சிறப்புக் களம்

”குஷ்புவும் சேர்ந்து தமிழகத்தில் தாமரையை மலரவைப்பார்” ஆர்.கே சுரேஷ் ’சிறப்பு’ பேட்டி

sharpana

“பணத்திற்காகவும் புகழுக்காகவும் நான் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. கட்சிக்கு உண்மையாக உழைக்கவே சேர்ந்தேன். ஆனால், அரசியல் களத்தில் தொடர்பில்லாதவர்கள் கட்சிக்காக உழைக்க நினைக்கும் தன்னைப் போன்றவர்களிடம் அதிகாரம் செலுத்துகிறார்கள்” என்பது போன்ற பல்வேறு பரப்பரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருக்கிறார் நடிகை குஷ்பு. இந்நிலையில், பாஜகவின் ஓ.பி.சி பிரிவு மாநிலத் துணைத்தலைவரும், நடிகருமான ஆர்.கே சுரேஷிடம் பேசினோம்,

குஷ்பு பாஜகவில் இணைந்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

குஷ்பு ஆளுமையான பெண்மணி. காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பேச்சாளர். எல்லோருக்கும் தெரிந்த முகம். அவர், பாஜகவில் இணைந்தது வரவேற்புக்குரியது. மிகப்பெரிய வரவாகத்தான் பார்க்கிறோம். அவருக்கு பாஜகவில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. எங்கள் தலைவர் முருகன் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் சரியான நேரத்தில் குஷ்புவை கட்சியில் இணைத்திருக்கிறார். இதுவே, எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிதான். எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

திமுக, காங்கிரஸ் கட்சிகளில் கிடைக்காத பெரிய பதவிகள் பாஜகவில் கிடைக்கும் என்பதால்தான் குஷ்பு இணைந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறதே?

சினிமா அரசியல் இரண்டிலுமே குஷ்பு சிறந்து விளங்கியவர். தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பவர். அரசியலில் அவருக்கு ஏற்கனவே பல வருட அனுபவம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் கிடைக்காத மிகப்பெரிய சப்போர்ட் குஷ்புவுக்கு பாஜகவில் கிடைக்கும். அதில், மாற்றுக்கருத்தே இல்லை. அதோடு, 100 சதவீதம் பெரிய பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையும், எங்கள் தலைவரின் முழு சப்போர்ட்டும் அவருக்கு இருக்கும். பாஜகவை நம்பி வரும் திறமையானவர்களுக்கு நல்ல பதவிகளையும் முக்கியத்துவத்தையும் கட்சி கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. எனக்கு ஓ.பி.சி அணியின் துணைத்தலைவர் பதவி கொடுத்தார்கள். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு துணைத்தலைவர் பதவி கொடுத்தார்கள். குஷ்புவும் தேசியளவிலான பொறுப்பில் இருந்ததால், அவருக்கும் அதுபோன்ற முக்கியமான பதவியை வழங்குவார்கள்.

ஆனால், குஷ்பு  தொடர்ச்சியாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்த்திருக்கிறாரே?

எல்லா அரசியல்வாதிகளுக்கும் இது பொதுவானது. காலத்தின் கட்டாயத்தால் பிரதமரின் மக்கள்நலத் திட்டங்களை புரிந்துகொண்டு குஷ்பு கட்சியில் இணைந்திருக்கிறார். அதனால், அவர் முன்பு விமர்சித்ததையெல்லாம் இப்போது பேச வேண்டாம். இனிமேல் இருப்பதை பாஸிட்டிவாக நினைத்து பேசுவோம். இனி பாஜக இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் ஏழை  மக்களின் வளர்ச்சிக்காகவும் பிரதமர் கடுமையாக உழைத்து வருகிறார். இவை எல்லாமே மக்கள் மத்தியில் பெரியளவில் ரீச் ஆகியுள்ளது. வெகு விரைவில் தமிழகத்திலும் பிரதமரால் பயனடைந்தோம் என்று சொல்லியே மக்கள் வாக்களிக்கப்போகிறார்கள். அதற்கான நேரமும் காலமும் வந்துவிட்டது.

