நிலையான தொழில்நுட்பத்துறையில், ஐக்கிய நாடுகள் சபையால் உலகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 விஞ்ஞானிகளில் ஒருவர் நமது தமிழகத்தைச் சேர்ந்த விஜயராகவன் விஸ்வநாதன். அவருக்கு புதிய தலைமுறை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவிற்கான நம்பிக்கை நட்சத்திரம் விருதை வழங்கியுள்ளது.
ராஜபாளையத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் விஜயராகவன் விஸ்வநாதன். பட்டப்படிப்பை எட்டாத தலைமுறையில், முதன்முதலாய் பொறியியல் கல்லூரியில் தடம்பதித்து சுயமுயற்சியால் விஞ்ஞானியாக மகுடம் சூடியவர். நேனோ டெக்னாலஜியில் இருந்த ஆர்வத்தையும், புதியவற்றை உருவாக்கத் துடிக்கும் தேடலையும் அறிந்த இத்தாலி, இந்தியா, பிரான்ஸ் ஆகிய அரசுகள் விஜயராகவன் விஸ்வநாதன் எம்.எஸ் படிக்க உதவிக்கரம் நீட்டின.
”முதல் நாள் பொறியியல் வகுப்பில் எல்லோரும் தங்களை ஆங்கிலத்தில் பேசி அறிமுகப்படுத்திக் கொண்டனர். என்னால் சில வார்த்தைகள் தான் பேச முடிந்தது. கண்ணீரை அடக்கமுடியவில்லை. என்ன செய்வதென்று எனக்கு அப்போது தெரியவில்லை” என்று தனது முதல் நாள் கல்லூரி அனுபவத்தை கூறுகிறார் விஜயராகவன் விஸ்வநாதன்.
வெளிநாடுகளின் உதவித்தொகையில் படித்த இவரது திறமையை தன்வசமாக்கிக்கொள்ள, ஐரோப்பா அணு ஆராய்ச்சிக் கழகத்தில் லட்சக்கணக்கில் ஊதியம் அளித்து பணியாற்ற சேர்த்துக் கொண்டனர். அதுமட்டுமில்லாமல், 38 நாடுகளுக்குச் சென்று ஆராய்ச்சி மற்றும் தொழில்துறையை கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் விஜயராகவன் விஸ்வநாதனுக்கு கிடைத்தது. எனினும், தாய்நாட்டுப் பற்றுக் கொண்ட இவர் தமிழகம் வந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால், நேனோடெக்னாலஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குறைவான தண்ணீர் மற்றும் உரங்களைப் பயன்படுத்தி விவசாயத்தை வளர்ச்சியடையச் செய்யும் ஆராய்ச்சியில் வெற்றி கண்டார்.
உலகம் வெப்பமடைவதைத் தடுக்க, தனது நேனோ தொழில்நுட்பத்தின் மூலம், ஒரு ஏக்கருக்குள் நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவை, 3 டன் அளவிற்கு குறைத்திடும் முயற்சியில் வெற்றிகண்டார். தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களில் வெளிவரும் கார்பன் டை ஆக்சைடைக் குறைக்கும் முயற்சியில் முத்திரை பதிக்கும் வகையில் தன் அலுவலகத்தை, சோலார் மின் உற்பத்தியில் செயல்படும் விதத்தில் வடிவமைத்தார்.
இன்று, பல தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும், கிராமம் சார்ந்த பல கல்லூரிகளுக்கு சிறப்பு விரிவுரையாளராகவும் செயல்பட்டு வருகிறார் விஜயராகவன் விஸ்வநாதன். விஞ்ஞான ரீதியிலான வெற்றிக்கு தனது தாய் தந்தையையும், மனைவியும் பக்கபலமாக இருப்பதாகக் கூறும், அவர் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாய் ஒளிர்கிறார்.