தயக்கத்துடன் அரசியலுக்கு வந்தபோதிலும் வியக்க வைக்கும் வகையில் ஆட்சியைத் தந்தவர் ராஜீவ் காந்தி. நாடு இன்று பல்வேறு துறைகளில் வெற்றி நடைபோடுவதற்கு அடித்தளமிட்டவர் அவர். தேசிய வரலாற்றில் அவருக்கு என்றைக்குமே தனி இடமுண்டு. 'இவர்கள் நாட்டிற்கு என்ன செய்தார்கள்?' என்று கூக்குரல் எழுப்புவோர் கூட அவர் அமைத்துத் தந்த வளர்ச்சி எனும் மேடை மீதிருந்துதான் முழங்குகின்றனர்.
நாட்டின் ரத்த நாளங்களான உள்ளாட்சி அமைப்புகள் தங்களது தேவையை தாங்களே திட்டமிட்டு நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், பஞ்சாயத் ராஜ் எனும் சட்டத்தை நிறைவேற்றியவர். இந்தியாவில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்டவர். இன்று உலகமெங்கும் கணினித்துறையில் இந்திய இளைஞர்கள் கோலோச்சி வருவதற்கு மூல காரணமாகத் திகழ்ந்தவர். அரை மனதுடன் அரசியலுக்கு வந்த போதிலும் அளவற்ற சாதனைகளைப் படைத்தவர். "நேருவைப் போல உலக சமாதானத்திற்காக விழையும் உண்மையான தலைவர்" என சிங்கப்பூரை கட்டமைத்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூ- வால் பாராட்டப் பெற்றவர். அவர்தான் ராஜீவ் காந்தி.
புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவ், 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி மும்பையில் பிறந்தார். அவருக்கு மூன்று வயது இருக்கும்போது இந்தியா சுதந்திரம் பெற்று தாத்தா ஜவஹர்லால் நேரு நாட்டின் முதல் பிரதமரானார்.
ராஜீவ் தனது குழந்தைப் பருவத்தை பெருமளவில் நேருவின் இல்லத்தில்தான் கழித்தார். அப்போது தாயார் இந்திரா, தனது தந்தையின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தது அதற்கு ஒரு காரணம். டேராடூனில் உள்ள வெல்ஹாம் பள்ளியில் தொடக்கக் கல்விப் பயின்ற ராஜீவ், பின்னர் இமயமலை அடிவாரத்தில் தங்கும் வசதியுடன் கூடிய டூன் பள்ளிக்கு மாற்றப்பட்டார். ராஜீவ், சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை பெரோஸ் காந்தி,1960ல் காலமாகிவிட்டார்.
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியிலும், லண்டன் இம்பீரியல் கல்லூரியிலும் படித்தார் ராஜீவ். கல்லூரியில் பயின்ற காலத்தில் அவரது புத்தக அலமாரி முழுவதும் அறிவியல் தொடர்பான புத்தகங்கள்தான் நிரம்பி இருக்கும். அரசியல் புத்தகங்கள் ஒன்றுகூட இருக்காது. தேர்வுக்காக பாடங்களை மனப்பாடம் செய்வது அவருக்கு அறவே பிடிக்காத விசயம். இசையில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த அவர், மேற்கத்திய, இந்துஸ்தானி மற்றும் நவீன இசையை அதிகம் விரும்பிக் கேட்டார். இது தவிர புகைப்படம் எடுப்பதும் ராஜீவுக்கு மிகவும் பிடிக்கும்.
தாத்தா, தாய், இளைய சகோதரர் என குடும்பத்தில் பலரும் அரசியலில் இருந்தபோதிலும் கூட, விமானியாக வேண்டும் என்பதே ராஜீவின் கனவாக இருந்தது. அதற்கென டெல்லி விமான ஓட்டுதல் பயிற்சிக் கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று வணிக ரீதியிலான விமானம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றார். பின்னர் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியானார்.
கேம்பிரிட்ஜ் கல்லூரியில் படித்தபோது உடன் பயின்ற சோனியா மைனோ என்ற பெண்ணைக் காதலித்தார். தற்போது சோனியா காந்தி என அறியப்படும் அவரை, 1968ஆம் ஆண்டு டெல்லியில் திருமணம் செய்து கொண்டார். இந்திராவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அப்போது செய்திகள் வந்தன. ஆனாலும் ராஜீவ் தம்பதி தங்களது குழந்தைகளான பிரியங்கா மற்றும் ராகுலுடன் இந்திராவுடனேயே வசித்தனர்.
