கோவிட் அச்சம் தற்போது வரை நீடித்தாலும், சில மாதங்களுக்கு முன்பு இருந்த அச்சம் தற்போது இல்லை. வேடிக்கையாக இதனுடன் 'வாழப் பழகிவிட்டோம்' என நாம் அழைத்தாலும், தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையும் ஒரு முக்கியக் காரணம். இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசிகளுக்கான அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவில் தடுப்பூசி வினியோக நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி அனுமதி வேண்டி சில நிறுவனங்கள் விண்ணப்பித்திருக்கின்றன.
இந்த நிலையில் தடுப்பூசி சோதனை, அதனுடைய வெற்றி சதவீதம், எப்படி பயன்படுத்தமுடியும் என்னும் பல கேள்விகளுடன் பார்மா ஆராய்ச்சி நிறுவனமான ஜிபோ ஆர்என்டி சொல்யூஷன்ஸ் (Zifo RnD Solutions) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜ் பிரகாஷை சந்திந்தோம்.
பர்மா துறை ஆராய்ச்சியில் சர்வதேச அளவில் உள்ள முக்கிய பார்மா நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிறுவனம் பணியாற்றி வருகிறது. மேலும் கோவிட் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சியிலும் பல பார்மா நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதால் தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்க முடியும் என்பதால் ராஜ் பிரகாஷை சந்தித்தோம். கேள்வி - பதில் உரையாடலாக அல்லாமல், தடுப்பூசி குறித்து சில மணி நேரங்கள் உரையாடினேன். அந்த உரையாடலின் தொகுப்பு இதோ...
"பொதுவாக தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு சில ஆண்டுகள் கூட ஆகும். ஆனால், இதுவரை இல்லாத அளவாக குறைந்த காலத்தில் இந்த சாதனையை நாம் நிகழ்த்தி இருக்கிறோம் என்பது நிச்சயம் முக்கியமான சாதனைதான். அதேசமயம் mRNA (Messenger RNA) முறையிலான தடுப்பூசி சோதனையில் பெரு வெற்றி அடைந்திருப்பது நாம் யாருமே எதிர்பாராதது. இந்த முறையில் ஒரு தடுப்பூசியை நாம் கண்டுபிடித்துவிட்டதால் இனி பல நோய்களுக்கு நம்மால் அதற்கான தீர்வை கண்டுபிடிக்க முடியும்.
புரிவதுபோல் சொல்வதென்றால், தடுப்பூசி என்பது அந்த நோயின் இறந்த செல்கள் அல்லது வீரியம் குறைந்த செல்களை நம் உடலுக்குள் புகுத்தி நம் உடலை அந்த நோய் தாக்காதவாறு தயார்படுத்துவதே இதுவரையிலான தடுப்பூசிகள் செய்துவந்தன. காலங்காலமாக இவை பயன்படுத்திவரும் நடைமுறைதான்.
ஆனால், தற்போது பெரு வெற்றி பெற்றிருக்கின்ற தடுப்பூசிகள் (mRNA) கொஞ்சம் வித்தியாசமானவை. இந்த தடுப்பூசி மூலம் நம் உடலுக்கு ஒரு செலுத்தப்படும் மருந்து மூலமாக வைரஸின் ஒரு குறிப்பிட்ட பகுதியை (spike protein) நம் உடலே உற்பத்தி செய்யும். இந்த தகவலை கொடுப்பதால்தான் Messenger RNA என நாம் வகைப்படுத்துகிறோம். இந்த தடுப்பூசி நம் உடலுக்கு சம்பந்தபட்ட வைரஸின் ஒரு பகுதியை உற்பத்தி செய்வதற்கு தேவையான கட்டளையை இடுகின்றன. இதன் மூலம் வைரஸ் தோன்றிவிட்டது என்பதை உடல் புரிந்துகொண்டு, அதனை எதிர்கொள்வதற்கு தேவையான எதிர்ப்புசக்தியை உடலே உற்பத்தி செய்துகொள்ளும்.
mRNA பிரிவில் பெரிய அளவிலான ஆராய்ச்சிகள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்தாலும் தற்போது கிடைத்திருக்கும் வெற்றிதான் பெரிய அளவிலான வெற்றி. இதன்மூலம் ஒரு மருந்து நம் உடலுக்கு கட்டளை மூலம் வைரஸின் ஒரு பகுதியை உருவாக்கமுடிந்துவிட்டதால் பல நோய்களுக்கு நம்மால் தீர்வு காணமுடியும்.
