மருத்துவம் என்பதே மூட நம்பிக்கையாக கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. இப்போதும் இருக்கிறது. ஆதிகாலம் தொட்டு சமீபத்திய அம்மை நோய் கடந்து கொரோனா வரையிலும் கூட மருத்துவமும் மருத்துவர்களும் மூட நம்பிக்கையுடன் போராடத் தான் வேண்டியிருக்கிறது. இறைவன் கொடுத்த உடலை மனிதன் ஆய்வு செய்வதா...? நோய் என்பது மனிதன் செய்த பாவத்தின் ஊதியம். அதனை மனிதர்கள் சரி செய்ய முயலக் கூடாது என்றெல்லாம் உலகம் முழுக்க மருத்துவத்தின் மீது மூட நம்பிக்கைகள் நடத்திய தாக்குதல்களை வரலாறு பட்டியலிடுகிறது. இன்று மருத்துவ உலகம் அறுவை சிகிச்சை மூலம் பல லட்சம் மனிதர்களின் உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கு விதை போட்டவர் 13’ஆம் நூற்றாண்டை சேர்ந்த பெண் மருத்துவர் கிலியானி. அவருக்கு நடந்த துயரம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் சமீபத்திய சில நிகழ்வுகளைக் கேளுங்கள்.
சென்னை கீழ் பாக்கத்தில் கொரோனாவால் உயிரிழந்த 55 வயது மருத்துவர் உடலை அடக்கம் செய்யக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே. படாத பாடு பட்டு அலைந்து திரிந்து கடைசியில் அவரது உடல் வேலங்காடு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு முன் சென்னை வானகரம் பகுதியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். ஆந்திராவைச் சேர்ந்த அந்த மருத்துவரின் உடலை அப்பகுதியில் அடக்கம் செய்ய எதிர்ப்புகள் எழுந்தன. உடலை அடக்கம் செய்ய கொண்டு வந்தவர்கள் மீது மக்கள் தாக்குதலையே நடத்தியிருக்கின்றனர். பிறகு அவரது உடல் போரூர் மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன் கோவையைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஜெயமோகன் உடல் நலக் குறைவால் தான் பணி செய்து வந்த நீலகிரி மலைக் கிராமத்தில் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து வரக் கூடாது என போராட்டம் நடந்தது. மனமுடைந்த ஜெயமோகனின் தாய் தற்கொலைக்கு முயன்றுள்ளார். எப்படிப் பாருங்கள். உங்கள் நோய் தீர்க்க உதவும் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய இடம் தரும் மனம் கூட இல்லாத இந்த சமூகம் அவர்களை எந்த வகையிலும் குறை சொல்ல தகுதியற்றது. இதெல்லாம் நடந்து கொண்டிருப்பது 21’ஆம் நூற்றாண்டில்.
இப்போது 13’ஆம் நூற்றாண்டுக்குச் செல்வோம்., அலெஸ்ஸாண்டிரா கிலியானி எனும் இத்தாலிய பெண் தான் இன்றைய நவீன மருத்துவ உலகின் அறுவை சிகிச்சைகளுக்கெல்லாம் தாய். இத்தாலியில் 1307’ஆம் ஆண்டு பிறந்தவர் அலெஸ்ஸாண்டிரா கிலியானி. அங்குள்ள போலோக்னா பல்கலைக் கழகத்தில் அவர் பயின்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது, அப்பல்கலைக் கழகத்தின் மருத்துவ பேராசிரியர் போலோக்னா மோண்டினோ டி லுஸ்ஸி என்பவரின் உதவியாளராக கிலியானி பணி செய்தார். மருத்துவ மாணவர்கள் இறந்த உடலைக் கொண்டு பாடம் படிக்க உதவும் விதமாக இறந்த உடல்களை அறுக்கும் பணியினைத் தான் கிலியானி செய்தார் என்கின்றன தகவல்கள். ஆனால் இவர் தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் பலன் தான் இன்று மருத்துவ உலகில் தவிர்க்க முடியாத மருத்துவ முறையாக மாறியிருக்கும் அறுவை சிகிச்சை முறை.
