சிறப்புக் களம்

அதிகரிக்கும் மனிதன் - புலி மோதல்கள்! தடுப்பது எப்படி? சர்வதேச புலிகள் தின சிறப்பு பகிர்வு!

webteam

நாட்டிலேயே அதிக புலிகள் வாழும் பகுதி என்ற பெருமையை முதுமலை, பந்திப்பூர், நாகர்ஹோலே மற்றும் முத்தங்கா வனப்பகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி வனப்பகுதி பெற்றுள்ள போதிலும், சமீபகாலமாக இந்த பகுதிகளில் மனித - புலி மோதல்கள் அதிகரித்து வருவது வன உயிரின ஆர்வலர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மோதல் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? எதிர்காலத்தில் அதனை எவ்வாறு தவிர்ப்பது? என்பது குறித்து சர்வதேச புலிகள் தினமான இன்று இந்த தொகுப்பில் பார்ப்போம்.

அதிக புலிகள் வாழும் நீலகிரி உயிர்க்கோள காப்பகம்!

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிடபட்ட தேசிய புலிகள் கணக்கெடுப்பு விபரங்களின் படி இந்தியாவில் மொத்தம் 2,927 புலிகள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டு இருக்கிறது. அதில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களின்படி நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் நாகர்ஹோலே தேசிய பூங்கா, கேரள மாநிலம் முத்தங்கா வனச்சரணாலயம் வனப்பகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி உயிர்கோள காப்பகத்தில் (Nilgiri Biosphere Reserve) அதிக எண்ணிக்கையிலான புலிகள் உயிர் வாழ்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி உயிர்கோள காப்பகத்தில் சுமார் 436 புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பு விபரங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த பகுதியில் புலிகள் அதிகளவில் உயிர் வாழ்வது ஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும், சமீபகாலமாக இங்கு மனித - புலிகள் இடையே ஏற்பட்டு வரும் மோதல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

மறக்க முடியுமா T23 புலியை?

கடந்த ஆண்டு மசினகுடி பகுதியில் உயிருடன் பிடிக்கப்பட்ட T23 புலியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கிட்டத்தட்ட 21 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் அந்த புலியை உயிருடன் பிடித்தனர். நீதிமன்ற வழக்கு, வன உயிரின ஆர்வலர்களின் ஆதரவு குரல் என ஒட்டுமொத்த நாட்டையே மசினகுடி பக்கம் திருப்பியது T23. T23 புலி உயிருடன் பிடிபடுவதற்கும் முன்பாக அது 4 மனிதர்களை கொன்றது. அதுமட்டுமல்லாமல் 50க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்று இருந்தது. வயது முதிர்வு காரணமாக வனப்பகுதியில் உள்ள மற்ற பலம் வாய்ந்த ஆண் புலிகளால் அடித்து விரட்டப்பட்டு வேறு வழியின்றி ஊருக்குள் புகுந்து மனிதர்களையும் கால்நடைகளையும் வேட்டையாடும் நிலைக்கு அந்த புலி தள்ளப்பட்டிருந்தது.

ஊருக்குள் வாழ்விடத்தை ஏற்படுத்தும் புலிகள்:

T23 புலி பிடிக்கப்பட்டாலும் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் வரும் புலிகளின் எண்ணிக்கையும் குறைந்த பாடில்லை. உதாரணமாக புலிகள் காப்பகம் வனப்பகுதியில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊட்டி நகரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மார்லிமந்து அணை பகுதியில் புலி நடமாட்டத்தை வனத்துறை உறுதி செய்து இருக்கிறது. இந்த வனப்பகுதியில் எப்படி புலி தனது வாழ்விடத்தை ஏற்படுத்திக் கொண்டது என பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

வயது முதிர்வால் வனத்தை விட்டு வெளியேறுகிறதா புலிகள்?

இதேபோன்று நீலகிரி உயிர்க்கோள காப்பகத்திற்கு உட்பட்ட கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முத்தங்கா வனச் சரணாலயத்திலும் மனிதர்கள் மற்றும் புலிகள் இடையே ஏற்படக்கூடிய மோதல் அன்றாட நிகழ்வாக மாறி இருக்கிறது. கடந்த வாரம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள கிராமத்தில் ஊருக்குள் புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய புலி கூண்டு வைத்து அந்த மாநில வனத்துறையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டது. வயநாடு மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் வனத்தை விட்டு வெளியேறிய இரண்டு புலிகள் கூண்டு வைத்து உயிருடன் பிடிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறு பிடிக்கப்பட்ட இரண்டு ஆண் புலிகளும் வயது முதிர்வு காரணமாக வனப்பகுதிக்குள் வாழ முடியாமல் உடலில் காயங்களுடன் உணவிற்கு வழி இன்றி கால்நடைகளை வேட்டையாடியது தெரியவந்தது.