தற்போது அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா மற்றும் பைசர் பயோ என்டெக் ஆகிய நிறுவனம் இதில் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது.
வெற்றி எப்படி கணக்கிடப்படுகிறது?
பெரும்பாலானவர்களுக்கு இந்த தடுப்பூசிகளின் வெற்றி சதவீதம் எப்படி கணக்கிடப்படுகிறது என்னும் சந்தேகம் இருப்பது இயல்புதான். கிளினிக்கல் ட்ரையல் எப்படி நடக்கிறது எனப்தை பார்த்தால் இதற்கான சந்தேகம் தீரும்.
மாடர்னா நிறுவனத்தின் ட்ரையல் எப்படி நடந்தது என பார்ப்போம். சுமார் 30,000 தன்னார்வலர்கள் இந்த தடுப்பூசி சோதனையில் கலந்துகொள்கிறார்கள். இதில் 15,000 நபர்களுக்கு உண்மையான தடுப்பூசியும், 15,000 நபர்களுக்கு பக்கவிளைவு இல்லாத தடுப்பூசி அல்லாத மருந்தையும் (டம்மி தடுப்பூசி) வழங்குவார்கள். யாருக்கு என்ன கொடுக்கப்பட்டது என்பது சோதனையில் கலந்துகொண்டவர்களுக்கும் தெரியாது, மருந்தை கொடுத்த மருத்துவர், செவிலியர் அல்லது மருத்துவமனை என யாருக்கும் தெரியாது. இந்த ஆராய்ச்சியை நடந்தும் நிறுவனத்துக்கு கூட தெரியாது. குறிப்பிட்ட ஒரு குழுவுக்கு மட்டும் இந்த தகவல்கள் தெரியும்.
இந்தக் குழுதான் உண்மையான தடுப்பூசியையும், டம்மியையும் செலுத்திக்கொண்ட 30,000 பேரை கண்காணிக்கும். இந்த 30,000 பேருமே மக்களோடு மக்களாக சமூகத்தில் இயல்பு வாழ்க்கையில் இருப்பர். இவர்களில் முதல் 95 பேருக்கு எப்போது கொரோனா தொற்று ஏற்படுகிறதோ, அந்த 95 பேரையும் தனியாகப் பிரித்து ஆய்வுகளை மேற்கொள்வர். அப்படி முதல் 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதும், அவர்களில் யாரெல்லாம் உண்மையான தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், யாரெல்லாம் டம்மியான தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் என்பது பிரிக்கப்படும். அப்படிப் பிரித்துப் பார்க்கும்போது, 95 பேரில் 5 பேர் மட்டுமே உண்மையான தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் என்பதும், எஞ்சிய 90 பேரும் டம்மி தடுப்பூசி - அதாவது உண்மையான தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் என்பதும் மார்டனா பரிசோதனையில் தெரியவந்தது. ஆக, மதிப்பீடுக்காக எடுக்கப்படும் முதல் 95 தொற்றாளர்களில் உண்மையான தடுப்பூசி போடப்பட்டவர்களில் வெறும் 5 பேருக்குதான் வந்திருக்கிறது என்பதால், வெற்றி என்பது ஏறக்குறைய 95% ஆகிவிடுகிறது. இந்த அடிப்படையில்தான் 94.7 சதவீதம் வெற்றி என மாடர்னா அறிவிக்கிறது.
தடுப்பூசி ஆய்வுகள் வழக்கமாக இப்படித்தான் நடக்கும். கோவிட் தொற்று ஏற்பட்ட 95 நபர்களில் 11 நபர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து பேரில் ஒருவருக்கு கூட கடுமையான பாதிப்பில்லை என மாடனர்னா கூறுகிறது. அதனால், இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பெரிய அளவிலான பிரச்னை உருவாகவில்லை என்றும் நிறுவனங்கள் க்ளைம் செய்கின்றன.
சிக்கல்கள் என்ன?
இந்த அளவிலான வெற்றியை பார்மா துறையை சார்ந்தவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது உண்மை. ஆனால், இதில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. முதல் சிக்கல் இதுவரையிலான வழக்கமான தடுப்பூசிகளுக்கான முறை ஏற்கெனவே வெற்றி அடைந்தவை. அதாவது இறந்த செல் அல்லது வீரியம் குறைந்தவற்றை தடுப்பூசியாக செலுத்துவது என்பது காலம் காலமாக வெற்றி அடைந்த நடைமுறை. ஆனால் mRNA முறையில் தற்போதுதான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுகிறது. அதனால் இதனுடைய வெற்றியை இன்னும் சில காலத்துக்கு பிறகே நாம் கொண்டாட முடியும்.
