ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் மொத்தமாக இழுத்திருக்கிறார், சுழல் புயல், ரஷித்கான்!
சின்ன வயதுதான் அவருக்கு. ஆனால் பெரிதாக இருக்கிறது அவர் சாதனைகள். 19 வயதில் பேட்ஸ்மேன்களுக்கு ஷாக் கொடுக்கும் இந்த ரஷித், இப்போது இன்னும் ஒரு சாதனையை படைத்திருக்கிறார். சர்வதேச டி20 போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகள் அள்ளிய இரண்டாவது வீரர் என்கிற பெருமைதான் அது. இதற்கு முன், விரைவாக நூறு விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் அவர் பாக்கெட்டில் இருக்கிறது பத்திரமாக. அதாவது 40 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகள்! இன்னும் சாதிக்க காலமும் நேரம் காத்திருக்கி றது அவருக்கு!
‘உண்மையிலயே இந்த வயசுல இதையெல்லாம் சாதிப்பேன்னு நினைச்சுக் கூட பார்த்ததில்லை. இது எல்லாம் கனவா இருக்கு. ஒரு பக்கம் சச்சின் என்னை பாராட்டி ட்விட் போடுறார். அவருக்கு என்ன பதில் போடன்னு பல மணி நேரமா யோசிச்சுட்டு இருந்தேன். அவர் பாராட்டு னது ரொம்ப மகிழ்ச்சி. அவர் ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் இந்திய கேப்டன் விராத் கோலியும் பாராட்டுறார். அப்புறம் ஐபிஎல் போட்டி க்கு நடுவுல தோனியும். இவங்களோட பாராட்டுகள் என் நம்பிக்கையை அதிகரிச்சிருக்கு’ என்று சிலிர்க்கிற ரஷித், சர்வதேச போட்டிகளில் அறிமுகமானது 2015-ல், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக!. அப்போது தொடங்கிய அவரது சுழல் கேரியர், பிறகு ஜிவ்வென்று பறக்கத் தொடங்கவிட்டது.
’சின்ன வயசுல ஷாகித் அப்ரிடி, அனில் கும்ப்ளே பந்துவீச்சுகளை பார்த்துட்டே இருப்பேன். அப்படித்தான் கத்துக்கிட்டேன். இப்பவும் நேரம் கிடைக்கும்போது கும்ப்ளே பந்துவீச்சை பார்த்துட்டு இருக்கிறேன். அதுதான் என்னை நானே வளர்த்துக்க உதவுது. கடந்த ரெண்டு மாசம், குறிப்பா ரெண்டு வருஷம் எனக்கு நல்லா அமைஞ்சிருக்கு. தேசிய அணியில சேர்ந்த பிறகு எனக்கு தேவையான வெற்றி கிடைச்சது. அதுல எனக்கு மகிழ்ச்சிதான். என்னோட ஆட்டத்தை ரசிச்சு விளையாடறேன். போன வருஷ ஐபிஎல் முடிஞ்ச பிறகு எங்க ஊருக்குப் போனா, எல்லாரும் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. என்னால அதை மறக்கவே முடியாது. இப்ப போனாலும் அந்தக் கொண்டாட்டம் இருக்கும்’ என்கிற ரஷித்கான், கடந்த ஒரு வருடமாக அவர் ஊருக்கே செல்லவில்லை!
’ஆமா. உலகம் முழுவதும் சுத்திக்கிட்டிருக்கேன். என் குடும்பம், நண்பர்களை ரொம்ப மிஸ் பண்றேன். எங்க நாட்டுல நடக்கிற குண்டு வெடிப்புகளும் என்னை ரொம்ப பாதிக்குது. ஐபிஎல் போட்டி நடந்துகிட்டிருந்த போது, என் சொந்த ஊர்ல குண்டு வெடிச்சது. அதுல என்
நண்பனை இழந்துட்டேன். அதுல ரொம்ப அப்செட் ஆயிட்டேன். மறுநாள் இன்னொரு நண்பன் போன் பண்ணி, விளையாடும்போது இருக்கிற வழக்கமான உன் சிரிப்பை காணுமே?ன்னு கேட்டான். இந்தச் சம்பவங்கள் என்னை ரொம்ப பாதிக்குது. இதையும் மீறி, நல்லா
விளையாடணும்னு நினைக்கிறேன். ஏன்னா, அதன்மூலமா எங்க மக்கள் கொஞ்சம் சந்தோஷமா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்’ என்று நெகிழ்ச்சியாக பேசுகிற ரஷித்திடம் அடுத்து இந்தியாவுடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது பற்றி கேட்டால்,
’ஒரு நாள், டி20 போட்டியில் இருந்து டெஸ்ட் போட்டி அதிக வித்தியாசமில்லை. நாலு நாட்கள் போட்டிகள்ல சிறப்பா விளையாடி இருக்கேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக பந்து வீச்சை மாற்றினா அது சரியா இருக்காது. இப்போ எப்படி வீசுறனோ, அப்படியே டெஸ்ட்
போட்டியிலும் வீசுவேன். இதுல ரெண்டு ஓவர்ல 2 விக்கெட் கிடைக்கலாம். விக்கெட் கிடைக்காம கூட இருக்கலாம். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்’ என்று ரசனையாக பேசுகிறார் ரஷித்.
வழக்கமாக சினிமாகாரர்களிடம் கேட்கும் அந்த கேள்வியை, இந்த இளம் சுழலிடம் கேட்காமல் விட்டால் எப்படி?
‘யாரை லவ் பண்றீங்க?
‘நீங்க வேற, நான் இன்னும் சிங்கிள்தான்’ என்கிறார் சிரித்துகொண்டே!
நம்புவோமாக!