டெல்லியில் தங்கியிருந்த போதிலும் கூட ராஜீவுக்கு அரசியலில் ஈடுபாடு ஏற்படவில்லை. ஆனால், 1980ல் நிகழ்ந்த ஒரு துயரம் அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றியது. அப்போது தனது இளைய சகோதரர் சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்ததால், அரசியலில் இந்திராவுக்கு உதவ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் ராஜீவ். அதுவரை இந்திரா காந்தியின் அரசியல் வாரிசு போல் இருந்து வந்தவர் சஞ்சய் காந்திதான்.
இதனால்தான் மிகவும் நேசித்த விமானி வேலையை துறந்துவிட்டு, தயக்கத்துடன் அரசியலில் பிரவேசித்தார் ராஜீவ். பின் சஞ்சய் காந்தியின் சொந்த தொகுதியான அமேதியில் போட்டியிட்டு முதன்முறையாக எம்பி ஆனார் ராஜீவ். படிப்படியாக அவர் அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கியிருந்த நிலையில், 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி அரங்கேறியது அந்தப் பயங்கரச் சம்பவம். அன்றைய தினம் ராஜீவ் காந்தியின் தாயார் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆட்சியிலும், கட்சியிலும் யாராலும் அசைக்க முடியாத சக்தியாக இருந்துவந்த அவர் கொல்லப்பட்டதால் பெரும் அரசியல் குழப்பம் உருவானது. இப்பிரச்னைக்குத் தீர்வுக்காண, அரசின் மற்றும் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டார் ராஜீவ்.
இந்திராவின் இறுதிச்சடங்குகள் முடிந்த உடனேயே பொதுத்தேர்தலை நடத்த உத்தரவிட்டார் அவர். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்தார். பல்வேறு பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று காங்கிரசுக்கு வாக்கு திரட்டினார். அதன் விளைவாக, இந்திய அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், காங்கிரஸ் 401 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. பின்னர் நாட்டின் ஆறாவது பிரதமராகப் பதவியேற்றார் ராஜீவ். அப்போது அவருக்கு வயது 40தான். மிக இளம் வயதில் பிரதமரானவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
முன்னதாக, 1984ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரை வந்து பார்த்திருந்தார் இந்திரா காந்தி. அப்போது எம்ஜிஆருக்கு உயர் சிகிச்சை தேவை என்பதை அறிந்து அவரை அமெரிக்கா அனுப்ப முடிவெடுத்திருந்தார் இந்திரா.
ஆனால், அதற்கு முன்னதாக மரணமடைந்துவிட்டதால், அவரது எண்ணத்தை பூர்த்தி செய்தார் மகன் ராஜீவ். ஆம்; சிறிய மருத்துவமனை போன்று வடிவமைக்கப்பட்ட விமானத்தில் எம்ஜிஆரை அமெரிக்காவிற்கு அனுப்பி சிகிச்சை கிடைக்க வழிவகை செய்தார். பிறகு உடல்நலம் தேறி நாடு திரும்பியதால், ராஜீவ் மீது மிகுந்தப் பாசம் கொண்டிருந்தார் எம்ஜிஆர்.
காலப்போக்கில் நாட்டின் தலைமுறை மாற்றத்தை உணர்த்தும் தலைவராக உருவெடுத்த ராஜீவ் காந்தி, அரசியலில் பழுத்த அனுபவம் கொண்டவர்கள் கூட செய்திராத பல அற்புதங்களை நிகழ்த்தினார். 1985ஆம் ஆண்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட தனி அமைச்சகத்தை உருவாக்கினார். அதே வருடம், 'கட்சித்தாவல் தடைச் சட்டத்தை' அறிமுகப்படுத்தி, நேர்மையற்ற அரசியல்வாதிகள் கட்சித்தாவல் மூலம் அரசியலை பாழ்படுத்தி கேலிக்கூத்தாக்கி வருவதற்கு முடிவு கட்டினார்.
நேர்மையானவர்களுக்கும், துடிப்பானவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தனது அமைச்சரவையை உருவாக்கினார். அப்போது இந்திரா காந்தியிடமே நற்பெயர் வாங்கியவர் என்பதால், வி.பி.சிங்கிற்கு நிதித்துறையை ஒதுக்கினார் ராஜீவ். அவரும் பல்வேறு அதிரடி செயல்களில் ஈடுபட்டு ஆட்சிக்கு பெயர் வாங்கித் தந்தார். ஆனாலும், திருபாய் அம்பானி, அமிதாப் பச்சன் போன்றோருக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியதால் நிதி அமைச்சர் பதவியை வி.பி. சிங்கிடமிருந்து பறித்தார் ராஜீவ். நிதியமைச்சராக வி.பி. சிங்கின் செயல்கள் புகழடைந்ததால், அவரை ஒதுக்கி வைக்காமல் பாதுகாப்புத்துறையை ஒதுக்கினார் ராஜீவ்.
