சிறப்புக் களம்

வழிவிட்ட க்யூப்.. தீபாவளிக்கு வெளியாகுமா புதுப்படங்கள், களைகட்டுமா திரையரங்குகள்?

webteam

மார்ச் மாதத்திற்கு பிறகு அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்தது கொரோனா. சீனாவில் ஒலிக்கத் தொடங்கிய கொரோனா என்ற வார்த்தை உள்ளூர் வரையும் வந்து சேர்ந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டமின்றி நாடே வெறிச்சோடியது. பின்னர் நாட்கள் ஓடஓட ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 8 மாதம் கடந்துவிட்ட நிலையில் தற்போது தான் சகஜ நிலை திரும்பி வருகிறது. இந்த ஊரடங்கில் கடைசியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் இடம்பெற்றது தியேட்டர்கள் திறப்பு.

சில மாநிலங்கள் கடந்த மாதமே தியேட்டர்களை திறந்துவிட்ட நிலையில் தமிழக அரசு அமைதிகாத்து வந்தது. இந்நிலையில் இன்று முதல் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தனிமனித இடைவெளி, கிருமி நாசினி என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள வேண்டுமென்றும் அரசு அறிவித்துள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்ட காலங்களில் ஓடிடியின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது. பல சிறிய படங்கள் ஓடிடியில் வெளியானது. சூர்யாவின் சூரரைப் போற்று படமும் ஓடிடி ரிலீஸ் என்ற அறிவிப்புதான் ஓடிடி தளத்தின் அடுத்தக்கட்டமாக பார்க்கப்பட்டது.

மிகப்பெரிய கொண்டாட்டங்களுக்கு பெயர்போன பெரிய நடிகர் தன்னுடைய படத்தை ஓடிடியில் வெளியிடுவது என்பது கவனிக்கத்தக்க விஷயமாகவே இருந்தது. இப்படி சில காலம் போனால் தியேட்டர்கள் அழிவை நோக்கிச் செல்லும் என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். அதேவேளையில் தியேட்டர்கள் என்பது கொண்டாட்டத்திற்கான இடம். எத்தனை ஓடிடி வந்தாலும் தியேட்டர்களில் கொண்டாட்டத்தை தடுக்க முடியாது என்று கருத்து பதிவிட்டனர் தியேட்டர் ரசிகர்கள். இப்படி பல விமர்சனங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனாலும் பிரச்னை தீரவில்லை.

விபிஎப் கட்டணத்தை இனிமேல் நாங்கள் செலுத்த மாட்டோம் என தயாரிப்பாளர்கள் குரல் எழுப்பினர். ஒரு படம் டிஜிட்டல் முறையில் தியேட்டரில் ஒளிபரப்பப்படும். அதனை ஒளிபரப்ப க்யூப், விஎப்ஓ போன்ற நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பணத்தை தயாரிப்பாளர்களே கொடுத்து வந்தனர். தற்போது அந்த தொகையை நாங்கள் செலுத்தமாட்டோம் திரையரங்குகளே செலுத்திக்கொள்ள வேண்டுமென்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் வழக்கம்போல் தயாரிப்பாளர்களே விபிஎப் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையென்றால் புதுப்படத்தை ரிலீஸ் செய்யவே மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இருதரப்பும் முரண்டுபிடித்து நின்றதால் வரும் தீபாவளிக்கு புதுப்படம் வெளியாகாத நிலை உருவானது. இந்நிலையில் தற்போது கியூப் நிறுவனம் விபிஎஃப் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இந்த தள்ளுபடி அனைத்து புதிய திரைப்படங்களுக்கும் நவம்பர் மாதம் முழுவதற்கும் பொருந்தும். கொரோனா நெருக்கடி காரணமாக சினிமாத்துறை மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது, இதன்காரணமாக சினிமாவை சார்ந்த பல தொழில்களும் முடக்கியுள்ளது, இதனை மீட்பதற்காக கியூப் இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. க்யூப் நிறுவனத்தில் இந்த அறிவிப்பால் தமிழகத்தில் தீபாவளிக்கு புதுப்படங்கள் வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. புதுப்படங்கள் வெளியாகுமா? எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகும்? என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் இது தற்காலிக முடிவாகவே இருப்பதாகவும், விபிஎப் பிரச்னையில் நிரந்தர தீர்வு வேண்டுமென்றும் தயாரிப்பாளர் தரப்பு விரும்புவதாக தெரிகிறது.

க்யூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தீபாவளி பண்டிகையை திரையரங்கில் பார்வையாளர்களுடன் கொண்டாடுவதற்கு அனைவருக்கும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளனர். புதுப்படங்கள் வெளியாகுமா? வழக்கமான கொண்டாட்டத்துடன் தீபாவளி காலை விடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.