ஆக்ரோஷத்தையும் கிரிக்கெட்டையும் பிரிக்க முடியாதுதான். ஆனால், அதுவே ஆத்திரத்தைத் தூண்டும் விதமாக அமைந்தால் பிரச்னையாகிவிடுகிறது. கிரிக்கெட் வீரர்களிடையே இந்த அனல்வீசும் ஆக்ரோஷம் இன்று நேற்றல்ல, ஆரம்பத்தில் இருந்தே இருந்திருக்கிறது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முட்டல் மோதலுக்கு குறைவிருக்காது. வீரர்கள் ஒருவரை ஒருவர் திட்டுவதும் கிண்டல் செய்வதும் கோபத்தில் முறைப்பதும் இயல்பாகவே நடக்கும். எல்லை மீறாதவரை எதுவும் இல்லை. மீறினால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு தண்டனை வழங்கும். ஆஸ்திரேலிய
அணி பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியிலும் இந்த மோதலைப் பார்த்திருக்க முடியும். இதே போல நியூசிலாந்து-ஆஸ்திரேலிய தொடர்களிலும் வீரர்களின் வார்த்தை மோதல் தெறிக்கும். தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து என எந்த நாட்டு வீரர்களும் இதற்கு விதி விலக்கல்ல.
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதினால் வெறி கொண்ட பாய்ச்சலுக்கும் கோபத்துக்கும் கேட்கவே வேண்டாம். திட்டுவதும் முறைப்பதும் ஒரு படி மேலே போய், நடுவர் வரை போய்விடும் பஞ்சாயத்து. இதற்கு உதாரணமாகக் காணக் கிடைக்கின்றன பல சம்பவங்கள். மியான் தத்தில் இருந்து அப்ரிடி- சேவாக், அப்ரிடி- கங்குலி, அப்ரிடி- காம்பீர், கம்ரன் அக்மல்-
காம்பீர், ஹர்பஜன் - சோயிப் அக்தர், அக்தர்- சச்சின் மோதல்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
’இது ஒரு சைக்காலஜி. வீரர்களை திட்டி, ஆத்திரத்தை ஏற்படுத்தி, அவர்கள் அந்தக் கோபத்தை பந்தை அடிப்பதில் காண்பிக்கும்போது விக்கெட் வீழ்த்துவது யுக்தி. இதற்காகத்தான் அப்படி பேசுகிறார்கள். ஆனால், போட்டி முடிந்ததும் சகஜமாகி விடுவார்கள்’ என்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர். ’கிரிக்கெட்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்கிறார்கள் மேலும் சில வீரர்கள்.
ஆனால் தென்னாப்பிரிக்காவின் ரபாடா இதில் இருந்து வேறுபட்டிருக்கிறார். அவர் களமிறங்கும் அனைத்து போட்டியிலும் இப்படி முறைப்பதையும் திட்டுவதையும் வழக்கமாகவே வைத்திருக்கிறார். அதாவது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வகுத்திருக்கும் வீரர்களுக்கான ஒழுக்க நெறிகளில் இருந்து மீறுகிறார் இவர் என்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த போது, மூன்றாவது ஒரு நாள் போட்டியில் விராத் கோலியை கடுமையாகத் திட்டினார் ரபாடா. 5-வது ஒரு நாள் போட்டியில் தவான் அவுட்டானதும், ‘வெளியே போ’ எனக் கத்திவிட்டு ஆபாசமாகத் திட்டினார் ரபாடா. பதிலுக்குக் கத்தினார் தவானும். இதற்க்காக ரபாடாவுக்கு போட்டிக் கட்டணத்தில் 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதற்கு முன்பும் பல போட்டிகளில் இப்படி நடந்துகொண்டதால், அவருக்கு 5 மைனஸ் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நேற்றும் அநாகரிகமாக நடந்து கொண்டார் ரபாடா. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கான 2-வது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்க த் தரப்பில் ரபாடா 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியின் போது, ரபாடா பந்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். நடுவரை நோக்கிச் சென்ற ஸ்மித், டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்தார். மூன்றாவது நடுவர், இதை டிவியில் ரீப்ளே செய்து பார்த்ததில் ஸ்மித் அவுட் ஆனது தெரிந்தது. இதையடுத்து ரபாடா, ஸ்மித்தின் முகத்துக்கு நேராக ‘யெஸ்’ என்று எரிச்சலுடன் பலமுறை கத்தினார். பின்னர் அவர் தோளில் மோதியபடி சென்றார். இந்தச் சம்பவம் பிரச்னையாகும் என்று கூறப்படுகிறது.
இதுவரை ரபாடா, ஒழுக்கக் குறைவுக்காக 5 மைனஸ் புள்ளிகளை பெற்றிருக்கிறார். 24 மாதங்களுக்குள் சர்வதேசப் போட்டிகளில் 4 மைனஸ் புள்ளிகள் வரை முதல் முறையாக ஒரு வீரர் பெற்றால், அவர் அடுத்த ஒரு போட்டிக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவார். அந்த வகையில் ரபாடா 4 புள்ளிகள் பெற்று, கடந்த 2017-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்போது ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்திவிட்டு திட்டினார் கோபமாக.
இனி 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இன்னும் 3 மைனஸ் புள்ளிகள் பெற்றால், மீண்டும் ஒரு டெஸ்ட் போட்டி அல்லது 2 அல்லது 4 ஒரு நாள் அல்லது 4 டி20, போட்டிகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவார்.
ஏற்கனவே, முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் டி காக்குடன் மோதிய ஆஸ்திரேலியாவின் வார்னருக்கு போட்டிக் கட்டணத்தில் 75 சதவிகிதம் அபராதமாகவும் சுழற்பந்துவீச்சாளர் லியானுக்கு 15 சதவிகித அபராதமும் டிகாக்குக்கு 25 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இப்போது ரபாடாவுக்கும் காத்திருக்கிறது. ஏன் இப்படி அடிக்கடிச் செய்கிறார் ரபாடா?
‘தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு இது ஒன்றும் புதில்லை. முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்டில் இருந்து சமீபத்திய ஸ்டெயின் வரை இப்படித்தான். அந்த வழியில் ரபாடாவும் இப்படி செய்கிறார். இதற்கான நோக்கம் என்னவாக இருக்க முடியும்? வேறென்ன விக்கெட்தான்’ என்கிறார்கள் சீனியர் வீரர்கள்.
போங்கப்பா, நீங்களும் உங்க விக்கெட்டும்!