பாஜக தனித்து போட்டியிடும் சூழ்நிலை வந்தால் குஷ்புதான் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் என்கிறார்களே?

எதையும் இப்போது சொல்ல முடியாது. வருங்காலத்தில் எல்லாமே தெரியும். ’தாமரை மலராது, மலராது’ என்று சொன்னவர்கள் தாமரை மலர்வதை இனி தடுக்கவே முடியாது. தாமரை மலராது என்று பொறாமையில் சொல்கிறார்கள். தாமரை தமிழகத்தில் ஆல்ரெடி மலர்ந்துவிட்டது. குஷ்புவும் சேர்ந்து தமிழகத்தில் தாமரையை மலரவைப்பார். தினமும் பாஜகவில் 5000 பேருக்குமேல் இணைந்துகொண்டே இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது உற்சாகமாக இருக்கிறது. எங்களின் பலம் இன்னும் கூடியிருக்கிறது. பாஜகவில் இன்னும் பல நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்  சேருவார்கள். அதற்கான, பேச்சுவார்த்தைப் போய்க்கொண்டிருக்கிறது.

’குஷ்பு  பாஜகவில் விரும்பி சேரவில்லை. அவரது கணவர் சுந்தர் சியின் அழுத்தத்தால்தான் சேர்ந்திருக்கிறார்’ என்று சொல்லப்படுகிறதே?

குஷ்பு நீண்டநாள் ஆலோசித்தே பாஜகவில் இணைந்திருக்கிறார். அவரின் கணவர் சுந்தர் சியை ஏன் இதில் இழுக்க வேண்டும்? குஷ்புவுக்கு பல வருட அரசியல் அனுபவமும் அரசியல் அறிவும் இருக்கிறது. இப்போதுதான்,  சரியான கட்சியில் சரியான முடிவை எடுத்து இணைந்திருக்கிறார். வேண்டுமென்றால், கணவர் என்கிற முறையில் குஷ்பு கண்டிப்பாக சுந்தரி சியிடம் ஆலோசனை கேட்டிருப்பார். அவரும் ஒரு சப்போர்ட் செய்திருப்பார். அவ்வளவுதான் இருக்குமே தவிர, இது குஷ்புவின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கான ஒரு தனிப்பட்ட முடிவு.

தொடர்ச்சியாக நடிகர்களாகப் போய் பாஜகவில் இணைகிறீர்களே?

நான் எந்த கட்சியில் சேர்ந்திருந்தாலும் இவ்வளவு மரியாதை கிடைத்திருக்காது. பாஜகவில் நடிகர்களுக்கு மிகச்சிறந்த மரியாதை கிடைக்கிறது. இல்லையென்றால் சும்மா யாராவது சேருவார்களா சொல்லுங்கள்? பாஜக தேசியக் கட்சியாக இருந்தாலும் மாநிலத்தில் நடிகர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கிறார்கள். அரசியலிலும் முழு சப்போர்ட் செய்து நம்மை பயன்படுத்திக் கொள்கிறார்கள். பாஜகவின் கொள்கைகள், பிரதமரின் மக்கள்நலத் திட்டங்கள், அவர் மீதான ஒரு நம்பிக்கை போன்றவற்றால்கூட நடிகர்கள் இணையலாம். பாஜகவில் ஏதோ ஒரு விஷயம் இருக்கவேதான், தொடர்ச்சியாக இணைகிறார்கள்.

ஆனால், தமிழகத்தில் மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ளவில்லையே? இது பெரியார் பூமி என்கிறார்களே?

இது என்ன பூமி ஆகப்போகிறதென்று இனிமேல் பாருங்கள். நாங்கள்  வரும் சட்டமன்றத் தேர்தலில் 70 தொகுதிகள் வரை வெற்றிபெறுவோம். ஜனவரிக்குப் பிறகு முழு மூச்சாக அரசியல் பணிகளுக்காக நான்கு மாதம் ஒதுக்கி பாஜகவை வளர்க்க களப்பணியாற்றவிருக்கிறேன். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

- வினி சர்பனா