சிறப்புக் களம்

Real Vs Fake நீங்கள் சாப்பிடுவது இஞ்சியா (அ) இஞ்சி மாதிரியா? போலியால் இவ்வளவு ஆபத்துகளா?

Sinekadhara

இந்திய சமையலறைகளில் எப்போதும் இடம்பெற்றிருக்கும் ஒரு மகத்தான மூலிகை இஞ்சி. இதன் முக்கியத்துவத்தை கொரோனா காலத்தில் அறியாதவர் இல்லை. சளி மற்றும் காய்ச்சல் வந்தோருக்கு இஞ்சி டீ இதமான ஒன்று. தற்போது குளிர்காலம் தொடங்கிவிட்டது. மசாலா டீ மற்றும் இஞ்சி டீ பெரும்பாலான வீடுகளில் கட்டாயம் தினசரி இடம்பெறும். இது உடலை கதகதப்பாக வைப்பது மட்டுமின்றி ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது.

இஞ்சியின் நன்மைகள்

ஜிங்கிபெரேசி குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சள், ஏலக்காய் மற்றும் கலங்கால்(கிழங்கு) ஆகியவற்றுடன் தொடர்புடைய இந்த நறுமண மசாலா பொருளானது தென்கிழக்கு ஆசியாவில் தோன்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பூக்கும் தாவரமாகும். இஞ்சியை பச்சையாகவோ, காயவைத்தோ, பொடியாக்கியோ, சாறுபிழிந்தோ அல்லது எண்ணெய் வடிவிலோ பயன்படுத்தலாம்.

குமட்டலுக்கு மருந்து: குமட்டலுக்கு சிறந்த மருந்து இஞ்சி என்கிறது சுகாதார அறிக்கைகள். குறிப்பிட்ட சில அறுவைசிகிச்சைகள், கேன்சருக்கு கீமோதெரபி சிகிச்சை எடுத்தவர்களுக்கு வரும் வாந்தி போன்றவற்றிற்கு இஞ்சி தீர்வு கொடுக்கிறது. கர்ப்பிணிகளுக்கு காலை எழுந்தவுடன் வரும் சோர்வுக்கு தீர்வு கொடுக்கிறது.

எடை குறைப்பு: உடல் எடையை குறைக்கவும், கட்டுக்குள் வைக்கவும் இஞ்சி உதவுவதாக நிறைய ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இஞ்சி மாத்திரைகள், உடல் எடையை குறைக்கிறது; குறிப்பாக இடுப்பு சதையை குறைக்கிறது.

அஜீரண பிரச்னை: நிறையப்பேர் நாள்பட்ட அஜீரணப் பிரச்னையால் அவதிப்படுகின்றனர். இதனால் வயிற்றில் வலி மற்றும் அசௌகர்யத்தை உணர்கின்றனர். ஜீரண நொதிகள் சுரப்பை ஊக்குவிப்பதில் இஞ்சியின் பங்கு அளப்பரியது. மேலும் குடல் இயக்கத்தை ஊக்குவித்து மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.

மாதவிடாய் வலி: டிஸ்மெனோரியா அல்லது மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய வலிக்கு இஞ்சி சிறந்த தீர்வை கொடுக்கிறது.

இப்படி பல நன்மைகள் இஞ்சியில் இருப்பதால் அதன் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு மார்க்கெட்டுகளில் போலியான இஞ்சிகள் விற்கப்படுகிறது. பார்ப்பதற்கு அசல் இஞ்சிபோல் இருந்தாலும், போலி இஞ்சியில் சுவையோ மணமோ இருக்காது. இது உடலுக்கு நன்மைக்கு பதிலாக தீமையையே வரவைக்கும். அதுமட்டுமின்றி, போலி இஞ்சியை தொடர்ந்து பயன்படுத்துவது அஜீரணக் கோளாறு மற்றும் அல்சருக்கு வழிவகுக்கும்.

அசல் மற்றும் போலி இஞ்சியை கண்டறிவது எப்படி?

வாசனை: எப்போது இஞ்சி வாங்க மார்க்கெட்டுக்கு சென்றாலும், சிறிது துண்டை எடுத்து முகர்ந்து பார்ப்பது அவசியம். அசல் இஞ்சியின் மணம் எப்போதும் நெடியாகவும், தூக்கலாகவும் இருக்கும். போலி இஞ்சியில் வாசனை இருக்காது. நிறைய இடங்களில் mountain roots என்று சொல்லக்கூடிய கிழங்கை இஞ்சி என்று விற்பனை செய்வதுண்டு.

தோலை பரிசோதிக்கவும்: அசல் இஞ்சியை கண்டறியும் மற்றொரு முறை, அதன் தோல். அசல் இஞ்சியின் தோலை உரிக்கும்போது அது கையில் பிசுபிசுப்புடன் ஒட்டுவதுடன், வாசனை கைகளில் இருக்கும். இஞ்சி தோல் கடினமாகவும், உரிப்பதற்கு இயலாத வண்ணமும் இருந்தால் அது போலி இஞ்சி.

தோற்றத்தை கவனிக்கவும்: பார்ப்பதற்கு சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருந்தால் அந்த இஞ்சியை வாங்கக்கூடாது. நிறைய நேரங்களில் இஞ்சியை ஆசிட் மற்றும் டிடெர்ஜெண்ட்களால் கழுவி விற்பனை செய்வர். அவற்றிலுள்ள ரசாயனமானது இஞ்சியை பளபளப்புடன் வைக்கும். இது இஞ்சியை விஷமாக்குவதுடன் அதை சாப்பிடுபவர்களுக்கு உடல்நலக் குறைவையும் ஏற்படுத்துகிறது.

எப்போது இஞ்சி வாங்கிவந்தாலும், அதனை சுத்தமாக கழுவி, காயவைத்து பின்னரே ஃப்ரிட்ஜில் வைக்கவேண்டும். அதேபோல் இஞ்சியை இரண்டாக உடைத்துப் பார்க்கவும். நூல்போல் வந்தால் அது நல்ல இஞ்சி. அதனை தாராளமாக வாங்கி பயன்படுத்தலாம்.