சுற்றுலாத் துறையில் கிராமத்து வாழ்க்கை அனுபவம் என்ற கருத்துருவை நாட்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது கேரளா. அந்த சுற்றுலா திட்டத்தின் பெயர் ‘ரெஸ்பான்சிபில் டூரிஸம் மிஷன்’. தொழில்மயமாக்கலின் இருண்ட கரங்கள் படியாத, நகர்ப்புற நுணுக்கங்களுக்குள் அடங்காத கேரளாவின் கிராமப்புற வாழ்க்கை அசலான, அமைதியான, உள்ளூர் அனுபவத்தை சுற்றுலாவாசிகளுக்கு வழங்குகிறது.
தற்போது ‘ரெஸ்பான்சிபில் டூரிஸம் மிஷன்’ உலகமெங்கும் பாராட்டுதலை பெற்று வருகிறது. இந்த மிஷன் அரை நாள் மற்றும் முழு நாள் கிராமிய வாழ்க்கை அனுபவ பேக்கேஜை அளிக்கிறது. மனநிறைவும் அமைதியும் நிரம்பியுள்ள உலகத்திற்குள் நம்மை இந்த கிராமங்கள் அழைத்துச் செல்கின்றன.
குமரகம்
பசுமையும். நீல நிற ஆகாயமும் சேர்ந்து சுற்றுலாவாசிகளை வரவேற்கிறது குமரகம். ‘கடவுளின் தோட்டம்’ என அழைக்கப்படும் குமரகம் வயல்வெளிகளில் நடந்து செல்லும் போது நமக்கு செறிவான அனுபவமாக இருக்கிறது. இங்குள்ள தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் வெதுவெதுப்பான கள் அருந்தும் போது நமக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது (கேரளாவில் கள், போதைப் பொருளாக அல்லாமல் உணவுப்பொருளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு கள் இறக்குவதற்கும் அருந்துவதற்கும் தாரளமாக அனுமதி உண்டு). குமரகத்தில் உள்ள நீர் நிலைகளில் படகுச் சவாரி செய்வது நமக்கு தனித்துவ அனுபவத்தை வழங்குகிறது. நிச்சயம் இது நம் மனதில் வாழ்நாள் முழுவதும் நீங்காமல் இருக்கும்.
கேரளாவின் வலை மீன்பிடித்தல் முறையை காண்பதற்கு உண்மையிலேயே மிக அருமையான ஒன்று. கடல் மற்றும் நன்னீரில் வாழும் கரிமீன், பெரிய இறால் மிகவும் சுவையானதாக இருக்கும். அதன் பாரம்பரிய சுவையில் நாம் மூழ்கிவிடுவோம். தேங்காய் நார், பனை நார்களைக் கொண்டு கைகளால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் பார்வையாளர்களை பரவசமூட்டும். சிறந்த கைவினைக் கலைஞர்களை கொண்டு தயாராகும் இந்த கலைப் பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? இந்த தயாரிப்பு முறை காலங்காலமாக கைவினை கலைஞர் குழு எவ்வாறு தொடர்கிறது என்பதையும் நேரில் தெரிந்துகொள்ள ஒரு பொன்னான வாய்ப்பைத் தருகிறது குமரகம்.
கேரளாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த சிறிய குக்கிராமத்தில், 14 ஏக்கர் பரப்பளவில் குமரகம் பறவைகள் சரணாலயம், விவசாயம், படகு குழாம் மற்றும் மீன்பிடி துறைமுகம் ஆகியவை அமைந்துள்ளன. குமரகத்தின் மயக்கும் அழகினைக் காண வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, இதனை சிறப்பு சுற்றுலா பகுதியாக அறிவித்துள்ளது கேரள அரசு.
