சிறப்புக் களம்

அரசியல் களத்தில் கமல்-ரஜினி...போட்டியில் முந்தப்போவது யார்?

அரசியல் களத்தில் கமல்-ரஜினி...போட்டியில் முந்தப்போவது யார்?

rajakannan

புதிய கட்சி தொடங்கப்படும் ‌என ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசன் அடுத்த மாதமே கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

போர் வரும் போது..ரஜினி

ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல் நலக்குறைவால் ஓய்வு என, இரு பெரும் தலைவர்கள் தமிழக அரசியல் களத்தில் இல்லாத நிலையில் அதிமுகவின் உட்கட்சி பிரச்னையே கடந்த ஆண்டு தொடக்கம் முதல் தமிழக அரசியலின் மையமாக இருந்து வந்தது. மக்களும் அதிமுகவின் உட்கட்சி பிரச்னையை பார்த்து கடும் அதிருப்தியில் இருந்தனர். இத்தகைய நேரத்தில்தான் கடந்த ஆண்டு மே மாதம் தனது ரசிகர்களை 8 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரஜினி தனது அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பு குறித்து நேரடியாக பேசினார். முடிவாக எதனையும் பேசாத ரஜினி, போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று பேசி முடித்தார். ஸ்டாலின், திருமாவளன், சீமான், அன்புமணி என பல தலைவர்களையும் பாராட்டி பேசிய அவர், சிஸ்டம் சரியில்லை என்று தெரிவித்தது, அரசியல் குறித்த ஆலோசனையில் அவர் இருப்பதை தெளிவுபடுத்தியது. ரஜினியின் இந்த பேச்சு அவரது ரசிகர்களை மகிழ்வித்ததோடு தமிழக அரசியல் களத்தில் சிறிய கல்லையும் விட்டெறிந்தது.

தமிழக அமைச்சர்களும் கமல் விமர்சனமும்

மே மாத பரபரப்பான பேச்சுக்கு பின்னர், டிசம்பர் 31-ம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரஜினி தெளிவாக தெரிவித்தார். ரஜினி மவுனம் காத்த இந்த இடைப்பட்ட காலத்தில் நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியலில் விஸ்வரூபம் எடுத்தார். தமிழகத்தில் ஆளும் அதிமுக மீது பல்வேறு விமர்சனங்களை அடுத்தடுத்து கூறி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை கமல் கூறியது சர்ச்சைக்குள்ளானது. நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்கே கமல் சர்ச்சையாக பேசி வருவதாக அதிமுக தலைவர்கள் கமலை விமர்சித்தனர். கமல், அதிமுக அமைச்சர்கள் இடையே தொடர்ச்சியாக கருத்து மோதலே ஏற்பட்டது. 

அரசியல் களத்தில் இறங்காமல் ட்விட்டரில் மட்டுமே பேசுகிறார் என்று கமல் மீது விமர்சனங்களை அமைச்சர்கள் முன் வைத்தனர். அதற்கு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போதே தாம் அரசியலுக்கு வந்துவிட்டதாக கமல் பதிலடி கொடுத்தார். தமிழக அரசின் மீதான கமலின் விமர்சனம் அதன் பின்னரும் தொடர்ந்து. “ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்” என்னும் அளவிற்கு விமர்சனத்தில் கமல் கடுமையை காட்டினார். நீட் தேர்வு விவகாரத்தில் குதிரைகளோடு பிற்பாடு பேரம் பேசலாம் என்று நேரடியாக சாடினார். தொண்டர்களுக்கு விடுத்த அறிக்கை ஒன்றில், ‘முடிவெடுத்தால் யாம் முதல்வர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

முரசொலி விழாவில் கமல்

தமிழக அரசியல் களத்தில் கமல் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வலம் வந்தது. இதனால் கமல் அரசியலில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. உறுதியான அறிவிப்புகள் ஏதும் இல்லாததால் குழப்பமான நிலையே தொடர்ந்தது. 

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி இதழின் பவளவிழாவில் ரஜினியும் கமலும் கலந்து கொண்டனர். ரஜினி விருந்தினர் பகுதியில் அமர, கமல் மேடையில் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும், திராவிடம் குறித்து அவர் பேசியதும் கமல் திமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. திமுகவின் குரலாகவே கமல் பேசுவதாகவும் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் குற்றம்சாட்டின. 

முரசொலி விழாவில் ‘ரஜினியைப் போல் நானும் மேடைக்கு கீழே இருந்திருக்கலாம். அது, பாதுகாப்பானதாக இருக்கும், என்றாலும் தற்காப்பைவிட, தன்மானம் முக்கியம்’ என கமல் பேசியது மறைமுகமாக ரஜினியை விமர்சித்ததாக பேசப்பட்டது.

பினராயி, கெஜ்ரிவால் உடன் கமல் சந்திப்பு

இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். இதனால், கமல் எந்த அரசியலை முன்னெடுக்கிறார் என்பது குழப்பமாகவே இருந்தது. இருப்பினும், ஊழல் ஒழிப்பை மையமாக கொண்டே கமலின் அரசியல் இருக்கும் என்று கூறப்பட்டது.