இ்ந்தியாவை 21ஆம் நூற்றாண்டில், மிக உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்ற சிந்தனை அவரது மனதில் எப்போதும் குடிகொண்டிருந்தது. அதனை நோக்கி அயராது உழைத்த அவர், மனித வளம் மேம்பட அதற்கென தனி அமைச்சகத்தை 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி உருவாக்கினார். அமெரிக்காவிலிருந்து இ்ந்தியாத் திரும்பிய தகவல் தொழில்நுட்ப மேதை சாம் பிட்ரோடாவை தனது ஆலோசகராக நியமித்தார். அவர் வாயிலாக கணினி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றில் மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார் ராஜீவ்.
இவற்றை கல்விப் பாடத்திட்டங்களில் புகுத்தி, இந்திய இளைஞர்களை, முன்னேறிய நாட்டினருக்கு இணையாக செயல்பட வைத்த பெருமை அவருக்கு உண்டு. ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறை, கணினி போன்ற துறைகளில் இன்று ஏற்பட்டிருக்கும் புரட்சிக்கு வித்திட்டவர் அவரே.
1985ல் தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட சார்க் என்ற அமைப்பு ராஜீவ் காந்தியின் முன் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது. சீரிய முறையில் சென்ற ராஜீவின் ஆட்சிக்கு போஃபர்ஸ் பீரங்கி ரூபத்தில் வந்தது வினை. 1986ஆம் ஆண்டு, ஸ்வீடனில் உள்ள போஃபர்ஸ் எனும் பீரங்கி உற்பத்தி செய்யும் நிறுவனத்திடமிருந்து இந்திய பாதுகாப்புத்துறைக்கு ஆயிரத்து 437 கோடி ரூபாயில் 410 பீரங்கிகள் வாங்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதில் இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகள் சிலருக்கும், இடைத்தரகர்களுக்கும் 64 கோடி ரூபாய் கையூட்டாகக் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஸ்விஸ் வங்கியில் ராஜீவ் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் போடப்பட்டதாகவும் பேசப்பட்டது. நாளேடுகளும், பத்திரிகைகளும் வரிந்து கட்டி செய்திகளை வெளியிட்டு, தலையங்கமும் தீட்டின. அப்போது பாதுகாப்புத்துறையைக் கவனித்து வந்த வி.பி. சிங் இவற்றையெல்லாம் கிளற ஆரம்பித்தார். இறுதியில் அவர் ராஜீவ் காந்திக்கு எதிராகவே போர்க்கொடி உயர்த்தினார். இதன் விளைவாக அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் வி.பி. சிங் காங்கிரசிலிருந்து விலகி ஜனமோர்ச்சா எனும் தனிக்கட்சி கண்டார். பிறகு அந்தக் கட்சியை சில சிறு கட்சிகளுடன் இணைத்து ஜனதா தளம் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.
போஃபர்ஸ் விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியதால் ராஜீவ் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு ராஜீவ் காந்தியை ஊழல்வாதி என விமர்சித்தன. இதனை எதிர்கொள்வது அவருக்கு சவாலாக இருந்தது. இந்தச் சிக்கல்களுக்கு மத்தியில்தான், இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் அவர் கவனம் செலுத்தத் தொடங்கினார். 1987ல் யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் அவரை மிகுந்தக் கவலை கொள்ளச் செய்தன. தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்ததாலும், உணவுப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாலும் வேதனை அடைந்தார் ராஜீவ். அதனையடுத்து, ஹெலிகாப்டர்கள் மூலமாக அவர்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பினார்.
இந்த நடவடிக்கையை அப்போதைய ஜெயவர்த்தனே அரசு சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனால் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ராஜீவ் முன்வைக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஏற்கத் தயாரானது. விளைவு, ஜெயவர்த்தனே - ராஜீவ் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை விடுதலைப்புலிகள் முழு மனதுடன் ஏற்கவில்லை. ஆனாலும், ஒப்பந்தத்தின்படி, இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது. அமைதிப்படை மீது பல விமர்சனங்கள் எழுந்தன. புலிகளும் ராஜீவ் மீது அதிருப்தி கொண்டனர். ஒப்பந்தத்தை சிங்களர்களும் ஏற்கவில்லை என்பதற்கு உதாரணமாக பின்னர் ஒரு சம்பவமும் நிகழ்ந்தது. ராஜீவ் இலங்கை சென்றபோது அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது விஜேமுனி என்ற வீரர், தான் வைத்திருந்த துப்பாக்கியை தலைகீழாகத் திருப்பி ராஜீவைத் தாக்க முயன்றார். அப்போது அவர் கீழே குனிந்ததால் தாக்குதலிருந்து தப்பினார்.
