விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி அயோத்தியில் துவக்கப்பட்ட ‘ராம் ராஜ்ய ரத யாத்திரையைத்’ தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது எனப் போராட முனைந்த தலைவர்கள் முன்னெச்சரிக்கையாகத் தடுத்து நிறுத்தப்பட்டு இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் எந்த ரத யாத்திரைக்கு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தினார்களோ அது காவல்துறையின் பாதுகாப்போடு வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடப்பது பாஜகவின் பொம்மை ஆட்சிதான் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க ‘இந்த ரத யாத்திரை ஐந்து மாநிலங்களின் வழியாக வந்துள்ளது. அந்த மாநிலங்கள் எதுவும் இதற்கு தடை விதிக்கவில்லை. அப்படியிருக்க இங்கு மட்டும் எப்படி தடை விதிக்கமுடியும்’ எனத் தமிழக முதலமைச்சர் கேட்டிருக்கிறார். ‘மற்ற மாநிலங்களில் எல்லாம் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர், இங்கு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தித் தேவையில்லாமல் மிகப்பெரிய விளம்பரத்தை ரத யாத்திரைக்குக் கொடுத்துவிட்டார்கள்’ என்ற கருத்தும் சிலரால் சொல்லப்படுகிறது.
இந்த ரத யாத்திரையின் உண்மையான நோக்கமென்ன? என்பதைத் தெரிந்துகொண்டால்தான் இதற்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பு தேவையா இலையா என்பதைத் தீர்மானிக்க முடியும். இந்த ரத யாத்திரை மூன்று காரணங்களுக்காக எதிர்க்கப்படவேண்டியதாகும்:
1) உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு நடைபெற்றுவரும் நிலையில் இந்த யாத்திரை உச்சநீதிமன்றத்தின்மீது அழுத்தம் செலுத்தப் பார்க்கிறது
2) ராமர் கோயில் என்பதிலிருந்து ராம ராஜ்யம் என வகுப்புவாதத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துகிறது
3) அயோத்தி பிரச்னையை முன்வைத்து இந்தியா முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தி 2019 பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவான வகுப்புவாத அலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
1) உச்சநீதிமன்றத்தின்மீது அழுத்தம்:
அயோத்தி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையிலான அமர்வில் இப்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. 14.03.2018 அன்று நடைபெற்ற விசாரணையை அடுத்து வழக்கு 23.03.2018 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
14.03.2018 அன்று நடைபெற்ற விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த வழக்கில் தம்மையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ளவேண்டும், மேலும் ஆவணங்களை சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ அனுமதி வழங்கவேண்டும் எனப் பலவிதமான கோரிக்கைகளை முன்வைத்து பிரபல திரைப்பட இயக்குனர்கள் ஷியாம் பெனகல், அபர்ணா சென், டீஸ்டா ஸெட்டல்வாட் உள்ளிட்ட 32 பேர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அவற்றையெல்லாம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இனி இவ்வாறு யாரேனும் மனு தாக்கல்செய்தால் அதை ஏற்கக்கூடாது எனவும் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டுவிட்டது.
இந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டிருந்த சுப்பிரமணியன் சாமியின் மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ‘நானே விரும்பி இந்த வழக்கில் இணையவில்லை. வழிபாடு செய்வதற்கான எனது அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது என நான் ரிட் மனு தாக்கல் செய்தேன் ( W.P. ( c ) No 105 / 2016 ). அதை விசாரித்த உச்சநீதிமன்றம்தான் அந்த மனுவை திரும்பப்பெற்றுக்கொண்டு இந்த வழக்கில் இணையச் சொன்னது’ என சுப்பிரமணியன் சாமி சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்த நீதிமன்றம் அவரது ரிட் மனுவை உயிர்ப்பித்து அதைத் தனியே விசாரிக்கச் சொல்லிவிட்டது. எனவே இனிமேல் அவர் இந்த வழக்கில் தலையிட்டு அரசியல் செய்யமுடியாது.
இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் டாக்டர் ராஜிவ் தவான் ஒரு முக்கியமான கோரிக்கையை எழுப்பினார். ‘உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வு Dr. M. Ismail Faruqui & Ors. vs. Union of India & Ors., (1994) 6 SCC 360. என்ற வழக்கில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த வழக்கை இன்னும் விரிவான அமர்வு ஒன்றில் விசாரிப்பதற்காக அனுப்பவேண்டும்’என அவர் வாதிட்டார்.
