்து 920 பேரும், 2019-ல் 57 ஆயிரத்து 228 பேரும் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர். தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டை விட 2018,2019-ம் ஆண்டுகளில் சாலை விபத்துகள் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளை எடுத்துக் கொண்டால், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு 2018-ல் 22,11,439 விபத்துகள் நடந்துள்ளன. ஜப்பான் 4,99,232 விபத்துகளுடன் இரண்டாவது இடத்திலும், 4,80,652 விபத்துகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டாப் 20 நாடுகளின் பட்டியலில், சீனா, ஈரான், கொரியா, துருக்கி, இத்தாலி, ரஷ்யா, பிரிட்டன், கனடா, இந்தோனேசியா, ஸ்பெயின், மொராக்கோ, பிரேசில், பிரான்ஸ், பெல்ஜியம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவு சாலை விபத்துகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் உள்ளன.

சாலை விபத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தாலும், சாலை விபத்துகளால் அதிக பேர் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில், லட்சத்தில் 11 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் என்கிறது புள்ளிவிவரங்கள்.

அதிவேகம், தரமற்ற சாலைகள், சாலை விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாதது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவது, தரமற்ற வாகனங்கள் போன்றவை இந்தியாவில் அதிக அளவில் சாலை விபத்து ஏற்படுவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

- நிரஞ்சன் குமார்