ஆந்திர மாநிலத்தின் சேஷாசலம் காடுகள் மனித கால்தடமே படாத ஒரு அடர்வனப் பகுதி. ஆனால், அத்தகைய வனப்பகுதியை மட்டுமே சீனக் கடத்தல்காரர்கள் குறிவைக்கிறார்கள். ஆம், அங்குதான் சீனர்கள் பேரன்போடு அழைக்கும் "சிவப்பு சந்தனம்" எனும் செம்மரங்கள் ஓங்குதாங்காய் வளர்ந்து நிற்கின்றன. சேஷாசலம் காடுகளில் உள்ள செம்மரங்கள் சுமார் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது.
செம்மரங்கள் அதிக அளவில் ஆந்திரத்தில் இருந்தாலும், அதை வெட்டும் தொழிலாளர்கள் பெரும்பாலும் தமிழகத்தில் இருந்துதான் செல்கின்றனர். ஓர் இரவும், பகலும் காட்டில் தங்கி வெட்டினால், ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை கடத்தல்காரர்கள் கூலி கொடுக்கிறார்கள் என தமிழக வனத்துறை முன்னாள் அதிகாரி தெரிவித்தனர்.
சீன நாட்டின் சந்தையில் செம்மரக் கட்டைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே ஆந்திரம் - தமிழக எல்லையோரக் காடுகளில் உள்ள செம்மரக் கட்டைகள் வெட்டப்பட்டு சட்ட விரோதமாகக் கடத்தப்படுவதாக இருமாநில வனத்துறையும் கவலை தெரிவிக்கிறது. செம்மரக் கட்டை "சிவப்பு சந்தனம்' எனக் கடத்தல்காரர்களால் கூறப்படுகிறது. இந்தச் செம்மரக் கட்டைகள் அழகுப் பொருள்கள், ஆபரணங்கள், மருந்துகள் தயாரிக்க வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சீன நாட்டில் பல தோல் நோய்களுக்கு செம்மரக் கட்டைகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால், இந்தியக் காடுகளைக் குறிவைத்து கடத்தல்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
ஆர்வம் காட்டும் சீனா!
2016 ஆம் ஆண்டு முதல் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் செம்மரக்கட்டைகளை ஆந்திர மாநில அரசு ஏலத்தில் விட்டு வருகிறது. இந்த ஏலத்தில் சீனர்கள் அதிகளவில் பங்கேற்றதற்கான ஆதாரத்தையும் அம்மாநில அரசு வைத்திருக்கிறது. உதாரணமாக கடந்த ஆண்டு ஆந்திர மாநில அரசால் விற்கப்பட்ட செம்மரக் கட்டைகளை வாங்குவதற்கு, சீனர்கள் அதிக ஆர்வம் காட்டினர். சுமார் 100-க்கும் மேற்பட்ட சீனர்கள் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.
8,500 டன் ஏலம் !
கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள், ஆந்திர வனத்துறை கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. இருப்பில் உள்ள செம்மரக் கட்டைகள் தரத்தை இழப்பதால், அவற்றை சர்வதேச ஒப்பந்தப் புள்ளி மூலம் ஏலத்தில் விற்க, ஆந்திர அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக, 8,500 டன் செம்மரக் கட்டைகள், விற்பனை செய்யப்பட்டன. இதற்கான ஒப்பந்தப் புள்ளியும் ஏலமும் நடைபெற்றது. மேலும் இணையதளம் மூலம் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், அமைப்புகள், தனி நபர்கள் பங்கேற்றனர். செம்மரக் கட்டைகளுக்கு சீனாவில் அதிக வரவேற்பு இருப்பதால், அங்குள்ள வியாபாரிகளை அழைக்க, ஆந்திரத்தில் இருந்து, மூன்று பேர் அடங்கியக் குழு, சீனா சென்றது. இதையடுத்து நடைபெற்ற செம்மரக் கட்டைகள் ஏலத்தில் சீனாவைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்
ஒரு டன் ரூ. 10 லட்சம்
மத்திய அரசு நிறுவனமான எம்எஸ்டிசி மூலம் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. இதில் "ஏ' கிரேடு செம்மரக் கட்டைகள் டன்னுக்கு ரூ. 12 லட்சம், "பி' கிரேடு ரூ. 10 லட்சம், "சி' கிரேடு ரூ. 8 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. முதல் கட்டமாக 4,160 டன் செம்மரக் கட்டைகளை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. இதில் "ஏ' கிரேடு 4.69 டன், "பி' கிரேடு 78.13 டன், "சி' கிரேடு 717.18 டன் செம்மரக்கட்டைகள் ஏலத்திற்கு வைக்கப்பட்டன. ஒரே நாளில் மொத்தம் 862 டன் ஏலம் விடப்பட்டதில் ரூ. 265 கோடி ஆந்திர மாநில அரசுக்கு கிடைத்தது.
செம்மரத்தின் பூர்வீகம் இந்தியா!
ஆந்திரத்தின் திருப்பதி, சித்தூர், கடப்பா பகுதிகளிலும், தமிழ்நாட்டில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களின் சில இடங்களிலும்தான் காணப்படுகின்றன. செம்மரம் அரிய வகை மரங்களின் பட்டியலில் இருப்பவை. எனவே இதனை வெட்டவோ, கடத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. செம்மரம் வறண்ட காடுகளில் இயற்கையாகவே வளரக் கூடியவை. இவை 11 மீட்டர் உயரம் வரை வளரும். ஒரு மரம் பெரிதாக வளர ஐம்பது, ஆண்டுகளாவது ஆகும். ஆண்டுக்கு ஒருமுறைதான் பூப் பூக்கும். ஆனால், விதை அதற்கடுத்த ஆண்டுதான் கீழே விழத் தொடங்கும். இந்த மரத்தில் மகரந்தச் சேர்க்கை நடப்பதும் அவ்வளவு எளிதானதில்லை. ஆகவே, செடி உருவாகிற வாய்ப்பே மிகக் குறைவு.
செம்மரக்கட்டைகளில் இருந்து "சாண்டலின்' என்கிற வேதிப்பொருள்கள் எடுக்கப்படுகிறது. அதன்மூலமாக மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. கடத்தல் செம்மரக்கட்டைகளை அதிகம் வாங்குபவை சீனா, ஜப்பான் நாடுகள்தான். இங்கே ஒரு டன் செம்மரக் கட்டைகள் ரூ. 25 லட்சம் வரை விற்கப்படும். செம்மரக் கட்டைகள் சீனாவை அடையும்போது அதன் மதிப்பு பத்து கோடி ரூபாய் வரை உயருகிறது.