95 நபர்களுக்கு அறிகுறிகளுடன் கோவிட் இருந்தது. எத்தனை நபர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் இருந்தது (asymptomatic), எதிர்ப்பு சக்தி உருவானவர்களில் இருந்து மற்றவர்களுக்கு பரவியதா இல்லையா என்னும் சோதனைகள் இன்னும் நடத்தப்பட வேண்டி இருக்கிறது.
அதனால், ஏற்கெனவே செய்யப்படும் சோதனையை நாம் உடைக்க முடியாது. இந்த சோதனை இன்னும் சில காலத்துக்காகவது தொடர வேண்டும். அதாவது 15,000 நபர்களுக்கு உண்மையில் தடுப்பூசி கொடுக்கவில்லை. அவர்களுக்கு இன்னும் சில காலத்துக்காவது எந்த உண்மையையும் தெரிவிக்காமல் இந்த ஆராய்ச்சியை தொடர வேண்டும். ஆனால், சமூக நலனுக்காக கலந்து கொண்டவர்கள் மீது இத்தகைய ரிஸ்க் எடுக்கலாமாக கூடாதா என்னும் நியாயமும் கலந்திருக்கிறது.
அடுத்தது இந்த தடுப்பூசிகள் -70 டிகிரி செல்சியஸில்தான் பதப்படுத்த முடியும். அதனால், இந்தியாவில் இந்த தடுப்பூசியை உடனடியாக நாம் கொண்டுவருவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
அடுத்து, ஒரு தடுப்பூசி மட்டுமே போதுமா என்னும் கேள்விக்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை. முதல் முறை தடுப்பூசி, அடுத்த சில வாரங்களுக்கு பிறகு பூஸ்டர் கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் இவை எத்தனை காலத்துக்கு பலன் அளிக்கும் என்னும் சோதனையை இன்னும் செய்ய வேண்டி இருக்கிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ஃப்ளு வாக்ஸின் ஆண்டுக்கு ஒருமுறை போட்டுக்கொள்வார்கள். இந்த தடுப்பூசி எத்தனை காலத்துக்கு ஒருமுறை என்னும் கேள்விக்கும் விடைகிடைக்கவில்லை.
இப்போதைக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு எந்தவிதமான பெரிய பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் இதுவரை வழக்கமான முறையிலே ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. Gennova Biophar என்னும் இந்திய நிறுவனம் mRNA ஆராய்ச்சியில் அடுத்தகட்டத்துக்கு சென்றிருக்கிறது.
மருத்து பிரிவில் வெற்றியில்லை
கோவிட் வந்ததில் இருந்து தடுப்பூசி மட்டுமே தீர்வு என்பதால் தடுப்பூசி பிரிவில் பெரிய கவனமும் முதலீடு ஆராய்ச்சியும் தொடர்ந்தது. ஆனால் கோவிட் வந்த பிறகு அதற்கு என்ன சிகிச்சை என்று கேட்டால் அந்தக் கேள்விக்கான விடை ஏதும் இல்லை என்றே சொல்ல வேண்டும். பல மருத்து தயாரிப்பு நிறுவனங்கள் இதற்கான பணியில் ஈடுபட்டுவந்தாலும் இதுவரை பெரிய வெற்றி கிடைக்கவில்லை.
காரணம் கோவிட்டை தடுப்பது எளிதாக இருக்கிறது. ஆனால், அந்த நோய் வந்த பிறகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் வந்த பிறகு அதனை குணப்படுத்தில் இன்னும் தீர்வு கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது.
கோவிட் வந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்ட பலர் உள்ளனர். சிலருக்கு இந்தத் தொற்று ஏற்படவே இல்லை. அதாவது சிறிய குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் வந்து மற்றவர்களுக்கு வராமல் இருந்திருக்கும். அவர்களுக்குள் சமூக இடைவெளியோ அல்லது சரியான முறையிலான சுத்திகரிப்பும் வாய்ப்பு இல்லை. இருந்தும் மற்றவர்களுக்கு வரவில்லை. ஒருவருக்கு எப்படி இரண்டாம் முறை வருகிறதோ அதேபோல சிலருக்கு வருவதே இல்லை.
- வாசு கார்த்தி