சிறப்புக் களம்

மீண்டும் அதிகாரத்துக்கு வருகிறார் ராஜபட்ச?

webteam

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில், அப்போதைய அதிபர் மஹிந்த ராஜபட்ச அதிபர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அதற்கு இரு மாதங்களுக்கு முன்புவரை ராஜபக்சவின் அரசில் அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேனா புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். 

ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், தமிழ்பேசும் இஸ்லாமியர் ஆகியோர் ஒன்றாக இணைந்து இந்த ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டார்கள். பெருவாரியான சிங்களர்களும்  ராஜபக்சவின் பத்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வருவதில் பெரும்பங்காற்றினர். கொடுமையான போரை நடத்திய, இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிற ஓர் ஆட்சி முடிந்து போனதை உலகமெல்லாம் வசிக்கும் தமிழர்கள் கொண்டாடினார்கள்.

இதைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே பிரதமரானார். இனப்படுகொலைக்குக் காரணமான ராஜபக்ச இனி அதிகாரத்துக்கு வர வாய்ப்பே இல்லை என்று தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். இந்த எண்ணம் கடந்தவாரம் பொய்த்துப் போனது. 

இலங்கை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பெருவாரியான இடங்களில் ராஜபட்சவின் புதிய கட்சியான இலங்கை பொதுஜன முன்னணி வெற்றி பெற்றது. பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசியக் கூட்டணியும், அதிபர் மைத்ரி பால சிறிசேனவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியும் குறைவான இடங்களையே பெற்றன. உள்ளாட்சி அமைப்புக்கு நடந்த இந்தத் தேர்தல்தான் இலங்கையின் மத்திய அரசியலைக் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. 

இலங்கையில் சிறிசேனாவின் கூட்டணியும், ரணிலின் அணியும் கூட்டாக அரசமைத்து ஆட்சி செய்து வருகின்றன. 225 இடங்களைக் கொண்ட இலங்கை  நாடாளுமன்றத்தில்  ரணிலின் கூட்டணிக்கு 106 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.  சிறிசேனவுக்கு ஆதரவான சுதந்திரக் கூட்டணிக்கு 49 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ராஜபக்சவுக்கு ஆதரவாக 46 உறுப்பினர்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ராஜபக்சவின் கட்சி எழுச்சி பெற்றிருப்பதால், தனது அரசியல் வருங்காலம் குறித்து முடிவு செய்யும் நிலைக்கு சிறிசேனா தள்ளப்பட்டார்.

அதே நேரத்தில் தனிப்பெரும்பான்மைக்கு 7 இடங்கள் மட்டுமே குறைவாக வைத்திருக்கும் ரணில், தனியாக ஆட்சியமைப்பதற்கும் திட்டமிட்டார். இத்தகையத் திடீர் அரசியல் விருப்பங்களால் ஒட்டுமொத்தமாக இலங்கையின் அரசியலே மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய சூழலுக்குச் சென்றிருக்கிறது. ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி நடந்துவரும் இந்த அரசியல் சதுரங்கத்தில், சிறிசேனவின் நகர்வுகளே அதிகமாகக் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. 
 
ராஜபக்சவுக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதை அறிந்து அவருடன் கூட்டுச் சேருவதற்காக பேச்சு நடத்தி வருகிறார் சிறிசேன. இரு அணிகளும் இணைந்தால் நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த பலம் 95 ஆக உயரும். ஆட்சியமைக்க வேண்டுமெனில் குறைந்தது 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 95 உறுப்பினர்கள் போக, ரணில் பக்கமிருந்து சிலரை இழுத்துவிட முடியும் என்று ராஜபக்ச - சிறிசேன அணி நம்புகிறது. அப்படியொரு ஆட்சி அமைந்தாலும், அதில் ராஜபக்ச பிரதமராவதை பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பவில்லை.  

இதற்கு மாற்றாக இப்போதைக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக்கலாம் என்ற யோசனை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. அதே நேரத்தில் பிரதமர் ரணிலும் ஆட்சியை எளிதாக விட்டுக்கொடுத்துவிடப் போவதில்லை. 14 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மறைமுகமான ஆதரவு அவருக்குக் கிடைக்கும் என்று பேசப்படுகிறது.  ஆயினும் எத்தனைபேர் ரணில் கட்சியில் இருந்து வெளியேறப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தே, அவரது ஆட்சி நீடிக்குமா என்பதைக் கூற முடியும். அதிபர் மைத்திரிபால சிறிசேன, புத்தெழுச்சி பெற்றிருக்கும் ராஜபக்ச ஆகியோரில் யார் அதிகாரத்தைக் கைப்பற்றப் போகிறார்கள் என்பது இந்தக் கட்சித் தாவலின் அளவைப் பொருத்துதான் முடிவாகப் போகிறது. அந்த முடிவு இனப்படுகொலை தொடர்பிலான சர்வதேச அழுத்தங்களிலும் இந்திய - இலங்கை உறவிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.