கண்ணூர்
அழகிய பசுமை வனப்பிற்காகவும், அமைதியான நீல வானத்தின் தோற்றத்திற்காகவும் பிரபலமானது கண்ணூர். கிழக்குத் திசையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளாலும், மேற்கே லட்சத்தீவு கடலாலும் பாதுகாக்கப்பட்ட இப்பகுதி கண்களுக்கு விருந்தளிக்கும் சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. பழங்காலத்தில் தொழில் துறைமுகமாகவும் விளங்கியது கண்ணூர். இங்குள்ள அரக்கல் அருங்காட்சியகம் கேரளாவின் ஒரே முஸ்லீம் மன்னர் பரம்பரையினால் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. முத்தப்பன் கோவில் மற்றும் முழுப்பிலங்காடு கடற்கரை அந்த மாவட்டத்திற்கே அழகூட்டுகிறது.
வழக்கமான இடங்களைத் தவிர்த்து, ‘ரெஸ்பான்சிபில் டூரிஸம் மிஷன்’ மூலம் கண்ணனூரில் உள்ள கிராமங்களிடையே அதன் மக்களின் வாழ்க்கை முறையோடு இணைந்த ஒரு மிகச்சிறந்த பயணத்தை மேற்கொள்ள முடியும். புத்துணர்வு அடைந்தது போன்றதொரு அனுபவத்தைக் கொடுக்கும் இரவு கூடாரங்கள் மற்றும் மூங்கில் படகுகளில் தங்கும் வசதிகள் இங்கே வழங்கப்படுகின்றன.
இங்கிருக்கும் அமைதியான கிராமங்கள் வழியாக மேற்கொள்ளும் நடைபயிற்சி ஒரு வசதியான, இன்னும் அற்புதமான அனுபவம். பல சாகச நிகழ்ச்சிகள் மற்றும் மலையேற்றங்களுக்காக கேரளாவிலேயே கண்ணூர் சுற்றுலாதலம் விரும்பப்படுகிறது. ‘கடவுளின் உணவு’ என்று அறியப்படும் கோக்கோ பழங்கள் விவசாய நில பார்வையிடலின்போது பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
கண்ணூர் தறிகளின் நகரம் ஆகும். அதன் பெருமை மிகுந்த கைத்தறிதொழில் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. அந்நகரத்தின் கைத்தறிகள் கேரள பாரம்பரிய மற்றும் கலாசாரத்தை பற்றி விளக்குகிறது. புடவைகள், வேட்டிகளின் வண்ணங்கள் மற்றும் டிசைன்கள் பார்வையாளர்களை மிகவும் கவரும். இங்கிருக்கும் இயற்கை சூழலும், தென்னங்கீற்று பின்னுவதை காண்பதும் இயற்கை விரும்பிகளை கவர்ந்திழுக்கும்.
மேலும், ரப்பர் தோட்டங்களில் சாகுபடி முறைகள், பால் வடித்தல் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பை அளிக்கிறது. கண்ணூரின் மற்றொரு பிரபலமான விஷயம் நண்டு பிடித்தல் உள்ளிட்ட கேரளத்தின் பாரம்பரிய தொழில்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியம்.
கண்களுக்கு விருந்தளிக்கும் கடற்கரைகள், மலைப்பிரதேசங்கள், உப்பங்கழி, நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆன்மீக தளங்கள் அனைத்தும் ஒருங்கே அடங்கியுள்ள கண்ணூர் உண்மையிலேயே சிறந்த சுற்றுலா தலத்திற்கான அனைத்து தகுதிகளுடனேயே அமைந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அதன் கைத்தறி தொழில், துடிப்பான நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நாட்டுப்புற இசையினாலும் புகழ் பெற்றுள்ளது. தெய்யம் மற்றும் தீயாட்டம் ரெண்டும் அம்மாவட்டத்தின் பிரபலமான சடங்கு முறையாகும்
கேரளாவின் பெருமையான பழங்கால தற்காப்பு கலையான கலரி பயட்டு உலகம் முழுவதும் மதிக்கப்படும் ஒரு உன்னத சண்டை கலையாகும். கண்ணூர் இதனை கண்டு ரசிக்கும் வாய்ப்பினை அங்கு வரும் பயணிகளுக்கு அளிக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட கண்ணூர் மாவட்டம் அங்கு வரும் பயணிகளை எந்த விதத்திலும் ஏமாற்றாது. அங்கு ஒளிந்திருக்கும் பல்வேறு அதிசயங்களைக் கண்டுகளித்து மனநிறைவுடன் செல்லும் ஒரு அற்புதமான சுற்றுலா தலம்.