கிலியானி எனும் அந்தப் பெண்., இறந்த உடல்களை அறுத்து அவ்வுடலில் இருந்து இரத்தத்தை வெளியேற்றியிருக்கிறார். பிறகு உடலின் நரம்புகளில் வெவ்வேறு நிறத்திலான திரவத்தை செலுத்தியிருக்கிறார். இதன் மூலம் மனித உடலில் எந்தெந்த பகுதிகளில் இரத்தம் பாய்கிறது என எளிமையாக கண்டு பிடிக்க முடிந்தது. இது மருத்துவ உலகில் பெரும் திருப்பு முனையினை ஏற்படுத்தியது. ஆம் உடல் முழுக்க சிவப்பு நிற இரத்தம் பாயும் போது அதன் ஓட்டத்தை கணிப்பது அத்தனை எளிதாக இல்லை. 19 வயதேயான இளம் பெண் கிலியானி கண்டு பிடித்த இந்த முறை அடுத்தடுத்து மருத்துவ மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இப்போது வரை இந்த முறை தான் மருத்துவ உலகில் கை கொடுக்கிறது. பாடி போஸ்ட் மார்டம் எனப்படும் மனித உடல் கூராய்வின் முன்னோடி என கிலியானியை கூறலாம்.
1307 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த அலெஸ்ஸாண்டிரா கிலியானி 1326 ஆம் ஆண்டு இறந்து போனார். தன் பணியின் போது உடலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக உருவான தொற்றால் இவர் இறந்து போனார் எனக் கூறப்பட்டாலும். உண்மை அதுவல்ல என்கிறது வரலாறு., மதநம்பிக்கைகளுக்கு எதிராக மனித உடலை அறுத்து ஆய்வு செய்தமைக்காக கிலியானி தன் குடும்பத்துடன் எரித்துக் கொல்லப்பட்டார். இதனை நாவலாசிரியர் பார்பரா குவிக் உறுதி செய்கிறார். இவர் கிலியானியின் வாழ்வை மையப்படுத்தி நாவல் எழுதியவர். அலெக்ஸாண்டிரா கிலியானி பற்றி 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்று ஆய்வாளர் மைக்கேல் மெடிசி எழுதிய குறிப்புகள் முக்கியமானவை. அதில் கிலியானியின் மருத்துவ சேவை குறித்து நிறைய தகவல்கள் உள்ளன. இது போலவே உலகம் முழுக்க மத நம்பிக்கைகளுடனும், மருத்துவம் குறித்த பொது மக்களின் அச்சத்துடனும் மருத்துவத்துறை போராடி முன் நகர்ந்தது.
இதே போல அக்காலத்தில் போர்த்துகீசியாவிலும் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 16’ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியாவின் பல கிராமங்கள் முழுக்க முழுக்க மூட நம்பிக்கைகளால் சூழப்பட்டிருந்தன. அவ்வூரில் ஒரு நம்பிக்கை இருந்தது. குழந்தை பிறப்பு என்பது இறைவன் செயல். பிரசவத்தை மனிதர்கள் கையாளக் கூடாது. மூட நம்பிக்கை பரவிக் கிடந்த அந்நாட்களில் கர்பிணிப்பெண்களுக்கு மருத்துவம் பார்க்கும் பெண் மருத்துவர்கள் பிரசவத்தின் போது இரத்தம் படிந்த கைகளுடன் குழந்தையை கையாள்வதைக் கண்ட மக்கள் பயந்தனர். இவர்கள் சாத்தான்கள் இவர்கள் சூனியக்காரர்கள் என பொதுமக்களும் மதவாதிகளும் அப்பெண் மருத்துவர்களை குற்றம் சாட்டினர். பிறகு அந்த பெண் மருத்துவர்களில் பலர் மதத்தின் பெயரால் உயிருடன் தீவைத்து கொளுத்தப்பட்டனர் என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உலக சினிமா முன்னோடி கார்ல் ட்ரையர் dayof wrath என்ற சினிமாவை இயக்கினார். அப்படம் 1943’ல் வெளியானது. அப்படத்தை இயக்கியதற்காக கார்ல் ட்ரையர் பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது.
13’ஆம் நூற்றாண்டில் கிலியானியை கொன்றவர்கள், 16’ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய பெண் மருத்துவர்களை சூறையாடியவர்கள் தான் 21’ஆம் நூற்றாண்டில் கொரோனா பாதிப்பால் இறந்து போகும் மருத்துவர்களின் உடல் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிலியானியை எழுதிக் கொண்ட வரலாறு கார்ல் ட்ரையரை எழுதிக் கொண்ட வரலாறு இன்றைய கொரோனா நாள்களையும் எழுதிக் கொள்கிறது. இத்துயர வரலாற்றை படிக்கப் போகும் எதிர்கால தலைமுறை நம் முகத்தில் காரி உமிழப் போகிறது என்பதை மட்டும் மறக்காதீர்கள்.