சிறப்புக் களம்

எப்படி இருக்கு ரஜினியின் ‘பேட்ட’ மோஷன் போஸ்டர்?

எப்படி இருக்கு ரஜினியின் ‘பேட்ட’ மோஷன் போஸ்டர்?

webteam

ஷங்கரின் ‘2.0’படத்திற்குப் பின்னால் தொடங்கிய கார்த்திக் சுப்புராஜ் மிக வேகமாக வேலை பார்த்திருக்கிறார். ஷூட்டிங் போனது தெரியவில்லை. அதற்குள் மோஷன் போஸ்டரையே படக்குழு வெளியிட்டு விட்டது. படத்தின் தலைப்பையே இன்றைய ட்ரெண்ட்டிற்கு ஏற்ப மோஷன் போஸ்டர் வடிவில் வெளியிட்டிருக்கும் படக்குழுவிற்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டு மழை குவிய தொடங்கியுள்ளது. 

இளம் நடிகர்கள் தங்களின் படத்திற்கு தலைப்பை பிடிக்க மண்டை காய்ந்து வருகிறார்கள். அப்படியும் இப்படியும் சுற்றி அலைந்துவிட்டு கடைசியில் ரஜினி நடித்த பழைய படத்தின் தலைப்பை தூசி தட்டி வைப்பதை வழக்கமாக்கி இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப ‘பில்லா’, ‘தர்மதுரை’ என பல தலைப்புகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளன. அப்படியும் இல்லையா? அவர் பேசிய பஞ்ச் டயலாக்கை தலைப்பாக்கி விடுகிறார்கள். இதுதான் இன்றைய ட்ரெண்ட்.

ஆனால் ரஜினி தன் பழைய கெத்தை உடைத்து புதிய உலகத்திற்குள் புகுந்திருக்கிறார். ‘காலா’, ‘கபாலி’ என புதிய அடையாளத்தை அவர் ஏற்று கொண்டிருக்கிறார். இதற்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள படத்தின் தலைப்பு. மிக தைரியமாக படத்திற்கு ‘பேட்ட’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த மாற்றம் ரஜினியின் மன மாற்றமாக தெரியவில்லை. அவரது கருத்தியியல் மாற்றமாகவே எடுத்துக் கொள்ள தோன்றுகிறது.

தலைப்பை பல தரப்பினர் கொண்டாடி வருகிறார்கள். இயக்குநர் ரஞ்சித் கூட ‘செம டைட்டில்’ என்று கொண்டாடி இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இதற்கு ‘நம்ம தலைவரின் பேட்டை’ என்று விளக்கம் அளித்துள்ளார். நடிகை சிம்ரன் ‘இவர் மட்டுமே மாஸ்’ என்று குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவன், பாடலாசிரியர் விவேக் என பல தரப்பும் தலைப்பை உச்சி மீது தூக்கி வைத்து பாராட்டி வருகிறது. ஆனால் காலங்காலமாக ரஜினியை ரசிக்கும் பலருக்கு இந்தத் தலைப்பு பிரம்மாண்டமாக இல்லை என தோன்றுவதாக தெரிகிறது. மேலும் மோஷன் போஸ்டர் ஓகே? ஆனால் அதில் ரஜினி புதிய தோற்றத்தில் தெரியவில்லையே என்ற ஏக்கம் இருப்பதை உணர முடிகிறது. 

பழமையான தேவாலயம் உள்ளே கதவை தள்ளிக் கொண்டு நுழையும் ரஜினியின் தோற்றத்தில் ஏனோ ‘எந்திரன்’படத்தின் பாடல் காட்சியின் இடம் பெற்ற ரஜினியின் முகம் ஞாபகத்திற்கு வருகிறது. கழுத்தில் ஸ்கார்ப், புலன் விசாரணையில் விஜயகாந்த் அணிந்திருக்கும் நீளமான கோட், கையில் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் என எதிலும் லேசான பழைய சாயல் தெரிவதாக கூறுகிறார்கள். கூடவே பாய்ந்து வரும் ‘பாபா’ ஸ்டைல் கத்தியையும் சேர்த்து கூற வேண்டும்.

ரஜினிகாந்த் தேவாலயத்திற்குள் நுழையும் மிக பிரம்மாண்டமான காட்சிக்கு இசை எந்த அளவுக்கு கனமாக இருக்க வேண்டும். காதை கிழிக்க வேண்டாம். ஆனால் மிரட்டலாக இருக்க வேண்டாமா? அதான் இல்லை. சத்தங்கள் சரியாக ஒலிக்காமல் போனது மைனஸ் என்கிறார்கள் நெட்டிசன்கள். காகிதங்கள் பறக்கும் மோஷனுக்கு ஏற்ப பிரமோஷன் மியூசிக் இல்லாமல் போனதில் சிலரின் இதய துடிப்பை சற்று ஏமாற்ற வைத்திருக்கிறது.

‘தலைவர்165’ இன்று அதிகாரப்பூர்வமாக ‘பேட்ட’ ஆகி இருக்கிறது. அவரது ரசிகர்கள் தலைப்பு வெளியான வேகத்தில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்கள். அதையும் தாண்டி ‘பேட்ட டு கோட்டை’ என பலர் கொளுத்தி போடும் வேலையையும் பார்க்கிறார்கள். மோஷன் போஸ்டர் முதல் பார்வையில் ஏதோ ஹாரர் மூவிக்கான எஃபெக்ட் தென்படுவதால் இந்தப் ‘பேட்ட’ கொஞ்சம் வித்தியாசமாக வெளிவருவார் என இப்போதைக்கு நம்பலாம்.