சிறப்புக் களம்

யானைகள் - பாகன்கள் உறவு எப்படி? வளர்ப்பு யானைகளை தாக்குவது சரியா? -விரிவான அலசல்!

யானைகள் - பாகன்கள் உறவு எப்படி? வளர்ப்பு யானைகளை தாக்குவது சரியா? -விரிவான அலசல்!

jagadeesh

உலகிலே வாழும் காட்டுயிர்களில் மிகவும் புத்தி கூர்மையான விலங்கினம் யானை. இந்தியாவில் காட்டு யானைகள் மீதான தாக்குதல், உயிரிழப்பு என ஒரு பக்கம் நடந்துக்கொண்டு இருந்தாலும், இப்போது யானைகள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்தே வருகிறது. அண்மையில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மசினக்குடியில் காட்டு யானை மீது தீவைக்கப்பட்டு, அது சில நாள்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. யானை மீதான இந்தத் தாக்குதல் குறித்து வெளியான வீடியோ வைரலாகி இந்தக் கொடுஞ் செயலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனையும் விதிக்கப்பட்டது.

இவையெல்லாம் சமூக வலைத்தளத்தில் வந்ததால் அது வைரலாகி குற்றம் இழைத்தவர்கள் தண்டனை கிடைக்க காரணமாக இருந்தது என்பதை நம்மால் மறுக்க முடியாது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமில் அண்மையில் ஒரு யானையை இரண்டு பாகன்கள் கொடூரமாக அடிக்கும் காணொளி பொது ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதை அறிவோம். இதற்கு சமூக வலைத்தளங்கலில் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஆனால் பாகன்களால் அடிக்கப்பட்ட அந்த யானை அவர்கள் இல்லாமல் சாப்பிடவில்லை என்ற செய்தியும் உலாவந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் காட்டு யானைக்கும், வளர்ப்பு யானைக்கும் இருக்கும் வித்தியாசத்தை நாம் உணர வேண்டும். யானை ஒரு காட்டுயிர். வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டாலும் அது காட்டுயிர்தான். ஒரு காட்டு யானையை வளர்ப்பு யானையாக மாற்றுவது, அதனை மேலாண்மை செய்வது ஆகியவை எளிதானதல்ல. அதற்கு தனித்துவமான திறனும் நிபுணத்துவமும் வேண்டும். நமது தமிழக வனத்துறையில் ஆனைமலை, முதுமலை ஆகிய இடங்களில் வளர்ப்பு யானைகள் முகாம்கள் உள்ளன.

யானை - பாகன் உறவு!

ஆனைமலைத் தொடர்களில் வசித்து வரும் மலசர் பழங்குடியினர் இங்கு யானைகளுக்கு பயிற்சி அளிக்கின்றார்கள். பொதுவாக தமிழகத்தில் இருக்கும் கோயில் யானைகளின் பாகன்களாக இவ்வின மக்களே இருக்கின்றனர். இவர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான பந்தம் என்பது ஆதி தொட்டே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். இதே பகுதியில் வாழும் புலையர் இன மக்களும் யானை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடக வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தவும் இம்மக்கள், ஆனமலை வனச்சரகத்தில் இருந்து அனுப்பப்படுகின்றனர்.

ஒரு யானை பிறக்கும்போதே அதற்கு ஒரு பாகனை நியமித்துவிடுவார்கள். அந்த பாகனோட ஆயுசு முழுவதும் அந்த யானையை மட்டுமே கவனித்துக்கொள்வார். ஒரு யானை 10 வயது ஆகும் வரை அதற்கு ஒரு பாகனே போதும். 10 வயதுக்கு மேல் பாகனுக்கு துணையா கவாடி நியமிக்கப்படுவார்கள். சில நேரங்களில் வளர்ந்த காட்டு யானைகளை கும்கியாக மாற்றும் பயிற்சியும் நடைபெறும். பொதுவாக யானைகளை மிரட்ட அங்குசம் பயன்படுத்தப்படும். இது கேரளாவில் பெரும்பாலான பாகன்கள் பயன்படுத்துவார்கள்.

ஆனால் தமிழகத்தில் காட்டில் இருந்து பறித்து வரப்படும் கருந்தொரை என்ற குச்சியைதான் யானைகளை மேய்ப்பதற்கு பாகன்கள் பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில் யானைகளை சொல்கின்ற பேச்சை கேட்கவில்லை என்றால் அதை வைத்து பயமுறுத்தி அடிக்கவும் செய்கிறார்கள். பெரும்பாலான பாகன்கள் யானைகளை துன்புறுத்த விரும்பவதில்லை. அதேபோல யானைகளும், பாகன்கள் இல்லாமல் இருப்பதில்லை. பாகன் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் யானைகள் என்றால் மிகையல்ல.

சற்று கடினமான முறைதான்!

பொதுவாக ஒரு காட்டு யானை கும்கியாக மாற்றப்படும்போது அதற்கு சற்று கடுமையான முறையே பின்பற்றப்படுகிறது. காட்டு யானை பிடிக்கப்பட்டால் அதை கரால் என்றழைக்கப்படும் மரக்கூண்டில் அடைக்கப்படுகின்றன. அந்த கூண்டு, 18 அடி உயரம், 15 அடி அகலம், 15 அடி நீளம், கொண்டது; தேக்கு, கற்பூர மரங்களால் அமைக்கப்படும். சிறை வைக்கப்பட்டிருக்கும் காட்டு யானை ஆக்ரோஷத்தால் சுற்றியுள்ள தடுப்பு மரங்களில் மோதாமல் தடுக்க, முன்னங்கால் ஒன்றும், எதிரேயுள்ள பின்னங்கால் ஒன்றும் காயம் ஏற்படாதவாறு கயிற்றால் இறுக்கி கட்டப்படும். அவற்றை கண்காணிக்க, முதுநிலை பாகன், இரு இளநிலை பாகன்கள், 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவர்.