வார இதழ் ஒன்றில் கமல் எழுதி வரும் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ தொடர் அவ்வவ்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக இந்து தீவிரவாதம் என்று கமல் எழுதியதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பல இடங்களில் வழக்குகளையும் பதிவு செய்தது. என்னுடைய நிறம் காவி அல்ல என்று கமல் ஏற்கனவே கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் பேசிய ரஜினி, “அரசியலில் இருந்து வெற்றியடைய வேண்டும் என்றால் சினிமா, பெயர், புகழ், செல்வாக்கு இருந்தால் மட்டும் போதாது. அதற்கு மேல் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது மக்களுக்கு மட்டும் தான் தெரியும். எனக்கு சத்தியமாக தெரியாது. அது கமல்ஹாசனுக்கு தெரியும் என்று நான் நினைக்கிறேன். தெரிந்தாலும் எனக்கு சொல்ல மாட்டார். ஒரு வேளை 2 மாதத்துக்கு முன்பு கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ?” என்று கூறினார். ரஜினியின் வெளிப்படையான பேச்சு இருவரிடையே போட்டி நிலவுவதை உறுதி செய்தது.

களத்தில் இறங்கிய கமல்

ட்விட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என்ற விமர்சனத்தை உடைக்கும் விதமாக எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட கமல், அப்பகுதி மக்களை சந்தித்தும் பேசினார். அப்போது, சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். இது கமலின் அரசியல் பிரவேசத்தில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

இதனால், கமல் மீது எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே சென்றது. ரஜினிக்கு முன்பாகவே கமல் அரசியல் கட்சி தொடங்கி விடுவார், நண்பர் கட்சி ஆரம்பிப்பதால் ரஜினி ஒதுங்கிவிடுவார் என்று பேசப்பட்டது. இதனால், நவம்பர் 7-ம் தேதி அவரது பிறந்தநாளில் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஊடக உந்துதலுக்காக கட்சியை அறிவிக்க முடியாது, இதுவெறும் இயக்கத்தார் ஒன்று கூடல் தான் என்று எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பிறந்தநாளில் நற்பணி இயக்கத்தாரை சந்தித்த கமல் அரசியலில் ஈடுபடுவதை உறுதி செய்யும் வகையில் பேசினார். ஆனால் கட்சி அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை. நிகழ்ச்சியில் மக்கள் பிரச்னைகளை அறிந்து கொள்ள #kh, #theditheerpomvaa, #maiamwhistle, #vituouscycle ஆகிய ஹேஷ்டேக்குகளை அறிமுகம் செய்து வைத்தார். மக்கள் பிரச்னைகளை தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறியதே புதிய அறிவிப்பாக இருந்தது. இதனையடுத்து, திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக, மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவிற்குச் சென்றிருந்த கமல், முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.

அரசியல்வாதிகளை குழப்பிய கமல்

கமல் பதிவிடும் ட்விட்கள் தான் புரியவில்லை என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் ஒரே வார்த்தையில் குழப்பிவிட்டார். ‘கமல் திராவிட அரசியலை மேற்கொள்வார், அதனால்தான் கருப்பு சட்டையுடன் எப்பொழுதும் பேட்டியளிக்கிறார். இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்பதை அவரது அன்பே சிவம் படம் மூலம் வெளிப்படுத்தினார்’ என்று பல கருத்துக்கள் நிலவி வந்தது. மேலும் என்னுடைய நிறம் காவி அல்ல என்றும் கூறியிருந்தார். இதனால் பாஜகவுடன் சேரமாட்டார் என்பது உறுதியாக தெரிந்தது. ஆனால், ‘கருப்புக்குள் காவி உட்பட எல்லா நிறங்களும் அடக்கம்’ என்ற அந்த வார்த்தை எல்லோரையும் குழப்பிவிட்டது. இதுகுறித்து அரசியல் தளங்களில் பல நாட்கள் விவாதங்கள் நடந்தன. தமிழக அரசை விமர்சிக்கும் அளவிற்கு மத்திய அரசை விமர்சிப்பதில்லை, அதனால் பாஜக உடன் மறைமுகமாக கூட்டு சேர்ந்துள்ளார் என்றும் சிலர் கமலை விமர்சித்தனர். இருப்பினும் கமலின் அரசியல் முகத்தை யாராலும் கணிக்க முடியவில்லை.

