இயக்குநர் சிவாவுடன் 4வது முறையாக அஜித் கூட்டணி வைத்த படம் விஸ்வாசம். படம் தொடங்கியபோது அஜித்தின் கெட்டப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பெரிய மீசை, தூக்குதுரை என்ற பெயர் விஸ்வாசம் ஒரு கிராமத்து பின்னணியில் உருவாகும் திரைப்படம் என உறுதியாகியது. அதன் பின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்திலும், தேனிக்கு அருகேயும் நடைபெற்றன. விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். அதன் பின்னர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதைத்தொடர்ந்து பாடல்கள், ட்ரெய்லர் என விஸ்வாசம் எப்போதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்.
அஜித் குரலில் அதிரடியான வசனங்கள், பசுமையான காட்சி பின்னணி என நீண்ட நாட்களுக்கு பிறகு முழு கிராமத்து படமாக விஸ்வாசம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு படம் முழுவதும் வேட்டி சட்டையில் அஜித், அழகான கிராமத்து பெண்ணாக நயன்தாரா, கிராமத்து பின்னணி, குடும்ப உறவுகள், குடும்ப பாசம் என பக்கா குடும்ப பொழுதுபோக்கு படமாக விஸ்வாசம் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. அதற்கு ஏற்றார்போல படத்துக்கு எந்த கத்தரிப்பும் இல்லாமல் யூ சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளது தணிக்கைக்குழு. 15 மாதங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் காணப்போகும் ஆர்வத்தில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.
அதேவேளையில் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. அரசியல் ரீதியாக அடிக்கடி ரஜினி சறுக்கினாலும் சினிமா என்று வந்துவிட்டால் அவரை அடித்துகொள்ள ஆள் இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரஜினி ஏதோ ஒரு வகையில் கவர்ந்துதான் வருகிறார்.
அரசியல் தொடர்பான படங்களில் நடித்து வந்த ரஜினியை பேட்ட திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். கண்களால் காதல் பேசும் ரஜினி, இப்போதைய ட்ரெண்ட் வசனங்களை பேசி மாஸ் காட்டும் ரஜினி, குறும்பாய் சிரித்து வில்லனிடம் ஸ்வீட் வார்னிங் விடும் ரஜினி இவையெல்லாம் பேட்ட திரைப்படத்தில் இருக்குமென அதன் ட்ரெய்லரே சொல்கிறது. அது போக ரஜினியின் லுக் அனைவரையுமே கவர்ந்துள்ளது. போதாத குறைக்கு த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா என மல்டி ஸ்டார்ஸ் படமாக இருக்கிறது பேட்ட. இவர்களெல்லாம் ரஜினிக்கு மேலும் துணை நிற்பார்கள் என்பது உண்மை.
ரசிகர்கள் தான் சமூக வலைதளங்கள் போட்டி போடுகிறார்கள் என்றால் இரு திரைப்படங்களின் ட்ரெய்லருமே வசனங்களில் மோதிக்கொண்டது. நிறைய எதிர்பார்ப்புகளுடன் இரு படங்களுடம் நாளை வெளியாகவுள்ளன. விஸ்வாசம் - பேட்ட திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகமே எதிர்பார்த்து உள்ளனர். தமிழ் சினிமாவின் இரண்டு மிகப்பெரிய நடிகர்கள் நேரடி மோதல் என்பதால் நாளைய தினம் தமிழ் சினிமாவுக்கு 2019 ஆம் ஆண்டின் மிக முக்கிய நாளாக இருக்க போகிறது. இரண்டு படங்களுக்கும் சரிசமமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் வரவேற்புக்கு ஏற்ப தியேட்டர்கள் எண்ணிக்கையில் மாற்றம் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. பேட்ட திரைப்படத்தில் மல்டி ஸ்டார்ஸ்கள் இருக்க அதுக்கு போட்டியாக நிற்கும் விஸ்வாசத்தை அஜித் என்ற ஒருவர் தாங்கி நிற்கிறார்.
நாளைய தினம் ரஜினி Vs அஜித் என்பது இல்லை என்றும், ரஜினி & அஜித் ஆகவே இருக்கப்போவதாகவும் சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். நாளை நடக்கப்போகும் சினிமா ரேஸில் ஜெயிக்கப்போவது பேட்டயா? விஸ்வாசமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.