சிறப்புக் களம்

கங்கனா முதல் ராகுல் வரை... - வெவ்வேறு காரணங்களால் ட்விட்டர் கணக்கு முடக்கத்தின் பின்புலம்

கலிலுல்லா

இந்தியாவில் அண்மைக்காலமாக அரசியல் கட்சிகள், பிரபலங்கள் உட்பட பலரது ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. தங்களது விதிகளை மீறுவதால் கணக்கு முடக்கப்படுவதாக ட்விட்டர் நிறுவனம் கூறுகிறது. ஆனால், மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்நிலையில், இதன் பின்னணி குறித்தும், இது தொடர்பான சைபர் வல்லுநர்கள் கருத்துகளையும் பார்ப்போம்.

ட்விட்டரை பொறுத்தவரை அனைத்து துறையைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்தும் சமூக வலைதளமாக இருந்துவருகிறது. அப்படி பார்க்கும்போது, இந்தியாவில் மட்டும் 1.88 கோடி பேர் ட்விட்டர் கணக்கை பயன்படுத்துகின்றனர். உலக அளவில் அமெரிக்கா, ஜப்பானை தொடர்ந்து இந்தியா ட்விட்டர் பயன்பாட்டில் 3-ஆவதாக இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமாக ட்விட்டர் உள்ளது. தனி நபர் மட்டுமல்லாது ட்விட்டரில், துறை சார்ந்த வல்லுநர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் பலரும் விரும்பும் தளமாக ட்விட்டர் உள்ளது.

ட்விட்டர் கணக்குகளை முடக்க என்ன காரணம்?

தவறான தகவல், வெறுப்பைத் தூண்டுதல், சர்ச்சைக்குரிய பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிட்டால் கணக்கு 24 மணிநேரத்துக்கு முடக்கப்படும். ஒரு கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டாலும் அது மீட்கப்படும் வரை இடைநீக்கம் செய்யப்படும். ட்விட்டர் விதிகளை மீறி கணக்கு இயங்குகிறது என்றாலும் அந்த கணக்குகள் முடக்கப்படும். தவறான செயல்களில் ஈடுபடும்போது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கணக்குகள் நிறுத்திவைக்கப்படும்.

காங்கிரஸ் ட்விட்டர் கணக்கு முடக்கம் ஏன்?

அண்மையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கணக்கு முடக்கப்பட்டது உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தியாவை பொறுத்தவரை, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு பின்புதான் கணக்குகள் முடக்கம் பேசுபொருளானது. 5 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களை கொண்ட கங்கனா, தொடர்ந்து மத துஷ்பிரயோக கருத்துகளை பதிவிட்டு வந்ததால், முதலில் தற்காலிகமாகவும் பின்னர், நிரந்தரமாகவும் அவரது கணக்கு முடக்கப்பட்டது. அதன்பின்பும் கூட விதிகளை மீறி, தனது தங்கையின் ட்விட்டர் கணக்கு மூலமாக கருத்துகளை பதிவிட்டு வந்தார் கங்கனா. அதனால், தங்கை கணக்கையும் முடக்கியது ட்விட்டர்.



இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்தது. காரணம், டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பாக, சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தால் ராகுல் காந்தி. இந்தப் புகைப்படங்களை அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

அவரது இந்த செயல் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் என கூறி, டெல்லியில் செயல்படும் தேசிய குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் புகார் தெரிவித்திருந்தது. புகாரையடுத்து, அவரது கணக்கு முடக்கப்பட்டது. அதேபோல ஆறுக்கும் மேற்பட்ட காங்கிரஸின் முன்னணி தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது. தவிர, 5000-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படங்களை பகிர்ந்தவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படும் என கூறப்படுகிறது. பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரும்போது, அவர்களின் அடையாளங்களை பொதுத் தளங்களில் பகிரக் கூடாது என்பது சட்ட நெறிமுறை. அதை மீறும் வகையில் அமைந்ததாலேயே ராகுல் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கிறது ஐடி சட்டப்பிரிவு 66A.உச்சநீதிமன்றத்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின்போது, அவதூறு கருத்துகள், ஆபாசங்கள், தனிநபர் தாக்குதல் தொடர்பாக கவனம் செலுத்த மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இதனிடையே, மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாகத்தான் கணக்குகள் முடக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது. எதிர்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் செயல் இது என்றும் காங்கிரஸார் புகார் தெரிவித்திருந்தனர். காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ''சட்டம் தன் கடமையை செய்கிறது. விதிமுறைகளை பின்பற்றி தான் ட்விட்டர் செயல்படுகிறது. எனது ட்விட்டர் கணக்கும் கூட முடக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், இதில் அரசியல் காழ்புணர்ச்சி எதுவுமில்லை'' என்று கூறியிருக்கிறார்.


இந்த விவகாரம் தொடர்பாக சைபர் வல்லுநர் கார்த்திகேயன் பேசுகையில், ''ட்விட்டரின் விதிமுறைகளை மீறி தவறான கருத்துகளை பதிவிடும் ட்வீட்களை ட்விட்டர் நீக்கிவிடுகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கும் கூட ஒரு ட்விட்டர் கணக்கை முடக்க அதிகாரம் இருக்கிறது. மத்திய அரசு 10 நிறுவனங்களுக்கு அதிகாரத்தை கொடுத்துள்ளது. இந்த 10 நிறுவனங்களும் ட்விட்டருக்கு ஒரு கடிதத்தை அளித்தால் சம்பந்தபட்ட கணக்கை முடக்கியே ஆகணும் என்பது கட்டாயம். தனது கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக சம்பந்தபட்டவர், ட்விட்டருக்கு கோரிக்கையை முன் வைக்கலாம். கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கணக்கை விடுவிப்பதும், நிரந்தரமாக முடக்குவதும் ட்விட்டரின் முடிவுக்கு உட்பட்டது'' என்று தெரிவித்துள்ளார்.