ஒரு மாதம் கழிந்ததும் பாகன்கள், கராலுக்குள் சென்று, யானைக்கு உணவு வழங்குவர். அந்த யானை அவர்களுடன் பழகத்துவங்கும். இப்படியே நாளுக்கு நாள் பழக்கம் அதிகரிக்கும். பாகன்களுடன் நெருங்கிப் பழகி, கட்டளைக்கு கட்டுப்படத்துவங்கும். முழுக் கட்டுப்பாட்டில் யானை வந்ததும், கும்கிகளின் உதவியுடன் வெளியே அழைத்து வரப்பட்டு நடமாட அனுமதிக்கப்படும். நாளடைவில், இந்த யானைகளும் வளர்ப்பு யானைகளாக, கும்கி யானைகளாக மாறிவிடும். ஆக்ரோஷம் மறையும். பாகன்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். இப்படி எண்ணற்ற முரட்டு காட்டு யானைகளும், வளர்ப்பு யானைகளாக மாறி உள்ளன. தமிழகத்தில் 1998 இல் முதல் முதலாக ஆட்கொள்ளி யானை ஒன்று கும்கியாக மாற்றப்பட்டது. காட்டு யானைகளை வளர்ப்பு யானைகளை மாற்றுவதற்கான இத்தகைய பயிற்சிகள்தான் கொடூரமாக இருக்கிறது என்று காட்டுயிர் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தமிழக வனத்துறையில் முதுமலை, டாப் ஸ்லிப் யானைகள் முகாம்களில் பணியாற்றிய முன்னாள் வனச்சரக அலுவலர் சி.தங்ககராஜ் பன்னீர்செல்வம் கூறும்போது "தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் பாகன்களால் அடிக்கப்பட்ட யானையை பார்வையிட்டோம். அந்த யானையை இப்போது வேறு பாகன்கள் பார்த்துக்கொள்கிறார்கள் உணவுக் கொடுக்கிறார்கள். அதுவும் சாப்பிடுகிறது. பாகன்கள் அடித்ததால் அந்த யானைக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. பொதுவாக யானைக்கு அவ்வளவு சீக்கிரம் காயங்கள் ஏற்படாது. பாகன்கள் இல்லாததால் யானைகளை பராமரிப்பது சிரமம்தான். ஆனால் ஒரு முகாமில் யானையை பாகன் அவ்வாறு தாக்கியிருக்க கூடாது அது தவறுதான். இதற்கு துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கலாம். இப்போது பாகன் சிறையில் இருப்பதால், அதிகம் பாதிக்கப்படப்போவது யானைதான். இதுபோன்ற கைது நடவடிக்கையின் காரணமாக அடுத்து அந்த யானையை பார்த்துக்கொள்ள வேறு பாகன்கள் முன் வரமாட்டார்கள்" என்றார்.

மேலும் பேசிய அவர் "காட்டு யானையை வளர்ப்பு யானைகளை மாற்றுவதற்கு கராலில் அடைத்துதான் அதனை வழிக்கு கொண்டு வர முடியும். காலம் காலமாக இந்த வழிமுறையைதான் பின்பற்றி வருகிறோம். முகாமில் கூட யானை குட்டி போட்ட பின்பு அதனை 1 ஆண்டுதான் தாயுடன் இருக்க விடுவோம். பின்பு தாய் யானையிடம் பிரித்து கராலில் அடைத்து அதனை வளர்ப்பு யானையாக மாற்றுவோம். அதுவே பெரிய போராட்டமாக இருக்கும். ஆனால் வேறு வழியில்லை. யானை ஒரு காட்டு விலங்கு என்பதை நாம் மறக்க கூடாது. பாகன்கள் - யானை உறவு என்பது அலாதியானதுய யானையிடம் பாகன் கண்டிப்புடனும், கருணையுடனும், பாசத்துடனும் இருக்க வேண்டும். கண்டித்தால்தான் யானைகள் பாகன்கள் சொல்வதை கேட்டு நடக்கும்" என்றார் தங்கராஜ்.

இன்னும் விரிவாக பேசிய அவர் "அதுவும் கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளை பாகன்கள் நிச்சயம் கண்டிப்புடனே இருப்பார்கள். ஏனென்றால் கோயில் என்பது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வரும் இடம். அங்கு பாகன்கள் கண்டிப்புடன் இருக்க வேண்டும். பாகன்கள் சொல்வதை யானைகள் கேட்கவில்லை என்றால் நிச்சயம் அசம்பாவிதம் ஏற்படும். பாகன்கள் அடிப்பதால் யானைக்கு வலி ஏற்படும், அதனை பாகன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார். இதனால் பாகன்கள் கொடூரமானவர்கள் கிடையாது. யானையின் பெயரை தன் உடலில் பச்சைக்குத்திகொள்ளும் பாகன்கள் நிறையபேர் இருக்கிறார்கள். இதனை யானைகள் வதை என பொத்தாம் பொதுவாக எடுத்துக்கொள்ள கூடாது" என்றார் தங்கராஜ்.