சிறப்புக் களம்

கொரோனா கால மாணவர் நலன் 20: குழந்தைகளுக்காக மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறை

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் ஒமைக்ரான் திரிபு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் 18 வயதுக்குட்பட்டோருக்கான புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தொகுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழு விவரங்களை பற்றியே இந்த அத்தியாய கொரோனா கால மாணவர் நலன் அமையவுள்ளது.

முதலில் மத்திய அரசு வலியுறுத்துவது கொரோனா தடுப்புக்கான அடிப்படை விஷயங்களான - ‘குறைந்தபட்சம் 2 மீட்டருக்கான சமூக இடைவேளியை பின்பற்றுவது, அடிக்கடி கைகளை கழுவுவது, முறையாக மாஸ்க் அணிவது, முடிந்தவரை காற்றோட்டமான இடங்களில் பணிபுரிவது’ போன்றவற்றை. அதைத்தொடர்ந்து, 18 வயதுக்குட்பட்டவர்களில் 15 -18 வயதிலுள்ளோர் தங்களுக்கான தடுப்பூசியை முறையாக எடுத்துக்கொள்வதையும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, குழந்தைகளில் எப்படியான கொரோனா அறிகுறிகளை எதிர்கொள்கின்றனர் என்பதையும், அதைவைத்து அவர்களுக்கு என்னமாதிரி சிகிச்சை தேவை நிலவுகிறது என்பதையும் பட்டியலிட்டுள்ளது அரசு. அவை இங்கே,

* அறிகுறிகளற்ற கொரோனா நோயாளி:

அறிகுறிகள் - இருக்காது.

சிகிச்சை எடுக்கும் இடம் - வீட்டுத்தனிமையும், ஆன்லைன் வழியான மருத்துவ வழிகாட்டுதலும் போதுமானது.

சிகிச்சையின்போது தேவைப்படுவது -

பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறு குழந்தையெனில், பெற்றோர் ஒருவரும் குழந்தையுடன் சேர்த்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு கவனித்துக்கொள்ள வேண்டும்.

இவர்களுக்கு மருந்துகள் ஏதும் தேவைப்படாது.

மாஸ்க், தனி மனித இடைவெளி போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, திரவ வடிவ உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு.

* லேசான அறிகுறிகள் தெரியவரும் கொரோனா நோயாளி

அறிகுறிகள் - வறண்ட தொண்டை, இருமல்

சிகிச்சை எடுக்கும் இடம் - வீட்டுத்தனிமையும், ஆன்லைன் வழியான மருத்துவ வழிகாட்டுதலும் போதுமானது. தேவைப்படும்பட்சத்தில் கொரோனா கேர் செண்டரில் தங்கவைக்கவும்.

சிகிச்சையின்போது தேவைப்படுவது -

காய்ச்சல் இருந்தால், 4 - 6 மணி நேர இடைவேளையில் மருத்துவர் அறிவுரையுடன் பாராசிட்டமால் மாத்திரை

உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, திரவ வடிவ உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்கவும்.

மூச்சுவிடுவதில் சிரமமேதும் உள்ளதா என பரிசோதிக்கவும். போலவே உடலில் ஆக்சிஜன் அளவு, உடல் வெப்பநிலை உள்ளிட்டவற்றை பரிசோதிக்கவும்.


* மிதமான அறிகுறிகள் தெரியவரும் கொரோனா நோயாளி

அறிகுறிகள் - கொரோனாவுக்கான அடிப்படை அறிகுறிகளுடன், நிமோனியாவுக்கு சில அறிகுறிகள் தென்படலாம். உடன் மூச்சுத்திணறல் சார்ந்த சிக்கல்கள் தெரியக்கூடும்.

சிகிச்சை எடுக்கும் இடம் - பிரத்யேக கோவிட் சுகாதார மையம் (Dedicated COVID Health Centre) அல்லது கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கவும்

சிகிச்சையின்போது தேவைப்படுவது -

உடலில் ஆக்சிஜன் அளவு குறையக்கூடும். ஆகவே அதை சீர்படுத்த வேண்டியிருக்கும்.

உடலில் நீர்ச்சத்து அளவு குறையக்கூடும் என்பதால் அதற்கான சிகிச்சைகள் தேவைப்படும்.

உடல் உஷ்ணம் அதிகரிக்கக்கூடும் என்பதால், பாராசிட்டமால் கொடுக்க வேண்டியிருக்கும்.

பாக்டீரியல் தொற்று பிரச்னை தெரியவந்தால், அதுசார்ந்த சிகிச்சை தேவைப்படும்.

இவற்றுடன், சம்பந்தப்பட்ட குழந்தை ஒருவேளை வாழ்வியல் நோயாளியாக இருந்தால் அதற்கான கூடுதல் சிகிச்சைகளும் கவனிப்பும் தேவை.

* தீவிர அறிகுறிகள் தெரியவரும் கொரோனா நோயாளி

அறிகுறிகள் - நிமோனியாவுக்கான அறிகுறிகள், தீவிர சுவாச பிரச்னைகள், உடல் உறுப்பு சார்ந்த பிரச்னைகள், நிமோனியாவுடன் கூடிய நெஞ்சுப்பகுதி பிடிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள்

சிகிச்சை எடுக்கும் இடம் - கொரோனா மருத்துவமனையில் ஐ.சி.யூ/ஹெச்.டி.யூ.-வில் அனுமதிக்க வேண்டியிருக்கும்

சிகிச்சையின்போது தேவைப்படுவது - உடனடி ஆக்சிஜன் தெரபி தேவை; ஸ்டீராய்ட்ஸ் உள்ளிட்ட மருந்து மற்றும் சிகிச்சைகளும் தேவை என்பதால் உடனடி மருத்துவ கண்காணிப்பு அவசியம்.

இவற்றுடன், இந்த அலை கொரோனாவில் என்ன மாதிரியான அறிகுறிகள் குழந்தைகளுக்கு அதிகம் தென்படுகிறது என்பது குறித்தும் அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த அலை கொரோனாவில் பொதுவான கொரோனா அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், சளி, வறண்ட இருமல், தொண்டை எரிச்சல், உடல் வலி அல்லது தலைவலி ஆகியவற்றுடன் சேர்த்து உடல் பலவீனம், வயிற்றுப்போக்கு, பசியின்மை, வாந்தி, தலைசுற்றல், சுவையின்மை, வாசனையின்மை ஆகியவை இணைந்துள்ளன.

இந்தப் பட்டியலுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றுவதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியுமென்றும் அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பதன்மூலம், மேற்கொண்டு ஏற்படும் பாதிப்புகளை நம்மால் தவிர்க்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றைய சூழலில், பல குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் மிகவும் குறைவாகவே தெரிகின்றதென கூறப்பட்டுள்ளது. ஆகவே அச்சம் வேண்டாமென்றும், வருமுன் தடுப்பதே சிறந்தது என்றும் கூறப்படுகிறது.