என்ன ஆச்சு பந்த் உங்களுக்கு?
2025 ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய லக்னோ அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட்களை இழந்து 209 ரன்களை எடுத்தது. 210 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி அசத்தலான ஆட்டத்தின்மூலம் 9 விக்கெட்களை இழந்து 211 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
லக்னோ அணியால் 27 கோடிக்கு வாங்கப்பட்ட அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்தின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது என்பதைக் காண ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் இருந்தனர். ஆனால், பேட்டிங், கீப்பிங், கேப்டன்ஷிப் என சகல விஷயங்களிலும் கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றியுள்ளார் பந்த். டெல்லியின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்துக் கொண்டிருந்தது மிட்செல் மார்ஷ் மற்றும் பூரன் இணை. எதிர்பாராத சூழலில் மார்ஷ் வெளியேற ரிஷப் பந்த் உள்ளே வந்தார். முதல் இரண்டு பந்துகளில் டாட். பின் ஸ்ட்ரைக் ரொட்டேஷன்.
ஸ்ட்ரைக்கில் பூரன் இருந்தார். ஸ்டப்ஸ்க்கு இனி தனது வாழ்நாளில் பந்து வீச வேண்டுமென்ற ஆசையே எழாதபடி செய்துவிட்டார் பூரன். ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என 27 ரன்கள் கிடைத்தது. பின் மீண்டும் பந்த் ஸ்ட்ரைக்கிற்கு வர, குல்தீப் யாதவ் பந்துவீச வந்தார்.
ஏற்கனவே நமக்கும் குல்தீப்பிற்கும் ஆகாது என்று தெரியும். போன ஓவரில்தான் 28 ரன்கள் கிடைத்துள்ளது. ஆனாலும், அடித்து ஆடத்தான் பந்த் முயன்றார். ஆனாலும், தொடர்ச்சியாக மூன்று பந்துகள் டாட் ஆனது. பின் பந்த் அருகே சென்ற பூரன் ஏதோ அறிவுரை கூறினார். அதற்குப் பிறகாவது ஸ்ட்ரைக் ரொடேட் செய்திருக்கலாம். ஆனால், அடுத்த பந்தை தூக்கி அடித்தார், வெளியேறினார். 6 பந்துகள் ஆடி ஒரு ரன்கூட எடுக்காமல் பந்த் வெளியேறியது அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பேசியுள்ள அம்பத்தி ராயுடு, பந்த் தனது ஷாட் தேர்வில் கவனம் செலுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். சரி பேட்டிங்கில் இன்று நமக்கான நாள் இல்லை. தலைவன் கேப்டன்ஷிப்பிலும், கீப்பிங்கிலும் பார்த்துக்கொள்வார் எனக் காத்திருந்தனர் அவரது ரசிகர்கள்.
அங்கும் சோகம்தான் மிச்சம்.
டெல்லி பேட்டிங் செய்தபோது முதல் ஓவரை ஷர்துல் தாக்கூர் அற்புதமாக வீசினார். இன்னிங்ஸின் மூன்றாவது பந்து, ஐந்தாவது பந்து என ஒரே ஓவரில் மெக்கர்க், அபிஷேக் போரல் என வெளியேறினர். இரண்டாவது ஓவரை மணிமாறன் சித்தார்த் வீசினார். அந்த ஓவரில் 2 ரன்களுடன் சமீர் ரிஸ்வியின் விக்கெட்டும் கிடைத்தது. மீண்டும் ஷர்துல் தாக்கூரை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், திக்வேஷ் ரதி என்ற வலதுகை லெக் ப்ரேக் பந்து வீச்சாளரைக் கொண்டு வந்தார் பந்த். டூப்ளஸிஸ்க்கு எதிரான வியூகம் இது என்று வைத்துக்கொண்டாலும்கூட, அந்த ஓவரில் தான் ஒரு சிக்சர், இரு பவுண்டரிகள் என டெல்லி அணி அடுத்த கியருக்கு மாறியது. பின் அடுத்த ஓவரை மணிமாறன் சித்தார்த் வீச அந்த ஓவரிலும் ஒரு சிக்சர்கள் இரு பவுண்டரிகள் போனது. இதனை அடுத்து தாக்கூர் பந்து வீசினார் என்றாலும் செட்டான பேட்ஸ்மேன்களை என்ன செய்துவிடமுடியும்.
போட்டியின் கடைசி ஓவரில், கடைசி விக்கெட்டுக்கான ஸ்டெம்பிங் வாய்ப்பைத் தவறவிட்டார். 2 ஓவர்களை வீசி இரு விக்கெட்களையும் வீழ்த்தி இருந்த ஷர்துல் தாக்கூருக்கு அடுத்து ஓவரே கொடுக்கப்படவில்லை. இன்னிங்ஸின் இறுதியில், அதாவது 16 ஆவது ஓவரில் ப்ரின்ஸ் யாதவ்க்கு ஓவரைக் கொடுத்தார். அதற்கு முந்தைய தனது இரு ஓவர்களை நன்றாகவே வீசியிருந்தாலும் 16ஆவது ஓவரில் 20 ரன்களைக் கொடுத்தார். அவரது பந்துவீச்சை எதிரணியினர் எளிதாக ஆடுகிறார்கள் என்பதைக் கண்டபின்பும் மீண்டும் 19 ஆவது ஓவரைக் கொடுத்தார். இந்த ஓவரிலும் 16 ரன்களை டெல்லி அணியினர் சேர்த்தனர்.
113/6 எனும் மோசமான நிலையில்தான் டெல்லி அணி இருந்தது. அடுத்த 45 பந்துகளில் கிட்டத்தட்ட 100 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அதை லக்னோ பந்துவீச்சாளர்கள் சாத்தியமாக்கிக் கொடுத்தார்கள்.. இல்லை, பந்த் சாத்தியமாக்கிக் கொடுத்தார். த்ரில் வெற்றியையாவது பெற்றிருக்க வேண்டிய லக்னோ அணி அநியாயமாக கோட்டை விட்டிருக்கிறது.