ராஜிவ் தவான் சுட்டிக்காட்டிய தீர்ப்பு 1994 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வால் வழங்கப்பட்டதாகும். 1992 டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1993 ஜனவரி 7 ஆம் தேதி பாபர் மசூதி இருந்த இடத்தில் 67.703 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்தி மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. பின்னர் அதற்கான மசோதா இயற்றப்பட்டு பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டது. அந்தச் சட்டம் இயற்றப்பட்ட அதே நாளில் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 143 (1)ன் கீழ் உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிவதற்கான குடியரசுத் தலைவரின் கடிதம் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.
அயோத்தி நிலம் கையகப்படுத்தும் சட்டம் தொடர்பான வழக்கையும், குடியரசுத் தலைவரின் கடிதத்தையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி எம்.வி.வர்மா தலைமையிலான உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு அந்தச் சட்டத்தின் பிரிவு 4 (3) தவிர பிறவற்றை ஏற்றுக்கொண்டதோடு குடியரசுத் தலைவரின் கடிதத்துக்குப் பதிலளிக்கும் தேவை எழவில்லை என மறுத்துவிட்டது.
அந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் பத்தி 82 ல் கூறப்பட்டிருந்த கருத்தை நோக்கியே இப்போது வழக்கறிஞர் ராஜிவ் தவான் நீதிபதிகளின் கவனத்தை ஈர்த்தார். ‘வக்ஃபு வாரியத்தின் சொத்தை கையகப்படுத்தும்போது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 25 ல் பாதுகாக்கப்பட்டுள்ள வழிபாட்டு உரிமை முத்தவல்லிக்கு மறுக்கப்படுகிறது. ஒரு சொத்தை கையகப்படுத்தினாலும் அங்கே வழிபாடு செய்யும் அவரது உரிமை மறுக்கப்படுவதில்லை’என்ற வாதமே அந்தத் தீர்ப்பின் பத்தி 82ல் முன்வைக்கப்பட்டிருந்தது.
அதுகுறித்து தீர்ப்பளித்த அந்த அமர்வு ‘அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 367ன் படி சொத்து என்பதற்கு மதச்சார்பற்ற முறையில் விளக்கம் தந்துள்ளது. அதன்படி, கோயில், மசூதி, தேவாலயம் என எல்லா விதமான வழிபாட்டிடங்களும் அசையா சொத்தாகவே கருதப்படுகின்றன. அசையா சொத்து என்பது கையக்கப்படுத்தப்படக்கூடியதுதான் என சுட்டிக்காட்டியது. வழிபடும் உரிமை என்பதற்கு எல்லா இடங்களிலும் வழிபடும் உரிமை என்று பொருளல்ல எனவும் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்தக் கருத்துகளைத்தான் வழக்கறிஞர் ராஜிவ் தவான் சுட்டிக்காட்டினார்.
அந்தத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் கருத்து மறு ஆய்வுக்கு உட்பட்டதா என்பதை இந்த அமர்வு தீர்மானிக்கும். தேவையெனில் அதைத் தீர்மானிக்கும் பணியை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வுக்கு அனுப்பும் என்று கூறிய உச்சநீதிமன்றம் ‘இந்தப் பிரச்சனை குறித்து வழக்கறிஞர் தவான் தனது வாதங்களைச் சிறிதளவுதான் இங்கே முன்வைத்துள்ளார், அவர் தனது எஞ்சிய வாதங்களை 23.03.2018 அன்று பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது தொடர்ந்து முன்வைக்கலாம்’ எனத் தனது உத்தரவில் கூறியுள்ளது.
இப்படி அயோத்தி வழக்கு முக்கியமான கட்டத்தில் இருக்கும் சூழலில் நாட்டில் வகுப்புவாத பதட்டத்தை ஏற்படுத்தி உச்சநீதிமன்றத்தின்மீது செல்வாக்கு செலுத்த இந்துத்துவ அமைப்புகள் முயற்சிக்கின்றன. அதற்கு இந்த ரத யாத்திரையைக் கருவியாக்கப் பார்க்கின்றனர். அதனால்தான் இதை எதிர்க்கவேண்டும் என்கிறோம்.
(அடுத்த இரண்டு காரணங்களையும் வரும் பகுதியில் பார்ப்போம்)