அதிகரிக்கும் மனிதன் - புலி மோதல் சம்பவங்கள்:

இதே போல நீலகிரி உயிர்க்கோள காப்பகத்திற்கு உட்பட்ட கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்த ஆண் புலி ஒன்று கடந்த 10 தினங்களுக்கு முன்பு இருவரை தாக்கியது. உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த அந்த புலி அடுத்த தினமே கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கப்பட்டது. பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டிய கிராமங்களிலும் புலிகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துக் காணப்படுகிறது. வயநாட்டில் உயிருடன் பிடிக்கப்பட்ட புலிகள் அங்கு உள்ள வனவிலங்குகள் மீட்பு மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதே போல கர்நாடகாவில் பிடிக்கப்பட்ட புலியும், T23 புலியும் தற்சமயம் மைசூரில் உள்ள வனவிலங்குகள் மீட்பு மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் உயிரிழப்பை தவிர்க்கலாம்!

புலிகள் வனத்தை விட்டு ஊருக்குள் வருவதற்கு புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறதா அல்லது அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறதா என்ற கோணங்களில் கேள்விகள் பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் வரும் காலங்களில் புலிகள் மற்றும் மனிதர்களிடையே ஆன மோதல் என்பது பல மடங்கு அதிகரிக்கும் எனவும், அதனை நவீன தொழில்நுட்பங்களை கொண்டு கையாள்வதற்கு நாம் தயாராக வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் வேண்டுகோளாக வைக்கின்றனர். உதாரணமாக T23 பபுலி பிடிக்கப்படுவதற்கு ஒரு ஆண்டிற்கு முன்பு மசினகுடியில் வைத்து மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை தாக்கி கொன்றது.

அன்றைய தினமே வனத்துறை உரிய ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் அதன் பிறகு மூன்று உயிர்களை நாம் பலி கொடுத்திருக்க வேண்டிய தேவையில்லை. அதே நேரம் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உணவு தேடி ஊருக்குள் வரும் புலிகள் மனிதர்களை தாக்குவதற்கு முன்பாக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வனத்துறை அவைகளை உயிருடன் பிடித்து அப்புறப்படுத்தி விடுகிறது. நவீன தொழில்நுட்பகளை பயன்படுத்தி புலி மற்றும் மனிதர்கள் இடையேயான மோதல்களை தவிர்ப்பதில் தமிழக வனத்துறை சற்று பின்னோக்கி இருப்பதாக வன உயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மக்களும் அலட்சியமாக நடக்கக் கூடாது! உயிர் முக்கியமல்லவா?

அதேநேரம் வனத்தை ஒட்டி வசிக்கக்கூடிய மக்களும் புலிகள் நடமாட்டம் இருக்கிறது என தெரிந்தும் அலட்சியமாக இருப்பதே மனித உயிர்கள் பலியாவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஊட்டி அருகே உள்ள மார்லிமந்து அணை பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்பும் மக்கள் எவ்வித பயமும் இன்றி அங்கு மீன் பிடிப்பதும், சுற்றுலா செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஒருவேளை புலி அப்பகுதியில் ஒருவரை தாக்குமே என்றால் அந்த புலியின் மீது ஆட்கொல்லி என்ற பழியை போட்டு அதனை சுட வேண்டும் அல்லது பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். புலி இருப்பதை அறிந்து நாம் அப்பகுதிக்கு செல்லாமல் தவிர்த்தால் தானே மனித உயிர்களும் பாதுகாக்கப்படும் அதே நேரம் புலிகளும் பாதுகாக்கப்படும் என அவர்கள் கூறுகின்றனர்.

உணவுச் சங்கிலியை உறுதிசெய்யும் புலிகளை காப்போம்!

உணவுச் சங்கிலியை உறுதிசெய்யும் புலிகளை பாதுகாப்பதன் மூலமே இயற்கை வளம் பாதுகாக்கப்படும். எனவே, வனத்தையொட்டி கிராமங்களில் வசிக்கும் மக்கள், வன உயிரினங்களின் இயல்பை நன்கு புரிந்து கொள்வது அவசியம் என்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள். புலிகள் - மனித மோதல்களுக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வை எட்ட வேண்டும் என்றும், புலிகள் பாதுகாப்புக்கான நிதியை முழுமையாக செலவிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.