பேக்கல்
கேரளாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பேக்கல்லில் சூரியன் முத்தமிடும் கடற்கரைகள், பிரமாண்டமான அரண்மனைகள் ஆகியவை அமைந்துள்ளன. அதிகம் அறியப்படாத இந்த இடம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.
இந்த பேக்கேஜில் முந்திரிப் பதனிடல் பகுதி, தேங்காய் மரம் ஏறுதல், கள்ளி தட்டுதல், கடலில் வலை வீசி மீன்பிடித்தல் மற்றும் பேக்கல் கோட்டைக்கு வருகை ஆகியவை அடங்கும். மண்பாண்டம் செய்தல், கீற்றுப் பின்னுதல் மற்றும் பன ஓலையில் பாய் தயாரித்தல் ஆகியவற்றைக் கண்டு ரசிக்க முடியும். இந்த பேக்கேஜின் ஒரு பகுதியாக, சுற்றுலா பயணிகள் தெய்யம் எனப்படும் சடங்கின் கலை வடிவத்தினைப் பார்த்து ரசிக்க முடியும்..
பேக்கல் அதன் சிறப்பம்சமாக சந்திரகிரி நதி, பசுமையான நெல் வயல்கள், தென்னந்தோப்புகள், வாழைத் தோட்டங்கள், மீனவர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் பயணிகளுக்காக காத்திருக்கிறது. கலை, களிமண் மண்பாண்டம் மற்றும் பைன் நெசவு போன்றவற்றை விரும்புகிறவர்கள் நிச்சயமாக பேகல் வழங்கிய அனுபவத்தால் ஈர்க்கப்படுவார்கள்.
பேக்கல் கோட்டை அதன் வடிவமைப்பிற்காகவும் பெருமைக்காகவும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேக்கல் கோட்டை ஒரு பெரிய சாவி துவாரம் போன்ற வடிவமைக்கப்பட்டுள்ளது.. இந்த வரலாற்று நினைவுச்சின்னம் அதன் உயரமான கோபுரங்களிலிருந்து அரபிக்கடலின் அற்புதமான காட்சியை நமக்கு அளிக்கிறது.
வித்ரி
குடைந்து செல்லும் காடுகள் வழியே செல்லும் ஒரு சுகானுபவ பயணத்தை இங்கு அனுபவிக்கலாம். வித்ரியில் கிடைக்கும் சுவையான உணவு வகைகளும், பழங்குடிகளின் கைவினைப் பொருட்களும், வாத்தியங்களும் புதிய அனுபவமாக இருக்கும். இந்த இயற்கை அழகைத் தாண்டி வரலாற்றுச் சின்னங்களும் இங்கு மிகப் பிரசித்தம்.
மிகப்பெரும் சுதந்திர போராட்ட தியாகிகள் இங்கு பிறந்துள்ளனர். அதிலும் மிகவும் பிரபலமான கொரில்லா போர் தந்திர முறையை நடத்தியவரான பழசி ராஜா இங்குதான் பிறந்தார். இவர் வயநாடு பழங்குடி இன இளவரசருக்கு பல உதவிகளை அளித்துள்ளார். இங்குள்ள பழைமையான வாழ்க்கை முறையையும் ஆயுதங்களையும்கூட கண்டு களிக்கலாம். மசாலா தோட்டங்கள், பழங்குடி கலை மையம், ஊராவ் மூங்கில் கைவினை கிராமம் மற்றும் பல முடிவில்லா இடங்களையும் பார்க்க நல்லதொரு வாய்ப்பாக இருக்கும்.