பின்னர் 1988ல் அப்போதைய சோவியத் யூனியன் அதிபர் கோர்பசேவுடன், நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலைகளை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் ஏற்படுத்தினார் ராஜீவ். இத்தகைய சூழலில்தான் 1989ல் மக்களவைக்குத் தேர்தல் வந்தது. இதில் போஃபர்ஸ் ஊழலை ராஜீவுக்கு எதிராக கையிலெடுத்தார் வி.பி. சிங். ஊர் ஊராக போஃபர்ஸ் பீரங்கி போன்ற மாதிரிகளை நிறுத்தி வைத்து தீவிர பரப்புரை மேற்கொண்டார் வி.பி. சிங்.
காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்க, வி.பி. சிங்கின் ஜனதா தளம் கட்சி, இடதுசாரிகள் மற்றும் பாரதிய ஜனதாவுடன் கைகோத்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது. வி.பி.சிங் பிரதமரானார். ஆனால், கூட்டணிக் கட்சிகள் இடையில் ஒற்றுமையின்மையால் ஒரே வருடத்தில் பிரதமர் பதவியை இழந்தார் அவர். அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய மூத்த தலைவர் சந்திரசேகர் சமாஜ்வாடி ஜனதா கட்சி என்ற தனிக்கட்சி கண்டு காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமரானார். சிறிது காலத்தில் காங்கிரஸ் ஆதரவை விலக்கிக்கொண்டதால், சந்திரசேகர் தலைமையிலான அரசும் கவிழ்ந்தது. இதனால் இரண்டே ஆண்டுகளில், அதாவது 1991ல் மீண்டும் தேர்தல் வந்தது.
அதில், காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஜனதா தளம், சமாஜ்வாதி ஜனதா கட்சி என நான்கு முனைப் போட்டி ஏற்பட்டது. அந்தக் கட்சிகளுடன் சில மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன. அப்போது மே 21ஆம் தேதி ராஜீவ் தமிழ்நாடு வந்தபோதுதான் உலகையே பேரதிர்ச்சியில் உறைய வைத்த அந்தப் பயங்கரம் நிகழ்ந்தது. சென்னையிலிருந்து காரில் வந்த அவர், வண்டியைவிட்டு இறங்கி பரப்புரை மேடையை நோக்கி நடக்கத் தொடங்கினார். காங்கிரஸ் தொண்டர்களும், பள்ளிக் குழந்தைகளும் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சரியாக பத்து மணி 21 நிமிடங்களுக்கு தணு என்ற பெண், ராஜீவை அணுகி, அவரது கால்களைத் தொட கீழே குனிந்தார். அப்போது தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை அந்தப் பெண் வெடிக்கச் செய்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்நிகழ்வில், ராஜீவ் காந்தி உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் மாண்டார். அவருடன் மேலும் 14 பேர் உயிரிழந்தனர். இதற்கு பாதுகாப்புக் குறைபாடுகளே காரணம் என்று கூறப்பட்டது. ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அப்போதைய தமிழக ஆளுநரும், உளவுத்துறையும் எச்சரித்திருந்ததை மீறி அவர் வந்ததே இந்த முடிவுக்குக் காரணம் என்றும் பேசப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், புலிகளை அழித்தொழிக்க இலங்கைக்கு மீண்டும் அமைதிப்படையை அனுப்புவேன் என்று ஒரு பத்திரிகைக்கு ராஜீவ் அளித்தப் பேட்டியே இ்ந்தத் துயரத்திற்குக் காரணம் எனவும் கூறப்பட்டது. அப்போது BBCக்கு அளித்த பேட்டியில், இக்கொலைக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பில்லை என்ற பொருள்படும்படி, அது ஒரு துன்பியல் என்று பிரபாகரன் கூறினார். இதேபோன்ற கருத்தை புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கமும் தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற வழக்கு, விசாரணை, தீர்ப்பு, தண்டனை பெற்றவர்களின் மேல் முறையீடு என அனைத்தையும் உலகறியும். ராஜீவ் கொல்லப்பட்டு கால் நூற்றாண்டுக்கு மேலாகிவிட்ட போதிலும், அதில் பல வெளிவராத உண்மைகள் புதைத்து கிடப்பதாகத்தான் இன்றும் நம்பப்படுகிறது.
இந்திய நாடு ஒரு திறமைமிக்க பிரதமரை இழந்த தினம்தான் இன்று. நாடு முழுவதும் அவரது 27வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. டெல்லியிலுள்ள ‘வீர்பூமி’ சோனியா காந்தி, பிரனாப் முகர்ஜி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.