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு

பிறந்தநாளுக்கு பிறகு கமலின் அரசியல் குறித்த பேச்சுகளில் தொய்வு ஏற்பட்டது. விஸ்வரூபம் படப்பணிகளில் அவர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ள தகவல்கள் வெளியானது. கமலின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுகள் மறைய தொடங்கிய நிலையில், ரஜினி குறித்த பேச்சு அடிபடத் தொடங்கியது. டிசம்பர் 12-ம் தேதி பிறந்தநாளன்று ரஜினி அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இதனால், பிறந்தநாளில் ரஜினி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினரும் ரசிகர்களுடன் சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. டிசம்பர் 26-ம் தேதி முதல் 31 வரை 6 நாட்கள் சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலே ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து முடிவை இறுதி நாளில் வெளியிடப் போவதாக கூறிவிட்டார். இதனால் ரசிகர்களுடனான ஒவ்வொரு நாள் சந்திப்பையும் ஊடகங்கள் உற்று நோக்கின. இறுதியாக டிசம்பர் 31-ம் தேதி அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரஜினி தெரிவித்தார். தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்தார். இது கால் நூற்றாண்டு எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

இதன்பிறகு ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் ரஜினிதான் பேசு பொருளாக மாறினார். தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாக 'ரஜினி மன்றம்' என்ற ஒரு புதிய இணையதளம் மற்றும் ஒரு செயலியை  ரஜினி அறிமுகப்படுத்தினார். இருப்பினும், கட்சிப் பெயர், கொடி குறித்த எந்த அறிவிப்பும் இல்லாமலே இருந்தது. கொள்கை என்ன தலைவரே என நிருபர்கள் கேட்டதற்கு ஒரு நிமிஷம் தலை சுத்துது என்று பதிலளித்தார். ஆனால் தன்னுடைய பாதை ஆன்மீக அரசியல் என்று அவர் கூறியது  எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தது. 

அரசியல் குறித்து அறிவிப்புக்கு பின்னர், மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்ற ரஜினி, சுவாமி கவுதமானந்தாவை சந்தித்து ஆசி பெற்றார். இதனையடுத்து, ரஜினி அதிரடியாக திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்கும், அரசியல் பிரவேசத்தை கூறி வாழ்த்து பெறுவதற்காகவும் சந்தித்ததாக ரஜினி கூறினார். இதனையடுத்து, எம்.ஜி.ஆர் கழக தலைவரும், 1996-ஆம் ஆண்டிலேயே ரஜினி அரசியலுக்கு வர விரும்பியவருமான ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தார். இதனையடுத்து பொங்கலுக்கு ரசிகர்களை சந்தித்த போதும் ரஜினி புதிய அறிவிப்பு ஒன்றையும் தெரிவிக்கவில்லை. 

பிப். 21-ல் கட்சி பெயர்..கமல் அதிரடி அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலின் போது புதிய கட்சி தொடங்கப்படும் ‌என ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசன் அடுத்த மாதமே கட்சியின் பெயரை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். தனது சொந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் பிப்ரவரி 21ம் தேதி கட்சியி‌ன் பெயரை அறிவிக்க உள்ளதோடு, ‌மக்கள் சந்திப்பு பயணத்தையும் தொடங்குகிறார். ட்விட்டர் மூலம் மட்டுமே கமல் அரசியல் செய்வதாக விமர்சித்தவர்களுக்கு அவரின் மக்கள் சந்திப்பு பயணம் தகுந்த பாடம் புகட்டும் என்கின்றனர் கமலின் ரசிகர்கள். ஆன்மிக அரசியலை ரஜினி முன்னெடுத்துள்ள நிலையில், திராவிட அரசியலை கமல் முன்னெடுப்பார் எனத் தெரிகிறது. கமல் புதிய கட்சி தொடங்குவதை அடுத்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்புக்கு குறைவில்லாத சூழல் உருவாகியுள்ளது.  

கமல் அறிவிப்பு குறித்து அரசியல் விமர்சகர்கள்..

கமலின் அறிவிப்பு குறித்து பேசிய அரசியல் விமர்சகர் ராதாகிருஷ்ணன், “அதிமுக திமுக அரசியலை நீக்கிவிட்டு ரஜினி, கமல் அரசியலாக மாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அவர்களின் எண்ணங்கள் நிறைவேறும் வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இனி இவர்கள் இருவரை வைத்தே தமிழக அரசியல் நிகழ்வுகள் நடைபெறும் என்ற ஐயம் உள்ளது” என்றார். அதேபோல், அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் கூறுகையில், “ரஜினி 16 சதவீதம் ஆதரவு இருக்கிறது என ஆங்கில இதழ் ஒன்று கருத்துக் கணிப்பு வெளியானது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை தெரிந்து கமல் அறிவிப்பு வெளியிட்டுள்ளாரா?. ஏற்கனவே கூறிய பயண அறிவிப்பை கமல் அவசர கதியில் வெளியிட காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

கமல் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடும் பட்சத்தில் அது ரஜினிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். அதன் பின்னர், ரஜினியும் கட்சி, கொடி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார். இதனால் விரைவில் இரு துருவ அரசியல் தமிழகத்தில் உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. ரஜினியும், கமலும் அரசியல் களத்தில் இறங்கும் பட்சத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அவர்கள் மாறுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..